குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கில் இராணுவத்தினர் உற்பத்தி செய்யும் விவசாய உற்பத்திகளை பொது சந்தையில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் உறுதிப்படுத்தினால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
யாழில். உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகளை சிவில் உடைகளில் வந்து பொது சந்தைகளில் விற்பனை செய்கின்றார்கள் எனும் குற்ற சாட்டு முன் வைக்கப்பட்டு வருகின்றது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவ்வாறு இராணுவத்தினர் தமது விவசாய உற்பத்திகளை பொது சந்தைகளில் விற்பனை செய்வதனை ஆதாரத்துடன் முறையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயார் என தெரிவித்தார்.
அம்மாச்சியின் பெயரை மாற்றுவோம்.
அதேவளை வடக்கில் உள்ள ‘அம்மாச்சி’ உணவகத்தின் பெயரினை மத்திய அரசின் முன் மொழிவுடன் மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக தெரிவித்தார். அது தொடர்பில் தெரிவிக்கையில் ,
வடமாகாண சபை செய்த உருப்படியான திட்டம் ‘அம்மாச்சி’ உணவகம் தான் என பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. ஆனால் அது வடமாகாண சபையின் திட்டமல்ல மத்திய அரசின் ஊடாக நாட்டின் பல பாகங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட திட்டமாகும்.
அந்த திட்டத்தின் ஊடாக திருநெல்வேலியில் ஆரம்பிக்கப்பட்ட உணவகத்திற்கு மத்திய அரசு பெயர் வைக்க முற்பட்ட போது , அதற்கு வடமாகாண சபை இடையூறாக இருந்தமையால் பெயர் வைக்க முடியவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் மாகாண சபையின் ஆயுள் காலம் முடிவடைந்தவுடன் மத்திய அரசால் முன் மொழியப்பட்ட ‘கொல பொஜன ‘ எனும் பெயரை அல்லது அதற்கு ஏற்ற தமிழ் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.
1 comment
அம்மாச்சி உணவகத்தின் பெயரை மாற்ற,’ அண்ணன் எப்போது போவான், திண்ணை எப்போது காலியாகும்’, என்பது போலத் திரு. அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாண சபை கலைக்கப்படும் நாளுக்காகக் காத்திருக்கின்றார் போலும்?
இன்று வடக்கு மக்களுக்கு உள்ள ஒரேயொரு பெரிய பிரச்சனை, விவசாய பிரதி அமைச்சர் அறிந்த வரையில், ‘உணவகத்தின் பெயரை மாற்றுவதை விட வேறென்ன இருக்கிறது’?
விவசாயிகள் தமது விளைநிலத்தில் இராணுவத்தின் கூலிகளாக வேலை செய்வதைப் பார்த்துப் பெருமைப்படும் ஒரேயொரு மக்கள் பிரதிநிதி திரு. அங்கஜன் இராமநாதனாகத்தான் இருப்பார்.