வில்பத்து விலத்திக்குளம் பகுதியில் சட்டவிரோத காடழிப்பு இடம்பெற்றுள்ளமை ஆய்வறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட விசேட ஆய்வின் இறுதியில் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தக் காடழிப்பு சம்பந்தமாக ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூழலியலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வில்பத்து காடழிப்பு சம்பந்தமாக ஆய்வு செய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவினால் தயாரிக்கப்பட்ட 136 பக்கங்களை கொண்ட ஆய்வு அறிக்கை அண்மையில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கையில், விலத்திக்குளம் காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும், வனப் பாதுகாப்பு ஜெனராலினால் 650 ஏக்கர் வனப் பிரதேசம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அந்த வனப்பகுதியை விடுவிப்பதற்கு வனப் பாதுகாப்பு ஜெனராலுக்கு அதிகாரம் இல்லை என்பதுடன், இந்த செயற்பாட்டில் அப்போதைய வர்த்தக வாணிபத் துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலையீடு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05ம் திகதி ரிஷாத் பதியுதீனின் தலைமையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் விலத்திக்குளம் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் இருந்து மீள் குடியேற்றித்திற்கு தேவையான காணியை விடுவிக்குமாறு வனப் பாதுகாப்பு ஜெனராலுக்கு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவருக்கு அவ்வாறு அறிவிக்கும் அதிகாரம் இல்லை என்றும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டியது யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களையே என்றும், எனினும் இங்கு காணிகள் வழங்கப்பட்டிருப்பது காணிகளை இழந்த மக்களுக்கு அல்ல என்றும் கூறப்பட்டுள்ளது.