Home இலங்கை பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்

பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா? நிலாந்தன்

by admin


கடந்த நொவெம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. தமிழ் மக்களுக்கு இப்போதுள்ள சாத்தியமான வழியாகத் தெரிவது பிரதிநிதித்துவ ஜனநாயக வழிமுறைதான். இந்த வழிமுறையில் தமிழ் மக்கள் தமது பேரத்தை உச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குப் பேர அரசியலை முன்னெடுக்கவல்ல தமிழ்ப் பிரதிநிதிகள்; ஆகக் கூடிய பட்சம் திரட்டப்பட்டு ஒரு கொத்தாகச் செயற்படும் போது கொழும்பு அரசியலில் தீர்மானிக்கும் தரப்பாக தமிழ் மக்கள் திகழ முடியும் என்பது சுட்டிக் காட்டப்பட்டது. அவ்வாறு தமிழ் பிரதிநித்துவம் ஒரு பொருத்தமான பலமான திரட்சியைப் பெறுவதென்றால் தமிழ் தலைமைகள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது. அவ்வாறு சிந்திக்குமாறு தமிழ் தலைமைகள் மீது தமிழ்ச்  சிவில் அமைப்புக்கள் நிர்ணயகரமான அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களை சரியான வழியில் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

அக் கருத்தரங்கு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் கொழும்பில் சோபித தேரரின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது. அந்நிகழ்வில் பேராசிரியர்.ஜெயதேவ உயாங்கொட ஆற்றிய உரை பற்றியும் மேற்படி கருத்தரங்கில் பிரஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சிவில் அமைப்புக்கள் ‘தார்மீகத் தலையீடு’ ஒன்றை செய்ய வேண்டும் என்று உயாங்கொட கேட்டிருந்தார். அதைப் போன்ற ஒரு தலையீட்டை தமிழ் சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புக்களும் தமிழ் அரசியலிலும் மேற்கொள்ள வேண்டும் என்று மேற்படி கருத்தரங்கில் சுட்டிக்காட்டப்பட்டது.

உயாங்கொட தனது உரையில் 2015 ஆட்சி மாற்றத்தின் போது சோபித தேரர் தலைமையில் சிங்கள வெகுசன அமைப்புக்கள் மேற்கொண்ட தலையீட்டை குறித்தும் சுட்டிக் காட்டி இருந்தார். 2015 இல் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் போது மாற்றத்தைக் கோரிய மக்கள் அமைப்புக்கள் ரணில் – மைத்திரி கூட்டிற்கு ஆதரவாக செயற்பட்டன. ராஜபக்சவின் யுத்த வெற்றிவாதத்திற்கு எதிராக குறிப்பிடத்தக்க அளவு சிங்கள வாக்குகளைத் திரட்டியதில் மேற்படி சிவில் அமைப்புக்களுக்கும் ஒரு பங்கு உண்டு என்று கூறப்பட்டது. ஆனால் இது சற்று மிகைப்படுத்தப்பட்ட ஒரு கூற்று என்ற அவதானிப்பும் உண்டு. அக்கால கட்டத்தில் சிவில் சமூகத்தின் தலையீடானது ஆட்சி மாற்றத்தின் தார்மீகக் கவர்ச்சியை கூட்டுவதற்கு உதவியது. அது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் லிபரல் ஜனநாயகவாதிகளை ஆட்சி மாற்றத்தை நோக்கி கவர்ந்திழுத்தது. ஆனாலும் ஆட்சி மாற்றத்திற்கான ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்குகளை எண்ணிப்பார்த்ததால் ஒன்று தெளிவாக தெரியவரும். சிங்கள மக்களின் பெரும் திரள் வாக்குகள் மகிந்தவுக்கே கிடைத்தன. அதே சமயம் குறிப்பிடத்தக்களவு சிங்கள வாக்குகள் மைத்திரிக்கு விழுந்தன. ஆனால் எண்கணிதப்படி மகிந்ததான் சிங்கள மக்களின் தெரிவு. அதே சமயம் வடக்கு, கிழக்கு, மலையக த்தமிழ் வாக்குகளும், முஸ்லீம் வாக்குகளும் கொத்தாக மைத்திரிக்கு கிடைத்தன. அதன்படி அவரின் வெற்றியை தீர்மானித்தது அதிகபட்சம் தமிழ் முஸ்லீம் வாக்குகளே. எனவே சிங்கள சிவில் சமூகங்களின் தலையீட்டினால் மட்டும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை. இலங்கை தீவின் இனரீதியாகப் பிளவுண்டிருக்கும் வாக்காளர்கள் மீது நிர்ணயகரமான செல்வாக்கைச் செலுத்தக் கூடிய ஒரு பலத்தை தமிழ் சிங்கள முஸ்லீம் சிவில் சமூகங்கள் இனிமேல் தான் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது.

