நாட்டையே பரபரப்புக்குள்ளாக்கிய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் ஆர்.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோரை விடுவிக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கி வழங்கியதில் 1.70 லட்சம் கோடி ரூபா முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆகியோரது மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி சந்தோலியா மற்றும் பெகுரா, கவுதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா, ஷாகீத் பால்வா உள்ளிட்டோர் மீதும், ரிலையன்ஸ், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் வயர்லெஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
டெல்லி சிபிஐ கோர்ட்டில் 6 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராஜாத்தியம்மாள், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்தனர். இந்த வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் வருகை தந்தார். லஞ்சம் மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் கீழ் இந்த வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பை வாசித்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். இதையடுத்து திமுகவினர் தமிழகத்திலும், டெல்லி நீதிமன்றம் முன்பும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் கட்சியினர் மீது போடப்பட்ட ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பது தற்போது நிரூபணமாகிவிட்டதாக தெரிவித்தனர்.
2ஜி அலைக்கற்றை வழக்கில் இருந்து ஆ ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த திமுக தொண்டர்கள் வெடி வெடித்துக்கும் முழக்கமிட்டும் கொண்டாடி வருகின்றனர்.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழி – ராசா – விடுவிப்பு…
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர் மு. கருணாநிதியின் மகளும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
காலை வேளையே சுப்பிரமணிய சாமி, ஆ ராசா ஆகியோ நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி தீர்ப்பு வழங்கினார்.
அரசுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் உற்று நோக்கி வந்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆ ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் வழக்கை தொடர்ந்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ ராசா, கனிமொழி மற்றும் கனிமொழியின் தாயார் ராஜாத்தியம்மாள் ஆகியோர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்துள்ளனர். கனிமொழியுடன் அவரது சகோதரரான அழகிரியும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். டிஆர் பாலு, திருச்சி சிவா, துரைமுருகன் உள்ளிட்டோரும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குவிந்துள்ளனர். 2ஜி வழக்கில் முக்கிய தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.