Home இலங்கை அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும் – பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட…

அரசியலமைப்பு வியாக்கியானமும் அரசியலும் – பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட…

by admin

இலங்கை ஜனாதிபதி தனது பிரதமரை பதவிநீக்கம் செய்துவிட்டு அவரின் இடத்துக்கு இன்னொருவரை நியமித்த நடவடிக்கை முறைமைத்தகுதியே இப்போது நாட்டில் தீவிரமாக விவாதிக்கப்படுகின்ற பெரும் முக்கியத்துவமுடைய ஒரு பிரதான விவகாரமாகும்.

தனது நடவடிக்கை முற்றுமுழுதாக அரசியலமைப்புக்கு இசைவானதே என்று ஜனாதிபதி உரிமைகோரியிருக்கிறார்.மேலும் அவர் அக்டோபர் 26 அந்த நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னதாக சட்ட ஆலோசனையைப் பெற்றதாகவும் கூறியிருக்கிறார்.

பதவிநீக்கப்பட்ட தனது பிரதமரைப் போன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புச் சட்டத்துடன் பரிச்சயத்தையோ அறிவையோ கொண்டவரல்ல.எனவே அவர் தான் எடுக்க உத்தேசித்த நடவடிக்கை குறித்து சட்டத்துறையில் தொழில்சார் பின்னணியையும் நிபுணத்துவத்தையும் கொண்ட ஆலோசகர்களிடமிருந்து விளக்கங்களைப் பெற்றமை அவரைப் பொறுத்தவரை முற்றிலும் சரியானதே.

பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு புதிய ஒருவரை அந்தப் பதவியில் நியமிப்பதற்கு அரசியலமைப்பின் பிரிவு 42 (4) ஐ பயன்படுத்துவது சட்டப்படி சரியானதே என்று ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் போலத் தோன்றுகிறது.

விழுமியக் கட்டமைப்பு

பிரதமர் ஒருவரை தனது விருப்பப்படி பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்தின் கீழான உறுப்புரை 42(4) அதிகாரமளிக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

அந்தப் பிரிவு தற்போது பொதுவெளியில் நன்கு தெரிந்ததாக இருப்பதால் அதை விபரிப்பதை நான் தவிர்க்கிறேன்.ஆனால்,19 வது திருத்தத்தின் ஒரு பகுதியாக இருக்கின்ற அந்தப் பிரிவின் சொல்லாட்சியும் இலங்கையில் இப்போது நடைமுறையில் இருக்கின்ற அரசியலமைப்பு விழுமியக் கட்டமைப்பும் பிரதமரைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கவில்லை.

42(4) பிரிவின் பிரயோகம் குறித்து ஜனாதிபதிக்கு அவரின் சட்டநிபுணர் குழுவினர் இரு அடிப்படைகளின் மீது ஆலோசனையை வழங்கியிருக்கிகிறார்கள் போலத் தெரிகிறது. முதலாவது, பிரதமரை நியமிக்கும் அதிகாரத்தைக்கொண்டவர் என்ற தகுதியின் காரணமாக ஜனாதிபதி அவரைப் பதவிநீக்கவும் பொருள்கோடல் கட்டளைச்சட்டம் ( Interpretation Ordinance )இடமளிக்கிறது என்ற அடிப்படை.

இரண்டாவது, 1978 அரசியலமைப்பு மூலப்படிவத்திலும் பிறகு அதற்குக் கொண்டுவரப்பட்ட 18 வது திருத்தத்திலும் முன்னர் இருந்த ஏற்பாட்டை மாற்றியமைத்த 19 வது திருத்தத்தின் ஒட்டுமொத்தமான கோட்பாட்டு மற்றும் நிறுவனரீதியான கட்டமைப்பு மேற்கூறப்பட்ட பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செயற்படுத்துவதுடன் தொடர்பற்றது என்ற அடிப்படை.

