இலங்கை பிரதான செய்திகள்

தேசத்தின் குரலில் கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யும் அஞ்சலியாக இருக்கும்

யாருக்கு அதிக ஆசனம் யாருக்கு குறைந்த ஆசனம் என நாங்கள் ஆசனங்களுக்காக தேர்தல் அரசியலுக்குள் முடங்கிப்போய்விடுவதானது அன்ரன் பாலசிங்கம் ஐயா வாழ்க்கை அவருடைய தியாகம் அவர் எங்கக்குச் செய்த பங்களிப்பு, வழிகாட்டல் அனைத்தையும் வீணடிப்பதாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்போதய அரசியல் சூழல்களைப் புரிந்துகொண்டு தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் பின்பற்றிய கொள்கைப்படி நடப்பதுதான் தமிழ்த் தேசம் அவருக்குச் செய்யக்கூடிய அஞ்சலி  என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் 11 அவது ஆண்டு நினைவுநாள் இன்று (14.12.2017) வியாழக்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் பசுந்தமிழன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ஐயாவின் திருவுருவப் படத்துக்கு மலர்மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
அதன்போது குறிப்பிட்ட அவர்,
“தமிழ்த் தேசியப் போராட்டம் தொடர்பாகவும் அதன் நியாயப்பாடுகள் தொடர்பாகவும் தத்துவங்கள் தொடர்பாகவும் பாலசிங்கம் ஐயாவின் பங்களிப்பு வேறு எவரும் கிட்ட நெருங்க முடியாத அளவிற்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் அவருடைய பங்களிப்பு அந்தளவு தூரம் என்றால் தேசத்துக்கான அவரது பங்களிப்பு எந்தளவு தூரம் என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். பாலசிங்கம் ஐயாவின் இழப்பானது நிச்சயமாக எங்களுடைய தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுசெய்யப்பட முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.
அவரோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றபொழுது அறிவுரீதியாக எங்களுக்கு சவாலான ஒரு காலகட்டத்தில் எங்களுக்கு வழிகாட்டல் செய்யக்கூடிய அளவிற்கு பாலபாலசிங்கம் ஐயா போன்று ஒப்பிட்டுப் பார்க்கக்கூடிய இன்னொருவர் மாமனிதர் சிவராம் அவர்கள்.
இப்படிப்பட்ட நபர்களை எங்களுடைய சரித்திரத்தில் முக்கியமாக கட்டத்தில் நாங்கள் இழக்கவேண்டி வந்தது தான் வாக்குகைளைப் பெற்ற எங்கள் தரப்புக்கள் திசைமாறிப் போய் செயற்படக்கூடிய அளவிற்கு நிலமைகளை உருவாக்கியிருக்கின்றது.
உண்மையில் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவுகள் அடைந்திருந்தாலும் அரசியல் ரீதியாக எங்களுக்கு வழிகாட்டுவதற்கு திரு பாலசிங்கம் போன்றவர்கள் இருந்திருந்தால் இன்று நிலமைகள் வேறாக இருந்திருக்கும்.
துரதிஸ்டவசமாக ஆயுதப் போராட்டம் சாவாலை ஏற்படுத்திய காலகட்டத்தில் அவருடைய அறிவையும் நாங்கள் இழக்கவேண்டியதாகிவிட்டது.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து எங்களுடைய அரசியல் கலாச்சாரமானது மிகத் தெளிவாக ஒரு கொள்கை சார்ந்த கலாச்சாரமாகவே இருந்திருக்கின்றது. கொள்ளை நீதியாக நாங்கள் எந்த ஒரு இடத்திலும் விட்டுக்கொடுப்பதற்குத் தயாராக இல்லை. இன்று கொள்ளை ரீதியாக பிழையாக சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தேசத்தை விற்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கும் நிலையில் அவர்களை இனங்கண்டு அவர்களுடைய உண்மையான முகங்களை தமிழ்த் தேசத்தவர்களுக்குக் காட்டி பாலசிங்கம் ஐயாவினன் கருத்துக்களையும் சுட்டிக்காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தளவு தூரத்துக்கு விலைபோயிருக்கின்றது என்பதைக் காட்டி அவர்களை ஓரங்கட்டுகின்ற அதேநேரம் மறுபக்கத்தில் நாங்கள் சரியான நேர்மையான, கொள்கையில் உறுதியான நிலைப்பாட்டுடன் ஒரு தெளிவான அரசியலை உருவாக்குவோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிழை செய்கிறார்கள் என்பதற்காக அவர்களைத் தோற்கடிப்பதற்காக கொள்கைகளைக் கைவிட்டு எவருடனும் சேர்ந்து இயங்குவதில் எந்தவிதபிரியோசனமும் இல்லை. அதனால் தான் எங்களுக்கு நெருக்கடியான நிலைகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களிலும் எமது முயற்சிகளைக் கைவிடாது நாங்கள் கொள்கைப்படி பயணிக்கின்றோம். தொடர்ந்தும் கொள்கைக்காகவே பயணிப்போம் என பாலசிங்கம் ஐயாவின் நின்றைய நினைவுநாளில் உறுதிஎடுத்துக்கொள்வோம்” – என்றார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

 • வாக்காளர்களுக்குக் கூறியவை:

  1. சம்பந்தன் தேர்தலுக்கு முன்னர் கூறியது:

  2016 ஆண்டு இறுதிக்குள் அரசியல் தீர்வு வரும்.

  எம்மக்களுக்கான வெளிச்சம் தென்படத் தொடங்கியிருக்கிறது.

  நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வென்று கிடைக்கும்.

  அடுத்தமுறை (2017) தீபாவளிக்கிடையில் இவ்வெளிச்சம் நிரந்தரமானதாக அமையும்.

  2. சமீபத்தில் வேட்புமனுக்களை சமர்ப்பித்த பின்பு சம்பந்தன் கூறியது:

  மக்கள், இளைஞர்கள், பெண்களின் கருத்துக்களை அறிந்து பிரதேச சபை வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளோம்.

  உள்ளக சுயநிர்ணய உரிமையை உள்ளடக்கிய அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம்.

  இன்றைய சூழலில் மக்களின் தீர்மானம் மிகவும் உறுதியாக வெளிவர வேண்டியது அவசியம்.

  மக்கள் ஓரணியில் திரண்டு தமிழரின் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும்.

  3. அண்மையில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த பின்னர் ஆனந்தசங்கரி தெரிவித்தது:

  சம்பந்தன், சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோர் அரசியலில் இருந்து விலகினால்தான், தமிழர்களுக்கு விடிவு ஏற்படும்.

  கடந்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருந்தும், பதவி எடுக்க, பதவி காக்க, சுயலாபம் அடைய, தர்க்கரீதியான காரணங்களைக் காட்டி, வேறு ஏதாவது நம்பக்கூடியதாகச் சொல்லி, வாக்காளர்களை ஏமாற்றி, தேர்தலில் வாக்குகளைப் பெற்று, வெற்றி அடைந்து, தங்கள் வாழ்க்கையை திறம்பட நடத்தலாம் என்று தமிழ் அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். இதனால் தமிழர்களின் உரிமைகள் பெறப்படவில்லை. இந்த சூழ்நிலையை மாற்றி எங்கள் உரிமைகளை வென்றெடுக்க நேர்மையான, அர்ப்பணிப்புள்ள மற்றும் திறனுள்ள தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

  தமிழர்கள் செழிப்புற வாழ வேண்டும் என்ற விதி இருந்தால் ஒரு நாள் அத்தகைய தலைவர்கள் வெளிப்படுவார்கள் என்று நினைக்கின்றேன்.
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers