இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதி சிறிசேனவின் இரண்டாவது சதிப்புரட்சி – காரணங்களும் இலக்கங்களும்…

கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐந்து வருடகால இடைவெளிக்குள் இரண்டாவது அரசியல் சதிப்புரட்சியில் பங்காளியாகியிருக்கிறார்.

முதலாவது சதிப்புரட்சியில் அவர் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து வெளியேறி 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்டார்.அதை ராஜபக்சவும் அவரது விசுவாசிகளும் துரோகத்தனமான செயல் என்று கருதினர்.

தற்போதைய சதிப்புரட்சி 26 அக்டோபர் 2018 அன்று ஜனாதிபதி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்ததையடுத்து அரங்கேறியிருக்கிறது.அவரின் இந்த நடவடிக்கை இலங்கையில் எனக்கு தெரிந்த அனேகமாக சகலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சிறிசேன 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறுபான்மையினத்தவர்களினதும் வாக்குகளின் ஆதரவுடனேயே வெற்றிபெற்றார்.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகள் ராஜபக்சவுக்கே கிடைத்தன.அதனால் சிறிசேன தங்களுக்கு துரோகமிழைத்துவிட்டார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஆத்திரமடைவதற்கு காரணங்கள் இருக்கின்றன.

ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கை இலங்கையில் அரசியல் நெருக்கடியொன்றைத் தோற்றுவித்திருக்கிறது.நாட்டில் இப்போது இரு பிரதமர்கள் இருக்கிறார்கள்.பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கே இருப்பதால் தானே சட்டபூர்வமான பிரதமர் என்று ரணில் விக்கிரமசிங்க உரிமைகோரிக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது..வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்களின் ஆதரவு தனக்கே இருப்பதாக அவர் வாதிடுகிறார்.இந்த பிரச்சினை இந்த நேரத்தில் நாட்டுக்கு அநாவசியமான ஒரு நெருக்கடியையும் உறுதிப்பாடின்மையையும் தோற்றுவிக்கக்கூடிய ஆபததைக் கொண்டுள்ளது.

காரணம் ?

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவிநீக்கிவிட்டு ராஜபக்சவைப் பிரதமராக நியமித்ததற்கான காரணத்தை விளக்கிய ஜனாதிபதி சிறிசேன ஐக்கிய தேசிய கட்சி ஊழல்தனமானது என்றும் தேசவிரோத நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்கிறது என்றும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.ஐக்கிய தேசிய கட்சியினருக்கும் அவர்களின் தலைவர் விக்கிரமசிங்கவுக்கும் இடையே பிளவை உருவாக்கவும் சிறிசேன முயற்சித்தார்.நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்ட இந்த அம்சம் ஐக்கிய தேசிய கட்சியை பிளவுபடுத்துவதற்கு நன்கு சிந்தித்து தீட்டப்பட்ட தந்திரோபாயமாக இருக்கிறது.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்படக்கூடிய ஒரு பிளவு பாராளுமன்றத்தில் ராஜபக்ச பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு மிகவும் உதவியாக அமையக்கூடியதாகும்.ஜனாதிபதி என்ற வகையில் தன்னால் விக்கிரமசிங்கவுடன் பணியாற்றமுடியவில்லை என்றும் சிறிசேன கூறியிருக்கிறார்.ஆகவே அவரைப் பதவிநீக்கம் செய்யவேண்டிய தேவையைத் தனக்கு ஏற்படுத்தியது என்பது ஜனாதிபதியின் வாதம்.

அமைச்சரவைக்கு தலைமை தாங்குவதற்கு ராஜபக்சவை நியமித்ததற்கான காரணத்தை சிறிசேன விளக்கிக்கூறவில்லை.அதை விளக்குவதென்பது அவரைப் பொறுத்தவரை பெரும் அசௌகரியத்துக்குரிய ஒரு காரியமாக இருந்திருக்கும்.ஏனென்றால் ராஜபக்ச சுத்தமான ஒரு மாற்றுத் தெரிவு என்றும் அவருடன் சுமுமாக — சுலபமாக தன்னால் பணியாற்றமுடியும் என்றும் முகத்தை நிமிர்த்தி ஜனாதிபதியினால் கூறமுடியவில்லை.ராஜபக்சவை எதேச்சாதிகாரி என்றும் ஊழல்பேர்வழி என்றும் குடும்ப அரசியல் ஆதிக்கவாதி என்றும் குற்றஞ்சாட்டுக்களை முன்வைத்துக்கொண்டே 2015 ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன மக்களிடம் வாக்குக் கேட்டார்.

மறுபுறத்தில் , அழிவில் இருந்து நாட்டைக்காப்பாற்றுவதற்காகவே மீண்டும் அரசாங்கத்தைப் பொறுப்பேற்றதாக ராஜபக்ச கூறியிருக்கிறார்.வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பொருளாதார வீழ்ச்சி, இலங்கை நாணயப் பெறுமதி இறக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கும் ராஜபக்ச அவையே விக்கிரமசிங்க பதவிநீக்கப்பட்டதற்கும் அவரது அரசாங்கம் கலைக்கப்பட்டதற்குமான காரணங்கள் என்று கூறியிருக்கிறார்.இந்த பயங்கரமான நிலையில் இருந்து நாட்டை தாங்கள் மீட்கப்போகிறார்கள் என்பதே ராபக்சவின் செய்தி.அதனால்தான் அரசாங்கத்தை மாற்றவேண்டியதேவை ஏற்பட்டதாக ஜனாதிபதியும் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமரும் கூறுகிறார்கள்.விக்கிரமசிங்கவின் கெடுதியான அரசாங்கத்திடமிருந்து நாட்டைக்காப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட புரட்சி என்று சிறிசேன — ராஜபக்ச கூட்டின் ஆதரவாளர்கள் சிலர் வர்ணித்திருக்கிறார்கள்.

ஆனால், இதனால் ஜனாதிபதி சிறிசேனவுக்கு என்ன பிரயோசனம் என்ற கேள்வி எழுகிறது.சிறிசேன ஒன்றும் இலங்கையின் மண்டேலா இல்லை.சவால்மிக்கதும் பிரச்சினைக்குரியதுமான அரசியல் சூழ்நிலையில் இருந்து தப்பிப்பிழைப்பதற்கு முயற்சிக்கின்ற ஒரு சாதாரண அல்லத சராசரி அரசியல்வாதிதான் அவரும்.ஐக்கிய தேசிய கட்சியுடனும் விக்கிரமசிங்கவுடனுமான தகராறின் விளைவாக சிறிசேன 2020 ஆம் ஆண்டில் இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஜனாதிபதியாகத்தெரிவு செய்யப்படுவதற்கான வாய்பை இழந்துவிட்டார் என்பதே யதார்த்தம்.அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அவரை ஆதரிக்கப்போவதில்லை என்பது தெளிவானது.அத்துடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வாக்குகளை அவர் பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை.அந்த வாக்காளர்கள் இன்னமும் ராஜபக்சவுக்கு விசுவாசமானவர்களாகவே இருக்கிறார்கள்.இவ்வரட ஆரம்பத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் சுதந்திர கட்சியின் சிறிசேன பிரிவு தேசியரீதியாக நோக்கும்போது மூன்றாம் இடத்துக்கே தள்ளப்பட்டிருந்தது.

அதனால் 2020 தேர்தலையும் அதற்குப் பின்னரான காலகட்டத்தையும் மனதிற்கொண்டு சிறிசேன செய்த கணிப்பீடுகளுடன் சம்பந்தப்பட்டவையே தற்போதைய நடவடிக்கைகள் என்பது தெளிவாகத்தெரிகிறது. ஒரு உடன்படிக்கை இல்லாமல் தற்போதைய சிறிசேன — ராஜபக்ச கூட்டு ஏற்பட்டிருக்கமுடியாது.பிரதமராக நியமிக்கப்பட்டதற்குப் பிரதியுபகாரமாக ராஜபக்ச சிறிசேனவுக்கு எதையாவது உறுதியளித்திருக்கிறாரா? அடுத்த தேர்தலில் சிறிசேன மீண்டும் ஜனாதிபதியாக வருவதற்கு ராஜபக்ச குழுவினர் அவரை ஆதரிப்பார்களா? அல்லது 2020 க்குப் பிறகு சிறிசேனவுக்கென்று அவர்கள் வேறு ஏதாவது திட்டத்தை வைத்திருக்கின்றார்களா?ராஜபக்சவுக்கும் சிறிசேனவுக்கும் இடையில் செய்யப்பட்டிருக்கக்கூடிய உடன்படிக்கை எதனதும் விபரங்கள் மிகுந்த அந்தரங்கமானவையாகவே இருக்கின்றன.தேவைப்பட்டால் இன்னொரு சதிமுயற்சியையும் செய்யக்கூடியவர் சிறிசேன என்பதை தந்திரமான அரசியல்வாதியான ராஜபக்ச அறியாதவருமல்ல.அதனால் சிறிசேனவுக்கும் ராஜபக்சவுக்கும் இடையிலான ஊடாட்டங்கள் அல்லது உறவுமுறையின் தன்மை குறித்து ஜாக்கிரதையாக இருக்கவேண்டியது அவசியமானதாகும்.

