முன்னாள் பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோரால் பொது சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தி காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக அமைச்சர்களுக்கான செயலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடு இன்றையதினம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் அஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளர்.
புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டு 13 நாட்கள் கடந்துள்ள போதிலும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து அலரி மாளிகையில் தங்கி இருப்பதானது பொதுச் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் இதுவரை அவர்களின் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வீடுகளை திரும்ப வழங்கவில்லை எனவும் சிலர் தாம் ஏற்கனவே இருந்த அமைச்சுக்களுக்கு சென்று சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதாகவும் அஜித் ஜயசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.