முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்குள், இனந்தெரியாத காய்ச்சல் காரணமாக, 9பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக கொழும்பில் இருந்து வைத்தியக் குழு ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுத்து வரப்படுவதாகவும் தெரிவிக்க்பபட்டுள்ளது.
முல்லைத்தீவு நகரப் பகுதியைச் சேர்ந்தவர்களே இந்தக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர் எனவும் தொடர்ச்சியான காய்ச்சலின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் வட மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கொழும்பு தொற்று நோய் தடுப்புப் பிரிவு மற்றும் ஆய்வகத்தின் கவனத்துக்கு சுகாதாரத் திணைக்களம் கொண்டு சென்றது. இதையடுத்தே முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தடுப்பு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்தவகை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இருவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு நகரப் பகுதியில் பரவி வருகின்ற குறித்தகாய்ச்சல் காரணமாக, கடந்த மூன்று வார காலப் பகுதியில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ள நிலையில், இது தொடர்பில், மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற ஆய்வுகள் குறித்து உடனடி நடவடிக்கைகளையும், மேலும் இந் நோய் பரவாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளையும் உடன் எடுக்குமாறு, பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.