மலைய மக்களின் சம்பள பிரச்சினைக்கு உரிய தீர்வை அரசாங்கம் உடனடியாக வழங்க வேண்டுமென வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை ஈடுபட்ட மலையக இளைஞர்கள் தமது போராட்டத்தை நிபந்தனையுடன் இடைநிறுத்தியுள்ளனர். கொழும்பு, புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இப் போராட்டம் இடம்பெற்று வந்தது.
நுவரெலியா- தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞர்கள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை வழங்க வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டத்தில் மலையகத்தை சேர்ந்த, கணேசன் உதயகுமார், கந்தையா அசோக்குமார், கனகரத்தினம் ராஜா, வீரக்குமார் மனோஜ் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமைத்திருந்த கூடாரத்தை கோட்டை புகையிர நிலைய அதிகாரிகள் பலவந்தாக அகற்றியிருந்த நிலையிலும் அவர்கள் தமது போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். தமது போராட்டத்தை தற்காலிகமாக நிறைவு செய்துள்ளதாகவும் மலையக மக்களின் சம்பள பிரச்சினைக்கு விரைவில் அரசாங்கம் தீர்வு வழங்காத பட்சத்தில் போராட்டத்தை மீண்டும் தொடங்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.