186
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கட்சியின் தேசிய அமைப்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தலில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவை இன்று (13.12.2017) புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தாக்கல் செய்தனர். சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் யாழ் மாவட்டச் செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்துக்குச் சென்ற கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்தபின் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கட்சியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன்,“நாங்கள் சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருக்கின்றோம். சாவகச்சேரி நகரசைபையில் மிகக் கடுமையான போட்டியினைக் கொடுப்பதாற்கு எமது வேட்பாளர்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றார்கள் . நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம். அந்த மாற்றத்தைத் தரக்கூடிய சிறந்த வேட்பாளர்களை நாங்கள் தெரிவுசெய்திருக்கின்றோம். ஊழலற்ற ஒரு நகரசபையினை உருவாக்கி நாங்கள் நிர்வகிக்கவேண்டும் என்ற விருப்பத்திற்கமைவாக வேட்பாளர்களை இனங்கண்டு தெரிவுசெய்திருக்கின்றோம்.
இத் தேர்தலை வெறுமனே உள்ளூராட்சித் தேர்தலாகக் கடந்துவிட முடியாது. ஒரு புதிய அரசியல் யாப்பு மாற்றத்துக்கான இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒற்றையாட்சியே வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த ஒற்றையாட்சியை நிராகரிக்கக் கோருகின்ற ஒரு நாடிபிடித்துப் பார்க்கக் கூடிய ஒரு தேர்தலாகவே இந்தத் தேர்தல் அமைந்திருக்கின்றது.
ஒற்றையாட்சியை நிராகரிக்கவேண்டும் என்ற விடயத்தையும் இந்தத் தேர்தலின் ஊடாக நாங்கள் எடுத்துக்கூறவேண்டும். இந்த அரசியலமைப்பு மாற்றத்துக்கான இடைக்கால அறிக்கையை ஆதரித்து ஒரு தரப்பு களமிறங்கியுள்ளது உங்களுக்குத் தெரிந்த விடயம். எங்களைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எங்கள் கோசமாக இருக்கப்போவது ஒற்றையாட்சியை நிராகரிப்பதாயின் எங்களுக்கு வாக்களியுங்கள் என்பதுதான். ஒற்றையாட்சியை மக்கள் நிராகரிக்கப்போகின்ற முதல்கட்ட ஒரு வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தல் பார்க்கப்படும்” – என்றார்.
Spread the love