ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் வீரகெட்டிய மற்றும் கட்டுவன பிரதேச நன்கொடையாளர்கள் மற்றும் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகத் மத்துகம உள்ளிட்டவர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவம் செய்த வீரகெட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஆரியதாச விக்கிரமசிங்க மற்றும் பொதுஜன முன்னணியில் வீரகெட்டிய பிரதேச சபைக்கு போட்டியிடவிருந்த வேட்பாளர் சுனித் ராமநாயக்க உள்ளிட்ட வீரகெட்டிய மற்றும் கட்டுவன பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரபல நன்கொடையாளர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று (27) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியை சந்தித்த இக்குழுவினர், நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதி அவர்களால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு தமது உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுத்தருவதாகவும் எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்து செயலாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் சுகத் மத்துகமகே இன்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து ஜனாதிபதி அவர்களால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் மஹிந்த பாத்தேகம இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் கட்சி மறுசீரமைப்புடன் அவரது ஆலோசனையில் மகிந்த தரப்பிப் இருந்து பலரை பிரித்தெடுக்கும் நகர்வுகள் தொடர்வதாகவும், மைத்திரி சந்திரிக்கா கூட்டு மகிந்த தரப்பிற்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.