யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பேருந்து ஒன்றில் உள்ள குறைப்பாடுகள் மற்றும் அதனால் எதிர்கொண்ட எதிர்கொண்ட அசௌகரியங்கள் தொடர்பில் பயணி ஒருவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பேருந்தின் உரிமையாளருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்தவேளை, அவர் பயணியுடன் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டியமை தொடர்பான ஒலிப்பதிவையும் அந்தப் பயணி தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான சேவையில் நேற்றிரவு ஈடுபட்ட தனியார் அதிசொகுசு பேருந்தில் பயணித்த இளைஞர்கள் சிலர், ஆசனங்களில் மூட்டைப்பூச்சி கடிக்கு இலக்காகி உள்ளனர்.
உடனே பயண சீட்டில் இருந்த உரிமையாளரின் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்து இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.எனினும் உரிமையாளர் முறைப்பாட்டை ஏற்க மறுத்து சீற்றமடைந்து, பயணிகளைத் தகாத வார்த்தைகளால் பேசியதுடன் மிரட்டியும் உள்ளார்.
‘உன்ர அம்மாவ அனுப்பு, எனக்கு மினிஸ்ரர் எல்லாம் பழக்கம், இறங்குற இடத்தில வச்சு உன்னை புடிச்சு கொளுத்துவன்’ என கூறி பெரும் அடாவடித் தனமாகப் பேசியுள்ளார். அதுதொடர்பில் பயணி ஒருவர் வெளியிட்டுள்ள ஒலிப்பதிவில் தெளிவாக உள்ளது.
இந்த பேருந்து சேவை நிறுவனம் தொடர்பில் இதற்கு முன்னரும் பல தடவைகள் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. எனினும் தனக்கு அமைச்சர் நட்பு உள்ளது என மிரட்டி பயணிகளை இந்த உரிமையாளர் அடக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு குறைபாடுகள் பயணிகள் சேவையில் ஈடுபடுவது மற்றும் பயணிகளை தரக்குறைவாக நடத்திக்கொள்ளும் பேருந்து உரிமையாளர்கள் மீது தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? அதுவே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.