இலக்கவிளையாட்டு

பிரச்சினைக்குரிய ஆட்சிமுறை காரணமாகவே 2015 ஆம் ஆண்டில் ராஜபக்ச அரசாங்கம் தூக்கியெறியப்பட்டது என்பது முக்கியமாகக் கவனத்தில்கொள்ளப்படவேண்டியதாகும்.ராஜபக்ச பெருமளவுக்கு தேர்தல் விதிமுறைகளை வைத்தே அரசியல் விளையாட்டைச் செய்தவர்.அவர் பெருவாரியான தேர்தல்களை நடத்தினார்.அத்துடன் 2015 ஜனவரி தேர்தலில் தோல்வியடைந்தபோது எந்தவதமான சச்சரவும் இல்லாமல் அவர் பதவியைவிட்டு விலகினார்.அவரின் அத்தகைய கடந்தகால செயற்பாடுகளை நோக்கும்போது பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டு சட்டவிரோதமானதாகவும் பிரச்சினைக்குரியதாகவும் இலங்கை சனத்தொகையில் கணிசமான பிரிவினரால் நோக்கப்படக்கூடிய ஒரு அரசாங்கத்தை அமைக்க அவர் முன்வந்தது பெரும் ஆச்சரியமாக இருக்கிறது.இது ஒரு சதிவேலையே.ஏனென்றால் சட்டபூர்வமான தேர்தல் ஒன்றின் மூலமாக அவர் பிரதமராக வரவில்லை.குரோதத்தனமான ஆட்சிமாற்றத்துக்கு பலவேறு தந்திரோபாயங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

பட்ஜெட் ஒன்றைச் சமர்ப்பிக்குமுன்னதாக ராஜபக்ச அரசாங்கம் கணக்கு வாக்கு ஒன்றசை் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.முழுமையான படஜெட் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னதாக செலவினங்களுக்கு நிதியைப் பெற்றுக்கொள்வதே நோக்கமாகக் கொண்ட இடைக்கால ஏற்பாடே கணக்கு வாக்காகும்.பொருளாதார நெருக்கடிகளைத் தணிக்க மக்களுக்கு பல சலுகைளும் நிவாரணங்களும் வாக்காளர்களுக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கமுடியும்.அத்தகைய ஜனரஞ்சகமான நடவடிக்கைகளுக்காக மக்கள் சாதகமான முறையில் பிரதிபலிப்பை வெளிக்காட்டுவர் என்று ராஜபக்ச குழு எதிர்பார்க்கக்கூடும்.தேர்தல் களத்தில் அரசவளங்களைத் தாராளமாகப் பயன்படுத்தப்படக்கூடிய வசதியும் அவர்களுக்கு இருக்கும்.

புதிய அரசாங்கத்தை தொடருவதற்கும் கணக்கு வாக்கைச் சமர்ப்பிப்பதற்கும் ராஜபக்ச குழு பாராளுமன்றத்துக்குச் சென்று பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும்.பாராளுமன்றத்தில் நிரூபிக்கக்கூடிய பெரும்பான்மை ராஜபக்ச குழுவிற்கு இருந்திருந்தால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பாராளுமன்றத்துக்குச் சென்று வாக்கெடுப்புக்கு முகங்கொடுத்திருப்பார்கள்.அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.ஏனென்றால் பாராளுமன்றத்தில் குறைந்தபட்சம் 113 உறுப்பினர்களின் ஆதரவு அவர்களுக்கு இல்லை.

அதனால் தங்களை வலுப்படுத்திக்கொண்டு பிறகு பெரும்பான்மையை நிரூபிக்கும் தந்திரோபாயத்தை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.இந்த தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக நவம்பர் 16 வரை பாராளுமன்றத்தை இடைநிறுத்தும் உத்தரவை ஜனாதிபதி பிறப்பித்தார்.( நவம்பர் 5 பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பதற்கு முன்னதாக இக்கட்டுரை எழுதப்பட்டது).பாராளுமன்ற இடைநிறுத்தம் சட்டபூர்வமானதாக இருந்தாலும் ஜனநாயக விரோதமானதாகவே தோன்றுகிறது.பாராளுமன்றத்தை இடைநிறுத்தியதால் பெறக்கூடியதாக இருந்த காலஅவகாசம் அரச இயந்திரத்தின் மீது ராஜபக்ச குழுவினர் அதிகாரத்தைப் பயன்படுத்தி தங்களை வலுப்படுத்திக்கொள்வதற்கு பயன்படும்.அத்துடன் எதிரணி எம்.பி.க்களின் ஆதரவைத் தங்களின் பக்கம் திருப்புவதற்கு அல்லது அவர்களை விலைபேசுவதற்கு இந்த அவகாசம் ராஜபக்ச குழுவினால் பயனபடுத்தப்படுகிறது.இந்த நாட்டின் வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ராஜபக்சவின் கொடுக்கல் வாங்கல்களுக்கு வெளிநாட்டுப் பணம் பெருமளவில் பயன்படுத்தப்படக்கூடிய சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை.

