“யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர காவற்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாள்களில் அதிகரிக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் சிரேஸ்ட்ட காவற்துறையினர் அத்தியட்சகர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டச் செயலாளரும் சிவில் பாதுகாப்புக்கழு தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்தக் கூட்டம் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.
யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளினால் காவற்துறையினருக்கு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
குறிப்பாக கடந்த சிலநாள்களாக கொடிகாமம் காவற்துறைப் பிரிவிற்குட்பட்ட தனங்களப்பு பகுதில் மணல் திருட்டு மிகவும் மும்மூரமாக இடம்பெற்றுவருவதாகவும் இதனால் அப்பகுதி மணல்வளம் அழிவடைந்து செல்வதாகவும் சாவகச்சேரி பிரதேச செயலாளர் கூட்டத்தில் எடுத்துக் கூறினார்.
அத்துடன் யாழ்ப்பாண மாநகரின் புறநகர் பகுதிகளை இலக்குவைத்து அண்மைக் காலங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் கத்திமுனையல் கொள்ளையிடும் சம்பவங்களும் இடம்பெறுவதாக இன்றைய கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இவ்விடயங்கள் தொடர்பில் காவற்துறையினர் பல நடவடிக்கைகளை ஏற்கனவே முன்னெடுத்திருப்பதாகம், சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்தி சகல குற்றச்செயல்களையும் கட்டுக்குள் கொண்டுவர தாம் நடவடிக்கை எடுப்பதாகவும் யாழ்ப்பாண சிரேஸ்ட்ட காவற்துறை அத்தியட்சகர் தெரிவித்தார்.