Home இலங்கை “நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”

“நாங்கள் செய்த பாவம் விக்னேஸ்வரன் என்ற பெயரில் 5 ஆண்டுகளாக அனுபவிக்கிறோம்”

by admin


விக்னேஸ்வரனை முதலமைச்சர் ஆக்கியது 5 வருடத்துக்கு முன் நான் செய்த பாவம் என தமிழரசு கட்சி தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது மனக்குமுறலை வெளியிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வழிகாட்டலில் இலங்கை தமிழரசு கட்சியின் திட்டமிடலில் இடம்பெறும் நில அதிகாரமும் அதிகாரப்பகிர்வும் சிறப்பு பேருரை நிகழ்வு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா தலைமையில் நேற்று மாலை ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய மாவை சேனாதிராஜா,“தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். நாங்கள் செய்த பாவம் நீதியரசர் விக்னேஸ்வரன் என்ற பெயரில் ஜந்து ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். காரசாரமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை விக்னேஸ்வரன் கண்டிக்கின்றார். நாங்கள் விரைவில் வருவோம்.

இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என, கஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினைக்கு கண்டுவிடக்கூடாது என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

பேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அதோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பிற்காக காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார்.

நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய விடயங்களையும் அரசியல் விடயங்களையும் ஒழுங்காக சொல்லுவோம். கொஞ்சநாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வு முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் அதில் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும். அதனை அரசியல் அமைப்புக்கு பொருத்தமானது என்று ஏற்றுக் கொள்ளமாட்டோம் என்று தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.

அந்த விடயத்தில் நாங்கள் காத்திருக்க வேண்டும். அடுத்த ஜந்து ஆண்டுகள் வரைக்கும் அல்ல இந்த ஆண்டுக்குள் அரசியல் அமைப்பு விடயம், நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம். நிலம் வேண்டும் அந்த நிலத்தில்தான் எங்களுக்கு ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்.

நாங்கள் இதற்காக எதனையும் கேட்கவில்லை. இனப்பிரச்சனை தீர்விற்காக எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும் என்பதற்காக. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும். மகாவலி போன்ற திட்டங்களை வேண்டாம் என நாங்கள் நேரடியாக சொன்னோம். அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 31 ஆம் திகதிக்கு முன்னர் அபகரிக்கப்பட்டுள்ள தனியார் நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று சொன்னார். அதற்காக நாங்கள் ஒப்பந்தம் செய்யவில்லை. உடன்பாட்டுடன் செய்யப்படும் விடயங்கள். அரசியல் அமைப்பு வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா? நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தோமா?

இந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி? ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள. எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.

எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாக அடிபட்டு திரிகின்றார்கள். அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி வரும்” என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

2 comments

Siva October 21, 2018 - 2:12 pm

கடந்த 5 ஆண்டுகளுக்குத் திரு. விக்னேஸ்வரனை வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்தமை,
‘நாங்கள் செய்த பாவம்’, எனக் கூறும், /50 வருடங்களுக்கும் மேலான தமிழர் உரிமைப் போராட்ட வரலாற்றைக் கொண்ட, கடந்த 18 வருடங்களாகத் தொடர்ந்து பாராளுமன்றப் பிரதிநிதியாக இருக்கும்/ திரு. மாவை சேனாதிராஜாவை மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்தமைக்காகத் தமிழ் மக்களும் வருந்துகின்றார்கள், என்பதை அவர் அறியார் போலும்? சிங்களக் கட்சியைப் பதவியில் இருத்தி, அவர்களிடமிருந்து பெறக்கூடிய அத்தனையையும் பெற முயற்சி செய்யுங்கள், என்றுதான் நாமும் அவரை பாராளுமன்றம் அனுப்பினோம். கடந்த 3 வருடங்களில் அவர்கள் என்னத்தைப் பெற்றுக் கொடுத்தார்கள் அல்லது சாதித்தார்கள், என்பதை அவரால் கூற முடியுமா? எதிர்வரும் இரு வருடங்களுக்குச் சிங்களக் கட்சிகள் தமது இருப்பை உறுதி செய்யத்தான் தமது அதிகாரத்தைப் பயன்படுத்துவார்கள் என்பது, வெளிப்படை. ஆகையால் இனிமேல் அவர்களிடமிருந்து எதையும் எவராலும் பெற முடியாது, என்பதே உண்மை.