நிபுணர்கள் மத்தியில் இதுவரையிலான விவாதங்களில் ஜனாதிபதியின் நடவடிக்கையை நியாயப்படுத்துவதில் பலவீனமான வாதங்களையும் அவரின் நடவடிக்கையின் அரசியலமைப்புத் தகுதியைக் கேள்விக்குள்ளாக்கும் வலிமையான வாதங்களையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதிக்கு ஆதரவான வாதங்கள் அரசியலமைப்பின் ஒரு சில பிரிவுகளின் நம்பகத்தன்மையற்ற — சந்தேகத்துக்கிடமான வியாக்கியானங்களை அடிப்படையாகக் கொண்டவையாக இருக்கின்றன.அவை அரசியலமைப்பின் பிரிவுகளின் வெளிப்படையான பொருள் விளக்கத்தையும் கோட்பாட்டு வழியிலான வியாக்கியானங்களுக்கு வகைசெய்யும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் முற்றுமுழுதாக அலட்சியம் செய்கின்றன.

கட்சி அரசியல் சார்பு வியாக்கியானங்கள்

அரச அதிகாரத்தைக் கைப்பற்றி அதைத் தக்கவைப்பதில் உறுதியான நோக்கம் கொண்ட அரசியல் வர்க்கத்தின் ஒரு பகுதியினரால் கட்சி அரசியல் சார்பான வியாக்கியானங்களுக்கு அரசியலமைப்பின் முக்கியமான பிரிவுகள் உட்படுத்தப்படுகின்ற ஒரு சூழ்நிலையை இப்போது காணக்கூடியதாக இருக்கிறது.அவர்களைப் பொறுத்தவரை அரசியலமைப்பு என்பது தங்களது இலக்கை அடைவதற்கான ஒரு வழிவகையே தவிர, ஜனநாயக அரசியல் சமுதாயமும் அதன் பிரஜைகளும் போற்றிப்பேண வேண்டிய நியமங்களினதும் விழுமியங்களினதும் ஒரு கருத்துருவம் அல்ல.

அரசியல் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகள் மத்தியில் அதிகாரப் போராட்டங்கள் இடம்பெறுகின்ற நேரங்களில் அரசியலைத் தொழிலாகக் கொண்டவர்களினதும் அவர்களின் சட்டத்தரணிகளினதும் விருப்பு வெறுப்புகளுக்கும் குறுகிய கால நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் இரையாகுவது அரசியலமைப்பின் சொல்லாட்சியும் பிரிவுகளும் மாத்திரமல்ல, சாதாரண மக்களின் வாழ்வில் அரசியலமைப்பை அர்த்தமுடையதாக்குவதும் பொருத்தமானதாக்குவதுமான நியமங்களும் பண்புகளும் கூடத்தான்.

இரையாகும் அரசியலமைப்பு

தற்போதைய அதிகாரப் போராட்டம் நாட்டின் அரசியலமைப்பையும் அதில் உட்பொதிந்துள்ள ஜனநாயக விழுமியங்களையும் பிரதானமக இரையாக்குகின்றது. எனவே அரச அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்களினால் தோற்றுவிக்கப்படுகின்ற சர்ச்சைக்குரிய அரசியல் சூழ்நிலைகளில் அரசியலமைப்பின் பிரிவுகளை வியாக்கியானம் செய்யும் பொறுப்பும் அவற்றைப் பிரயோகிக்கும் முறைகள் பற்றி விளக்கும் பொறுப்பும் முற்றிலும் பக்கச்சார்பற்றவர்களை உள்ளடக்கிய அமைப்புகளிடம் ஒப்படைக்கப்படுவது அவசியமானதாகும்.கோட்பாட்டு அடிப்படையில் நோக்குகையில் அது உச்ச நீதிமன்த்தின் பணியாகும்.

