இலங்கையின் ஊடகங்கள் தன்னுடைய உரையை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமா? எனப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட சூழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் கறுப்பு ஊடகங்கள் இருந்தன. அவ்வாறான ஊடகங்கள் தொடர்பில், ஜனவரி மாதம் விவாதம் நடத்தப்படும் என்றும் அதனை நேரடியாக ஒளிப்பரப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டள்ளார்.
குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் ஊடகங்கள் கறுப்பு ஊடகங்களாகவே செயற்பட்டதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளுக்கு நட்டஈடு வழங்க தயாரா எனவும் பிரதமர் ஊடகங்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வில், நிதியமைச்சின் இடைக்கால கணக்கறிக்கை தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், அமைச்சரவை தொடர்பாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிடப்படாத பெயர்கள் அடங்கிய கடிதம் ஊடகங்களில் வெளிவந்தன. வேண்டுமென்றால் அந்த கடிதத்தை அனுப்ப்பத் தயார். குறிப்பாக விஜித் விஜயமுனி சொய்சாவின் பெயர் அங்கிருந்தது. அதற்காக அவர் ஒவ்வொரு ஊடகம் மீதும் வழக்கு தொடர்ந்தால் மில்லியன் கணக்கில் அவருக்கு நட்டஈடு கிடைக்கும். அதற்கு தயாரா என ஊடகங்களிடம் கேள்வி எழுப்பினார்.
அந்த கடிதம் தொடர்பில் ஊடகங்கள் தன்னிடம் கேட்கவில்லை. தமது அலுவலகத்துடன் தொடர்புகொண்டு கேட்கவில்லை. கடந்த ஒக்டோபர் 26இன் பின்னர் ஊடகங்கள் கறுப்பு ஊடகங்களாகவே செயற்பட்டன எனச் சுட்டிக்காட்டினார்.