கிரிக்கெட் உலகின் பல பிரபல வீரர்கள் ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டதாக அல்ஜசீரா குற்றம் சுமத்தியுள்ளது. இங்கிலாந்து அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் இவ்வாறு ஆட்ட நிர்ணய சதி முயற்சியில் ஈடுபட்டனர் என அல்ஜசீரா தெரிவித்துள்ளது. 2011 முதல் 2012 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணய சதிகள் குறித்த பட்டியலையும் அல்ஜசீரா வெளியிட்டுள்ளது.
இந்தியாவை சேர்ந்த ஆட்டநிர்ணயசதியில் ஈடுபடும் நபர் ஒருவர் ஆட்டநிர்ணய சதி தொடர்பில் முக்கிய புள்ளி என கருதப்படும் நபர் ஒருவருடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை அடிப்படையாகவைத்தே அல்ஜசீரா இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
குறித்த 26 சூழ்நிலைகள் குறித்து எதிர்வுகூறலை வழங்கியுள்ள போதிலும் அதில் ஒன்று மாத்திரமே சாத்தியமாகியுள்ளது எனவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த வீரர்கள் சிலர் ஏழு போட்டிகளிலும் அவுஸ்திரேலிய வீரர்கள் ஐந்து போட்டிகளிலும்,பாகிஸ்தானை சேர்ந்த வீரர்கள் மூன்று போட்டிகளிலும் ஏனைய அணிகள் ஆகக்குறைந்தது ஒரு போட்டியிலாவது ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டனர் எனவும் அல்ஜசீரா தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை சிம்பாப்வே அணிகளிற்கு இடையில் 2012 இல் இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கிண்ணப்போட்டியிலும் ஆட்டநிர்ணய சத முயற்சிகள் இடம்பெற்றதாக அல்ஜசீரா தெரிவித்துள்ளது.