ராஜபக்ச புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதும் அவரை வாழ்த்திய முதல் நாடு சீனாவாகும்.சர்வதேச ஆதரவுக்காக அவர் சீனாவை நம்புவார்.புதிய அரசாங்கம் ஒன்றை தாங்கள் அமைத்துவிட்டதான தோற்றப்பாடு ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களைத் தங்கள் பக்கம் இழுக்க உதவும் என்று ராஜபக்ச குழுவினர் எதிர்பார்க்கக்கூடும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 95 எம்.பி.க்களைக் கொண்டிருக்கிறது.ஈழமக்கள் ஜனநாயக கட்சி அதி ஒரு வாக்கை அவர்களுக்கு கொடுக்கும்.அதனால் ராஜபக்ச குழுவினருக்கு நம்பிக்கைக்குரியதாக 96வாக்குகள் உள்ளன.( ஐக்கிய தேசிய கட்சியின ஐந்து எம்.பி.க்கள் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.அடர்களைத் தவிர்த்தே இந்த தொகை).அதனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து 17 எம்.பி.க்களை வென்றெடுக்கவேண்டிய தேவை ராஜபக்சவுக்கு இருக்கிறது.முஸ்லிம் கட்சிகளை குறிப்பாக இலங்கை மக்கள் காங்கிரஸை அவர் குறிவைக்கக்கூடடும்.அக்கட்சிக்கு ஐந்து எம்.பி.க்கள் இருக்கிறார்கள்.அவர்களை தங்கள் தரப்புக்கு மாறச்செய்வதற்கு ராஜபக்சவினால் முடியுமாக இருந்தால் அவருக்கு 12 ஐக்கிய தேசிய கட்சி எம்.பி.க்களின் ஆதரவைப்பெறவேண்டிய தேவையிருக்கும்.

ஐக்கிய தேசிய கடசியின் பாராளுமன்றக்குழு மீது விக்கிரமசிங்கவுக்கு பிடியை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது 12 எம்.பி.க்களை ராஜபக்ச இழுத்தெடுப்பது சுலபமான காரியமில்லை.அதனால் பாராளுமன்றம் கூடும்போது தனது பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ச கடுமையாகப் பாடுபடவேண்டியிருக்கும்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி அதன் சொந்தத்தில் 87 எம்.பி.க்களைக் கொண்டிருக்கிறது.முஸ்லிம் கட்சிகளினதும் தமிழ் முற்போக்கு கூட்டணியினதும் ஆதரவைத் தக்கவைக்க ஐக்கிய தேசிய கடசியினால் முடியுமாக இருந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க அதற்கு 6 ஆசனங்களே தேவை.ஜாதிக ஹெல உறுமய அதன் விசுவாசத்தை மாற்றிக்கொள்ளக்கூடிய சாத்தியமில்லை என்பது எனது அபிப்பிராயம்.ஜனதா விமுக்தி பெரமுன( ஜே.வி.பி.) நடுநிலையாகவே இருக்கும்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதே குறைந்தபட்சம் 113 எம்.பி.க்களின் கையெழுத்தைச் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு இருக்கக்கூடிய ஒரே வழியாகும்.கூட்டமைப்புக்குள் நிலவுகின்ற பூசல்கள்மற்றும் தமிழர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படக்கூடியதாக இருக்கின்ற உணர்வுகளை அடிப்படையாகக்கொண்டு நோக்கும்போது ஐக்கிய தேசய கட்சியை வெளிப்படையாக ஆதரிப்பதில் கூட்டமைப்பு பிரச்சினையை எதிர்நோக்கும்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பது வேறுபட்ட விடயம்.உத்தியோகபூர்வமாக எதிர்க்கடசியாக இருக்கின்ற போதிலும் கூட்டமைப்பு அதைச் செய்துவந்திருக்கிறது.அதனால் 113 எம்.பி.க்களின் கையெழுத்தைச் சமர்ப்பிப்பதைக் காட்டிலும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெரும்பான்மையை நிரூபிப்பதது ஐக்கிய தேசிய கட்சியைப் பொறுத்தவரை சுலபமானதாக இருக்கும்.அதனால்தான் உடனடியாக பாராளுமன்றத்தைக்கூட்டுமாறு அது கோருகிறது. (வீரகேசரி)

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link