கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசாங்கத்துடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு இணைந்தால் அவருக்கு ஊடகத்துறை சார்ந்த இராஜாங்க அமைச்சுப்பொறுப்பு வழங்கப்படலாம் என தென்னிலங்கை அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கனவே தாமரை மொட்டு சின்னத்திலான சிறிலங்கா பொதுமக்கள் முன்னணியில் அங்கத்துவத்தைப் பெறவேண்டுமென கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய பிரமுகரொருவர் விடுத்த கோரிக்கையை கெஹலிய ரம்புக்வெல்ல நிராகரித்திருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அண்மைக்காலமாக கூட்டு எதிரணியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபாட்டைக் குறைத்திருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை தவிர்த்து வந்தார்.
யுத்தகாலத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நெருக்கமாக இருந்த ஹெகலிய ஊடகத்துறை அமைச்சு, உள்ளிட்ட அமைச் சு பொறுப்புக்களை வகித்ததோடு, பாதுகாப்பு அமைச்சின் ஊடகபேச்சாளராகவும் இருந்தவர். 2015ன் அரசியல் தோல்வியுடன் தொடர்ந்து மகிந்த அணியோடு நெருங்கியிருந்த இவர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருந்ததோடு, MIT குறித்த விசாரணைகளையும் எதிர்கொண்ட நிலையில், இவருக்கு எதிரான அழுத்தங்களை தேசிய அரசாங்கம் குறைத்து வந்த நிலையில், தற்போது இணக்கப்பாட்டு அரசியலுக்குள் ஹெகலிய காலடி எடுத்து வைக்கத் தயாராவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.