இவ்வாறான ஒரு சிவில் சமூகச் சூழலில் தமிழ் தலைமைகள் மீது நிர்ணயகரமான விதத்தில் செல்வாக்கை பிரயோகிக்கவல்ல மக்கள் அமைப்புக்களைக் கட்டியெழுப்புவது யார்? எப்படி?

மேற்படி கருத்தரங்கை ஒழுங்குபடுத்திய தமிழ் சிவில் சமூக அமையத்தின் பிரதிநிதி ஒருவர் இது தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். நாங்கள் சரியான வழியைத் தெரிவு செய்யும் சரியான முடிவுகளை எடுத்திருக்கிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சரணடையாமலும் சோரம் போகாமலும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். ஆனால் இந்த நிலைப்பாடு செயல் வடிவம் பெற வேண்டும் என்ற பொருள்பட அவர் கருத்துக் கூறினார்.

இப்படிப்பட்டதோர் சிவில் சமூகச்சூழலில் தமிழ் மக்கள் பேரவையில் வகிபாகத்தை எந்த இடத்தில் வைப்பது? அது ஒரு பிரமுகர் மைய அமைப்புதான். அடிமட்ட வலைப்பின்னலை அது கொண்டிருக்கவில்லை. அது விக்னேஸ்வரனை மையமாகக் கொண்டே கட்டியெழுப்பப்பட்டது. அவர் பேரவையை ஒரு மக்கள் அமைப்பாக மாற்றப் போவதாக முன்னர் கூறிவந்தார். ஆனால் அதற்கு வேண்டிய வழிவரைபடம் எதுவும் அவரிடமோ அல்லது பேரவையிடமோ காணப்படவில்லை எனினும் மேற்சொன்ன எல்லாப் பலவீனங்களோடும் தமிழ் மக்கள் மத்தியில் நிர்ணயகரமாக இடை ஊடாட்டத்தளமாக மேலெழக் கூடிய வாய்ப்புக்களை பேரவை கொண்டிருக்கிறது. விக்னேஸ்வரனின் தலமைத்துவ பண்புருவாக்க மாற்றத்திற்குரிய ஒரு இடை ஊடாட்டத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. தமிழ் எதிர்ப்பு அரசியலுக்குரிய இடை ஊடாட்டப் பொதுத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. கூட்டமைப்பின் மீது அதிருப்தி கொண்டவர்கள் ஒன்று கூடி இடை ஊடாடக்கூடிய ஒரு பொதுத் தளமாக அது செயற்பட்டிருக்கிறது. இது காரணமாகவே கடந்த ஒக்ரோபர் மாதம் 24ம் திகதி பேரவை கூட்டத்தில் விக்னேஸ்வரன் ஒரு கட்சியை அறிவித்தார்.

