மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது -ஊடகவியலாளரும் மிரட்டப்படார்..
வல்வெட்டித்துறையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் ஒருவரை காவற்துறையினர் அழைத்து மிரட்டி எச்சரித்து உள்ளனர்.
வல்வெட்டித்துறை தீருவிலில் கடந்த வருடம் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஒழுங்கமைத்த குழுவினரை சேர்ந்தவர்களை வல்வெட்டித்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி தொலைபேசி ஊடாக விசாரணைக்கு வருமாறு இன்றைய தினம் செவ்வாய்கிழமை காவற்துறை நிலையத்திற்கு அழைத்திருந்தார்.
அதன் பிரகாரம் அங்கு சென்ற ஏற்பாட்டு குழு இளைஞர்களை கடந்த வருடம் நீங்கள் தான் மாவீரர் நாள் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து இருந்தீர்கள். இந்த வருடம் நிகழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்ய கூடாது. இம்முறை நிகழ்வுகளை ஏற்பாடு செய்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனைக்கு ஆளாக வேண்டி வரும். உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என அச்சுறுத்தும் வகையில் மிரட்டினார் என விசாரணைக்கு அழைக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை வல்வெட்டித்துறை பிரதேச ஊடகவியலாளரையும் இன்றைய தினம் அழைத்த பொறுப்பதிகாரி மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி அறிக்கையிட கூடாது எனவும் மிரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.