திரு விக்கினேஸ்வரன் சொல்லும்படியாக எதையும் செய்யவில்லை, என்று திரு. செல்வம் அடைக்கலநாதன் கூறுகின்றார். அவர் மட்டும் சொல்லும்படியாகத் தமிழர் பிரச்சனைகள் தொடர்பில் எதைச் சாதித்தார்? எதிரும் புதிருமான இரு கட்சிகளான UNP யும் SLFP தலைமையிலான கூட்டு முன்னணியுமிணைந்து, தமது அரசியல் இருப்பை உறுதிசெய்ய அமைத்த நல்லாட்சியிடமிருந்து எதையாவது பேரம் பேசிப் பெறுவார்கள் என்ற அற்பசொற்ப நம்பிக்கையில்தான் தமிழ் மக்கள் இவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்வு செய்தார்கள். எந்த மயில் என்றைக்குத் தானாக இறகு போட்டது? அடித்துப் பிடித்துப் புடுங்க வேண்டியவற்றைச், ‘சிங்களத்த தலைமைகள் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருவார்கள்’, என்று முட்டாள் தனமாகக் கனவு கண்ட இவர்கள், பிறர் முதுகில் அழுக்கைத் தேடுகின்றார்கள்? முதலில் தத்தமது முதுகு அழுக்கைக் கழுவிவிட்டு பிறர் முதுகைப் பார்க்கட்டும்.

Reply
Logeswaran October 22, 2018 - 1:46 pm

நில அதிகாரம், அதிகாரப்பகிர்வு தொடர்பாக சேனாதிராஜா கூறியது:

A. வேற்றுமையில் ஒற்றுமை காண மாவை சேனாதிராஜாவினால் முடியவில்லை:
1.சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள்.
2.நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம்.
3.கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.
4.அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
5.அவர் பற்றி ஒழுங்காக சொல்லுவோம்.
6.நாங்கள் விரைவில் வருவோம்.

B. தமிழ் தலைவர்களினால் அரசியல் தீர்வை எடுக்க முடியவில்லை:
1.பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
2.இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல.
3.நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம்.
4.திருத்தி அமைக்க வேண்டும்.
5.ஏற்றுக் கொள்ளமாட்டோம்.
6.காத்திருக்க வேண்டும்.
7.தீர்வு காணப்பட வேண்டும்.
8.தெளிவாக சொல்லி இருக்கின்றோம்.
9.ஆளுகின்ற உரிமை இருக்க வேண்டும்.
10.கடைசியாக வற்புறுத்திக்கொண்டு இருக்கின்றோம்.

C. தமிழர்களின் நிலத்தை பாதுகாக்க முடியவில்லை:
1.எங்கள் நிலங்கள் எங்கள் கையில் வரவேண்டும்.
2.மகாவலி போன்ற திட்டங்கள் வேண்டாம்.
3.நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
4.நேரடியாக சொன்னோம்.

தமிழ் அரசுக்குக் கட்சியின் தலைவர் என்ற முறையில் வேற்றுமையில் ஒற்றுமை காண, அரசியல் தீர்வை எடுத்துக் கொடுக்க, தமிழர்களின் நிலத்தை பாதுகாக்க, தமிழ் அரசுக் கட்சி இழந்த 180,000 வாக்குகளை திருப்பி எடுக்க, அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல முடியாத மாவை சேனாதிராஜா முதல் அமைச்சர் பதவியை எடுக்கத் துடிக்கின்றார்.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More