குளோபல் தமிழ் செய்தியாளர்
இலங்கையின் புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியேற்றிருப்பது மனித உரிமைகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மகிந்த ராஜபக்வின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவ் அமைப்பு தெரிவித்தது.
பிரதமர் ரணிலை திடீரென பதவி நீக்கியதும் அது பற்றி நாடாளுமன்றத்திற்கோ அமைச்சரவைக்கோ அறிவிக்காமையும் அரசியல் அமைப்பையும் நாடாளுமன்ற நடைமுறைகளையும் மீறும் செயல் என்றும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது
கடந்த காலத்தில் ராஜபக்ச இழைத்த குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாத சூழலில் மீண்டும் அவர் அதிகாரத்திற்கு வந்திருப்பது, இலங்கையின் மனித உரிமை நிலவரத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமையை கரிசனை கொள்ள வேண்டியுள்ளதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குனர் பிரட் அடம்ஸ் தெரிவித்தார்.
ராஜபக்ச அரசாங்கம் இழைத்த யுத்தக் குற்றங்களுக்கு நீதி வழங்க தற்போதைய அரசாங்கம் தவறியுள்ளமை காரணமாக, கடந்த காலத்தில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.