அப்படி அவர் ஒரு அக்கட்சியை அறிவித்திருக்க கூடாது என்று பேரவைக்குள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் அதை மறைமுகமாக எற்றுக் கொள்கிறார்கள். அப்படி ஒரு கட்சிசயை அறிவிக்கப் போவது தொடர்பாக அவர் பேரவைக்கு அறிவித்திருக்கவில்லை என்று ஒரு விமர்சனம் உண்டு. ஓர் இணைத்தலைவராக இருந்து கொண்டு அவர் கட்சியை அறிவித்திருக்கக் கூடாது என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. பேரவைக்கும் விக்னேஸ்வரனுக்கும் எதிரானவர்கள் மேற்படி குற்றச்சாட்டுக்களை முகநூலில் எழுதினார்கள். அதன் பின் நடந்த பேரவைக்கூட்டத்தில் விக்னேஸ்வரன் மேற்படி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஓர் இணைத்தலைவராக இருந்து கொண்டு ஒரு புதிய கட்சிக்கு தலைவராகவும் இருக்கலாமா? என்பதனை முடிவெடுக்குமாறு பேரவையிடம் கேட்டுக் கொண்டார். பேரவைக்குள் பெரும்பான்மையானவர்கள் அவர் தொடர்ந்தும் இணைத்தலைவராக இருக்கலாம் என்று கருதுகிறார்கள். ஏற்கனவே கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு பேரவைக்குள் இணைத்தலைவராகவும் அவர் இருந்திருக்கிறார். எனவே இப்பொழுதும் ஒரு புதிய கட்சியின் தலைவராகவும் பேரவையின் இணைத்தலைவராகவும் இருக்கலாம்தானே என்று கேட்பவர்களும் உண்டு.

இந்நிலையில் இப்பொழுதுள்ள கேள்வியெல்லாம் விக்னேஸ்வரனின் கட்சிக்குப் பின் பேரவையின் செயற்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதுதான். இக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டது போல விக்னேஸ்வரன் உட்பட எல்லாத் தமிழத் தலைமைகள் மீதும் செல்வாக்கு செலுத்தக் கூடிய ஒரு மக்கள் அமைப்பாகப் பேரவை கட்டியெழுப்பப்படுமா என்பது தான். அல்லது பேரவையின் அடுத்தகட்டக் கூர்ப்பு வேறொரு அமைப்பா? என்பது தான்.

தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியே பேரவையாகும். தமிழ் சிவில் சமூக அமையம் எனப்படுவது 2009க்கு பிந்திய ஒரு வளர்ச்சியாகும். யுத்த வெற்றிகளின் பின் ராஜபக்ஷ யுத்த வெற்றி வாதத்தை முன்னெடுத்த போது குரலற்ற தமிழ் மக்களின் குரல்களில் ஒன்றாக தமிழ் சிவில் சமூக அமையம் எழுச்சி பெற்றது. ஆயுத போராட்டத்தோடு நேரடியாக தொடர்புபட்டிராத நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த சமூக பிரமுகர்கள், மதகுருக்கள், செயற்பாட்டாளர்களால் அது உருவாக்கப்பட்டது. அதனாலேயே அது ஒரு பிரமுகர் மைய அமைப்பாக காணப்பட்டது. அக்;கால கட்டத்தில் என்னோடு உரையாடும் போது மனோகணேசன் என்னிடம் கேட்டார். இப்படியொரு சிவில் சமூகத்தை நாங்களும் மேல் மாகாண சபையில் உருவாக்கினால் என்ன? என்று அவரிடம் சொன்னேன். இப்போதுள்ள நிலைமைகளின் கீழ் இது போன்ற பிரமுகர் மைய அமைப்புக்கள் தான் தமிழ்ப் பகுதிகளில் தோன்றலாம் என்று. போரில் தோற்கடிக்கப்பட்டு ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் தோல்வியை உடனடுத்து வரும் காலத்தில் பிரமுகர் மைய அமைப்புக்களே தலையெடுக்க முடியும். அது தான் யதார்த்தம்.
ஆனால் 2015 ஆட்சி மாற்றத்தோடு உருவாக்கப்பட்ட அதிகரித்த சிவில் ஜனநாயக வெளிக்குள் தமிழ் சிவில் சமூக அமையத்தை விடக் கூடுதலான அரசியல் பரிமாணத்தை கொண்ட ஓர் அமைப்புக்கான தேவை ஏற்பட்டது. அது தான் தமிழ் மக்கள் பேரவை. பேரவையின் மேலெழுகையும், விக்னேஸ்வரனின் மேலெழுகையும் ஒன்றுதான். கூட்டமைப்பின் முதலமைச்சராக இருந்து கொண்டு கூட்டமைப்பிற்கு மாற்றாக ஒரு தளத்தை உருவாக்குவதற்கு விக்னேஸ்வரனுக்குப் பேரவை உதவியிருக்கிறது. அப்படிப் பார்த்தால் அவரருடைய அரசியல் ஆளுமைக் கூர்ப்பின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவிய ஓர் இடையூடாட்டத் தளமாக பேரவை செயற்பட்டிருக்கிறது. ஈழத்தமிழ் அரசியலில் இது ஒரு நூதனமான தோற்றப்பாடு. பேரவையின் பக்க வளர்;ச்சியே தமிழ் மக்கள் கூட்டணியாகும். தமிழ் மக்கள் கூட்டணி என்ற ஒரு குழந்தையைப் பெறுவதற்குரிய ஒரு வாடகைத்தாயாக பேரவை செயற்பட்டிருக்கிறது எனலாமா? இது ஒரு புதிய கட்டம். இனிப் பேரவைக்கும், தமிழ் மக்கள் கூட்டணிக்கும் இடையில் உள்ள உறவு எப்படி அமையும்?
பேரவை முழுக்க முழுக்க ஒரு மக்கள் அமைப்பாக மாறி தமிழ்த் தலைவர்கள் மீது செல்வாக்கை பிரயோகிக்கும் ஒரு வளர்ச்சிக்கு போகுமா? அல்லது தன் பக்க வளர்ச்சியாகிய தமிழ் மக்கள் கூட்டணியை தொடர்ந்து வளர்த்தெடுக்குமா?
முதலில் இந்த இடத்தில் ஒரு கேள்வியை கேட்க வேண்டும். பேரவையின் இறுதி இலக்கு என்ன? அது ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்திருக்கிறது. அந்த இறுதி இலக்கை நோக்கி அது செயற்பட வேண்டும். சரி அப்படி என்றால் அதற்கான செயல்வழி என்ன? ஒன்றில் மக்கள் மைய அரசியலை முன்னெடுக்க வேண்டும். அல்லது தேர்தல் மைய அரசியலில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். மக்கள் மைய அரசியலை பொறுத்தவரை அதை எடுத்த எடுப்பில் கட்டியெழுப்ப முடியாது. அதைப் படிப்படியாகத்தான் செய்யலாம். இடைக்கிடை ஒழுங்கு செய்யப்படும் ஒருநாள் எழுகதமிழ் நிகழ்வுகளை வைத்து பேரவையை ஒரு பெருந்திரள் மக்களை மைய அமைப்பாகக் கூறிவிட முடியாது. அது பல்வேறு தரப்புக்களையும் உள்ளடக்கிய ஓர் இடையூடாட்டத் தளம் என்பதே சரி.
