நிலவில் ரோபோவை நிலைநிறுத்தி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையிலான தனது முதல் திட்டத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங்’இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ரொக்கெட் மூலம் இந்த ரோபோ நிலவை நோக்கி செலுத்தப்பட்டது. இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டுவந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.
ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது எனவும் குறிப்பிட்ட காலம் நிறைவடைந்த பின்னர் இந்த செயற்கைகோள் நிலவின் வேறொரு பகுதியிலுள்ள கரடு முரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டுவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக உருளைக்கிழங்கு, அரபிடோப்சிஸ் ஆகியவற்றின் விதைகள் மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.’லூனார் மினி பயோஸ்பியர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.