வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இளைஞர் யுவதிகள் வேலைவாய்ப்புகளில் மத்திய அரசைப் போன்றே, மாகாண அரசினாலும் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். இதற்கெதிராக எமது இளைஞர்கள் – யுவதிகள் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்த முயற்சிகள் மற்றும் போராட்டங்கள் மத்திய அரசைப் போன்றே மாகாண அரசினாலும் புறந்தள்ளப்பட்டிருந்த நிலையையே காணக்கூடியதாக இருந்தது.
இந்தநிலையில் மத்திய மற்றும் மாகாண ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்கள், வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளது முக்கியப் பிரச்சினையாகவுள்ள வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முன்வர வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் வடக்கு மாகாண இளைஞர், யுவதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது இவ்வாறு அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண இளைஞர், யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடந்த காலங்களில் நாம் இயன்றளவு நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். தொடர்ந்து நாம் அரசியல் அதிகாரத்தில் பலம் பெற்றிருந்தால் மேற்படி பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையிலான எமது நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடர்ந்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையினாலும் எமது இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினையை போதியளவு தீர்க்க முடியும். பல்வேறு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இருந்தும் அத்தகைய முயற்சிகள் ஏதும் இதுவரையில் நடைபெற்றிராததும் எமது இளைஞர்களது பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்
எமது மக்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினையைத் தீர்ப்பதானது, எமது இன உரிமையை அடகு வைப்பதாகாது. வேலைவாய்ப்பு என்பது எமது மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். எனவே, எமது இளைஞர்களது எழுச்சியானது தங்களது அடிப்படை மற்றும் ஏனைய உரிமைகளை மறுக்கின்ற – உதாசீனம் செய்கின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானதாகவே இருக்க வேண்டும்.
அது மத்தியானலும் சரி, மாகாணமானாலும் சரி. எங்கெங்கு எமது மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உரிமைப் போராட்டங்கள் எழ வேண்டிய நிலையினையே ஆட்சி அதிகாரங்களில் இருக்கின்றவர்கள் உருவாக்கி வருகின்றனர் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.