மக்கள் பங்கேற்பு அரசியலுக்குரிய அரசியல் தரிசனம் எதுவும் பேரவையிடம் இருப்பதாகத் தெரியவில்லை. அதற்குரிய கட்டமைப்புக்களும் அதனிடம் இல்லை. பொருத்தமான யாப்பும் இல்லை. இப்படி ஒரு யாப்பு இல்லாத வெற்றிடத்தில்தான் கஜன் – சுரேஸ் – சித்தார்த்தன் போன்றோருக்கிடையிலான முரண்பாடுகள் இப்போதிருக்கும் வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. கடைசியாக நடந்த பேரவைக் கூட்டத்தில் ஒரு யாப்பை வரைவது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே பேரவை ஒரு மக்கள் மைய அமைப்பாக அடுத்த கட்டக்கூர்ப்பை அடைவதற்கு காலமெடுக்கும். அனால் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட குழப்பங்களின் பின்னணியில் தேர்தல் அரசியலைக் குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டியிருக்கும். தேர்தல் மைய அரசியலை பொறுத்தவரை இப்பொழுது பேரவையின்; பக்க வளர்;ச்சியான தமிழ் மக்கள் கூட்டணி உண்டு. வரும் ஆண்டு ஒரு தேர்தல் ஆண்டாக அமைய கூடும். ஆனால் பேரவையின் பக்க வளர்ச்சியான தமிழ் மக்கள் கூட்டணியோ இன்னமும் தவழத் தொடங்கவே இல்லை. தவிர விக்கினேஸ்வரனின் தலைமையின் கீழ் ஒரு பலமான ஜக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் முழுமையாகக் கனியவில்லை.
இந்நிலையில் பேரவை முன்வைத்திருக்கும் தீர்வு திட்டத்தை நோக்கி தமிழ் அரசியலை உந்தித்தள்ள வேண்டுமென்றால் உடனடிக்கு தமிழ் மக்கள் கூட்டணியை கட்டியெழுப்புவதை தவிர வேறு நடைமுறைச் சாத்தியமான தெரிவு பேரவைக்கு உண்டா? பேரவை ஒரு மக்கள் இயக்கம் அது ஒரு பொதுத்;தளம். அது கட்சி அரசியலில் ஈடுபடக் கூடாது என்றெல்லாம் கற்புக் கதைக்கலாமா? ஒரு அரசியல் இலக்கை அடைவதற்;கான நிறுவனக் கட்டமைப்பே ஒரு கட்சி அல்லது மக்கள் இயக்கமாகும.; பேரவையின் இலக்கு அது முன்வைத்த தீர்வுத்திட்டம்தான். அதை அடைவதற்கான ஒரு பலமான ஜக்கிய முன்னணியைக் கட்டியெழுப்பினால்தான் தமிழ் வாக்காளர்களையும் உலக சமுதாயத்தையும் அத்தீர்வுத் திட்டத்தை நோக்கி ஈர்க்கலாம். திரட்டலாம். விக்னேஸ்வரனின் கட்சிக்குள் பேரவை உறுப்பினரான பேராசிரியர்.சிவநாதன் மட்டுமே இணைந்திருக்கிறார். முன்பு இணைந்த மட்டக்;களப்பைச் சேர்ந்த பேரவையின் இணைத் தலைவரான வசந்தராஜா கட்சிக்குள் தொடர்ந்து செயற்பட மாட்டார் என்றே தெரிகிறது. விக்னேஸ்வரன் பேரவகை;குள் காணப்படும் கட்சிகளையும் இணைத்து ஒரு பெரும் கூட்டை உருவாக்குமிடத்து பேரவை உறுப்பினர்களில் ஒரு பகுதியினர். அக்கூட்டிற்காக உழைக்கக்கூடும். மாறாக தனிக்கட்சியாக அவர் தமிழ் மக்கள் கூட்டணியைக் கட்டியெழுப்பும் போது பேரவைக்குள்ளிருந்து எத்தனைபேர் அக்கட்சியோடு இணைவார்கள்?; விக்னேஸ்வரனின் அரசியல் வாழ்வில் அவருடைய பண்புருமாற்றத் தளமாகக் காணப்பட்ட பேரவையானது அவர் கட்சியைத் தொடங்கியதும் சற்றே விலகி நிற்பதாகத் தெரிகிறது. அவருடைய பண்புருமாற்றத் தளத்தைச் சேர்ந்தவர்களே அவருடைய புதிய கட்சியைக் கட்டியெழுப்புவதுதான் பொருத்தமாக இருக்கும். தமிழ்த்; தலைமைகள் மீது நிர்ணயகரமான நீதியான தலையீட்டை செய்யும் ஒரு மக்கள் அமைப்பெனப்படுவது ஓர் உன்னதமான கனவு. அதே சமயம் பெரும்பாலானவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்வைக்கப்பட்ட ஒரு தீர்வு திட்டத்தை நோக்கி தேர்தல் மைய வியூகம் ஒன்றை வகுக்க வேண்டியது உடனடி தேவை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More