யாழ்.முற்றவெளி பகுதியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்ய விடாது வடமாகாண முதலமைச்சரினால் தடுத்து நிறுத்தி இருக்க முடியும் என வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சி,தவராசா தெரிவித்துள்ளார்.
யாழ்.நாக விகாரை விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளி பகுதியில் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்கள் எதிர்க்கட்சி தலைவரை கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், விகாராதிபதியின் பூதவுடல் முற்றவெளி பகுதியில் தகனம் செய்யப்பட்டமை தொடர்பில் மக்களும், ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அந்த விடயத்தில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுவது தவறு. விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்யாமால் வடமாகாண முதலமைச்சர் மற்றும் யாழ்.மாநகர சபையினால் தடுத்து நிறுத்து இருக்க முடியும்.
பூதவுடல் தகனம் செய்யப்பட்ட பிரதேசம் தொல்லியல் திணைக்களத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம். அவர்கள் அதற்கு அனுமதியும் வழங்கி இருக்கலாம். ஆனால் இறந்த ஒருவரின் உடலை தகனம் செய்வதற்கு உள்ளூராட்சி சபையிடம் அனுமதி பெற்று இருக்க வேண்டும். அது தொடர்பான சட்ட ஏற்பாடுகள் உள்ளூராட்சியிடம் உள்ளது.
எனவே உள்ளூராட்சி அமைச்சர் எனும் வகையில் வடமாகாண முதலமைச்சரினால் அதனை தடுத்து இருக்க முடியும். அவர் தனது அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுத்து இருக்கலாம். யாழ்.மாநகர சபை அது தொடர்பில் நீதிமன்றை நாடி இருக்கலாம். ஆனால் அவை எதனையும் செய்யாது பிழைகளை நம்மிடத்தே வைத்துக்கொண்டு மற்றவர்களை குறை குற்றம் கூறுவது ஏற்புடையது அல்ல.
வெறுமென அறிக்கை விடுவதிலும் , கேள்விகளுக்கு பதில் அளித்துக்கொண்டு இருந்தால் போதாது, எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை குற்றம் குறை கூறிக்கொண்டு இருப்பதாலும் எந்த பயனும் இல்லை என தெரிவித்தார்.