இலங்கையின் தலையெழுத்தை, மூடிய அறைக்குள் சில முதியவர்கள் இணைந்து தீர்மானிக்கின்றனர் என ஐக்கிய நாடுகளின் இளைஞர் விவகாரங்களுக்கான தூதுவர் ஜயத்மா விக்ரமநாயக்க விசனம் வெளியிட்டுள்ளார். ஆசியாவின் பழைமைவாய்ந்த ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனையாக, இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி அமைந்துள்ளதென அவர் தனது கடுமையான விமர்சனத்தை ருவிட்டர் பதிவில் முன்வைத்துள்ளார்.
தற்போதைய நிலையில், நாட்டின் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அரசியல் தலைவர்கள் செயற்படுவது அவசியமென வலியுறுத்தி உள்ள ஐ.நா. தூதுவர் ஜயத்மா, குறிப்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தீர்ப்பதற்கு அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவது அவசியம் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் , இளைஞர் விவகாரங்களுக்கான தனது தூதுவராக இலங்கையைச் சேர்ந்தவரான ஜயத்மா விக்ரமநாயக்கவை 2017ல் ஐ.நா. செயலாளர் நாயகம் நியமித்திருந்தார். இவர் தனது 21 ஆவது வயது முதல் சர்வதேச ரீதியிலான இளைஞர் விவகார அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் அவ்வமைப்புகளில் பல்வேறு பதவி நிலைகளையும் வகித்துள்ளார்.
2030 ஆம் ஆண்டளவில் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்திக் கொள் கையை வெற்றிகரமான முறையில் நடைமுறைப்படுத்துவதனை இலக்காகக்கொண்டு, இளைஞர் சமூகத்தை வலுவூட்டும் பொறுப்பு குறித்த பதவி மூலம் இவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.