ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்படுமளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால், எதிர்கட்சித் தலைவர் பதவி அக்கட்சிக்கே வழங்கப்பட வேண்டுமென சபாநாயகரிடம் வலியுறுத்தப் போவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறும் தாம் சபாநாயகரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தற்போதைய நிலையில் மகிந்தவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வழங்காமலிருப்பதற்கான சந்தர்ப்பம் இல்லையெனவும் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அமைச்சரவையை நியமிப்பது இலகுவான காரியம் அல்ல எனவும் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக இருக்க வேண்டும் என்பதனால் தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டால் மாத்திரம்தான் இந்த அமைச்சரவை எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் ஜனாதிபதி அதனை நிராகரிப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்