ஆனால், இலங்கையில் தற்போதைய அதிகாரப் போராட்டத்தின் தன்மை அடிப்படையில் அதிகாரத்தைப் பற்றிய அரசியல் தகராறு ஒன்றைத் தீர்த்துவைப்பதற்கு மிகவும் பொருத்தமான அரங்கமாக நீதிமன்றம் இருக்கமுடியுமா என்ற கேள்வியைக் கிளப்புகிறது.நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினருமே தற்போது வெளிக்கிளம்பியிருக்கும் அரசியலமைப்பக் கேள்விகளுக்கு தீர்மான விளக்கம் ஒன்றைப் பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதில் விருப்பமில்லாதவர்களாக இருப்பதால், அந்த நெருக்கடிக்குத் தீர்வுகாணும் பொறுப்பு தொடர்ந்து அதிகாரச்சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அரசில்வாதிகளிடமே விடப்பட்டிருக்கிறது.

பாராளுமன்றத்தில் பெரும்பாலான எம்.பி.க்கள் பதவியில் இருந்த பிரதமர் நீக்கப்பட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதை அங்கீகரிக்கும் பட்சத்தில், அதனால் சந்தேகத்துக்குரிய இரு சாத்தியப்பாடுகள் தோன்றும்.அதாவது நடைமுறையில் இருக்கும் 19 வது திருத்தத்தின் ஆத்மார்த்த நோக்கங்கள் சகலவற்றையும் மீறுகின்றவகையில் அரசியலமைப்பின் முக்கியமான பிரிவு ஒன்றுக்கு பொருள் விளக்கம் கட்டமைக்கபபடும்.

இரண்டாவது, புதிதாக நியமிக்கப்பட்டிருப்பவர் உட்பட எந்தவொரு பிரதமரும் அல்லது வேறு எந்தவொரு அமைச்சரும் தங்களை தனக்கு கீழ்ப்பணிவானவான அரசாங்க உத்தியோகத்தர்களாக இருக்கவேண்டியவர்கள் என்று எதிர்பார்க்கின்ற ஜனாதிபதியினால் தன்னிச்சையாக பதவியில் இருந்து நீக்க்ப்படக்கூடிய ஆபத்தான முன்னுதாரணம் ஒன்று வகுக்கப்பட்டுவிடும்.

இந்த புதிய பொருள் விளக்கம் இறுதியில் சகல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் தங்களை நியமிக்கின்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் தயவிலேயே பதவியில் இருக்கவேண்டிய நிலைக்கு வழிவகுக்கும்.இது இலங்கையின் நிறைவேற்று அதிஙகார ஜனாதிபதி ஆட்சிமுறையை சீர்திருத்தத்திற்குள்ளாக்குவதற்கு 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட செயனமுறைகளை மறுதலையாக்குவதாகவே இருக்கும்.

ஜே.ஆர்.ஜெயவர்தனவினதும் மகிந்த ராஜபக்சவினதும் பழைய அரசியலமைப்புச் சூழ்ச்சித் திட்டங்களின் முக்கியமான அம்சங்களை மைத்திரிபால சிறிசேன மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவே இது முடியும்.ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் இடையே புதிய அதிகாரச்சண்டைக்கான முன்னோடியாக இது அமைந்துவிடாதா? புதிய பிதமரைப் பொறுத்தவரை அரசியல் அதிகாரம் தொடர்பிலான அவரின் விளக்கப்பாடு ஜனாதிபதி சிறிசேனவின் விளக்கப்பாட்டிலிருந்து மிகவும் வேறுபட்டதாகும்.

பாராளுமன்றம் கூட்டப்படும் திதகி குறித்து இப்போது பல வதந்திகள் உலவுகின்றன. தற்போதைய நெருக்கடியில் சம்பந்தப்பட்டவர்களுக்கிடையில் எத்தகைய இணக்கப்பாடுகள், விட்டுக்கொடுப்புகள் ஆராயப்படுகின்றனவே எமக்குத் தெரியாது. (வீரகேசரி)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More