இந்திய அளவில் டெங்கு பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் 21,350 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்துள்ளது நிலையில் பலர் சரியான சிகிச்சையின்றி உயிரிழந்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் 10 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
2016ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 531 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 21 ஆயிரத்தைத் தாண்டியிருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஆண்டில், 1,50,482 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரளாவில் மட்டும் 19 ஆயிரத்து 695 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்குவால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கின்றது எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தடுப்பு நடவடிக்கைகளையும் அதிகரிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது