Home இலங்கை பிரதமர் மகிந்தவை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

பிரதமர் மகிந்தவை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லையா?

by admin

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியாக ஆட்சி புரிந்த,மகிந்த ராஜபக்ஸ பிரதமராக பதவியேற்று அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்றபோதும், இதுவரையில் எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்காமை உலக நாடுகள் புதிய பிரதமரை ஏற்றுக்கொள்ளாமையை காட்டுவதாக அரசியல் வட்டாரங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, மகிந்த ராஜபக்ஸ பிரதமராக நியமிக்கப்பட்டமை இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேசத்திலும் அதிரடி அரசியலாக கவனத்தை ஈர்த்ததையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.  இலங்கையின் ஆட்சி மாற்றம் மற்றும் பிரதமர் பதவியேற்று தொடர்பில் வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆட்சி மாற்றம் பற்றி இலங்கை தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்ட போதும் எந்தவொரு நாடும், புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

இதேவேளை சீனத் தூதுவர் செங் ஷியுவான், மகிந்த ராஜபக்ஸவை கடந்த 12 ஆம் திகதி சந்தித்து வாழ்த்துக் கூறியிருந்த போதிலும் சீன அரசாங்கம் இந்தச் சந்திப்புக் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.அதைவிட, மகிந்த ராஜபக்ஸவை சந்தித்த அதே நாளன்று, அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவையும், சீனத் தூதுவர் சந்தித்திருந்தார். அத்தோடு நவம்பர் 1 ஆம் திகதி பாகிஸ்தான் தூதுவர், மகிந்த ராஜபக்ஸவைச் சந்தித்த அதேவேளை, சபாநாயகரையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடியிருந்தார். வேறு எந்தவொரு நாடும், மகிந்த ராஜபக்ஸவைச் சந்திக்கவோ, வாழ்த்துக் கூறவோ இல்லை.

புதிய அரசாங்கம் ஆட்சியை பொறுப்பெடுக்கும்போது, வாழ்த்துச் செய்தியை அனுப்புவது இராஜதந்திர நடைமுறையாக காணப்படுகின்றது. ஆனால் மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் ஆட்சியமைத்து ஒரு மாதமாகியும், எந்தவொரு நாடும் உத்தியோகபூர்வமாக வாழ்த்துச் செய்தியை அனுப்பாமை, பெரும் பின்னடைவாகவும் புதிய பிரதமரை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாமையினையும் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More