பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் என சொல்லப்படுவது ஒரு நிழல் அரசாங்கம் ஆகும். அதன் பிரதமர் எனப்படும் மகிந்த ஒரு நிழல் பிரதமர் ஆகும். அதன் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் நிழல் அமைச்சர்கள் ஆவர். இவர்களின் முழு நேர தொழில் இன்று பாராளுமன்றத்தில் மிளகாய் பொடி தூவுவதும், நமது ஆட்சி ஆரம்பித்து வைத்த “கம்பெரலிய” என்ற ஊரெழுச்சி வேலைத்திட்டங்களை இடை நிறுத்தி வைப்பதும் ஆகும். எனவே இந்த மிளகாய் பொடி ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை முடக்க நாம் தீர்மானித்துள்ளோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் உரையாடிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,நாட்டின் நிதி தொடர்பான பொறுப்பும், இறுதி அதிகாரமும் பாராளுமன்றத்திடமே உள்ளது. அரசாங்க அமைச்சுகளின் எந்த ஒரு நிதி ஒதுக்கீட்டு மற்றும் செலவு நடவடிக்கைகளும், பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, பாராளுமன்றம் ஏற்றுகொண்ட பின்னரே செல்லுபடியாகும். அதேபோல், கடந்த வரவு செலவு திட்டத்தில் ஒவ்வொரு அமைச்சுக்கும் ஒதுக்கப்பட்ட, நிதி ஒதுக்கீடுகளை கண்காணிக்கும்,இடை நிறுத்தும் அதிகாரமும் பாராளுமன்றத்திற்கே உள்ளது.
இன்று இந்நிலையில் பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய நமது தரப்பிடமே பெரும்பான்மை உள்ளது. இந்த சிறுபான்மை மிளகாய் பொடி அரசாங்கத்தை சட்டவிரோதமாக நடத்தி வருவதாக சொல்லப்படும் கும்பலில் இருக்கின்ற அமைச்சர்கள் எனப்படுவோர் விடுக்கும் எந்த ஒரு ஆணையையும் கருத்தில் கொள்ள வேண்டாம் என அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நாம் அறிவித்துள்ளோம். இதைமீறி செயற்படும் அதிகாரிகள் எதிர்காலத்தில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.
இதன் ஒரு அம்சமாக நாம் எதிர்வரும் 29ம் திகதி பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றும் முகமாக, பிரதமர் அலுவலக செயலாளரின் நிதி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பிரேரணையை இன்று சபாநாயகரிடம் கையளித்துள்ளோம். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. இதை தொடர்ந்து, இந்த மிளகாய் பொடி மகிந்த ஆட்சியின், அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எதிராகவும் நாம் இத்தகைய பிரேரணைகளை கொண்டு வருவோம். இந்த நிழல் ஆட்சியின் நிதி நடவடிக்கைகளை நாம் முற்றாக முடக்குவோம்.
திருட்டுத்தனமாக ஆட்சியை பிடித்துவிட்டு, இன்று பாராளுமன்றத்தில் வரலாறு காணாத அட்டகாசங்களை செய்துவரும் இந்த கும்பலுக்கு, நாம் வழி விட்டு ஒதுங்கி நிற்போம் என ஒருவரும் கனவு காண கூடாது. இதை தவிர பாராளுமன்றத்தில் எந்த ஒரு சட்டமூலத்தையும் நிறைவேற்ற இதன் சட்டவிரோத நிழல் ஆட்சி மிளகாய் பொடி கும்பலுக்கு நாம் இடம் கொடுக்க மாட்டோம். இந்த முடிவு ஐக்கிய தேசிய முன்னணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.