அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாட வேண்டும் என்ற 7 வயது சிறுவன் ஆர்ச்சி சில்லரின் கனவு இவ்வருட நத்தார் பண்டிகையின் போது நனவாகும் வாய்ப்பினை எட்டியுள்ளது. நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ள இந்தியாவுக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது அவர் அவுஸ்திரேலிய அணியின் இணைத்தலைவராக களமிறங்கவுள்ளார்.
நத்தார் பண்டிகையின் மறுநாள் கைவிசேட திருநாள் என்பதுடன் அந்த நாளில் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கப்படுவது வரலாற்று பாரம்பரியமாகும். அந்த வகையில் இவ்வருட கைவிசேட திருநாள் டெஸ்ட் போட்டி 7 வயது சிறுவனான ஆர்ச்சி சில்லருக்கான கைவிசேடமாக அமையவுள்ளது.
மேலும் இந்திய அணித்தலைவரான விராட் கோலியின் விக்கெட்டே தனது இலக்கு என ஆர்ச்சி சில்லர் தெரிவித்துள்ள நிலையில் இந்த சிறுவனுக்காக தனது விக்கெட்டை தரைவார்க்க தயாராக இருப்பதாக விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
இதய நோயாளியான ஆர்ச்சி சில்லருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அடுத்த வாரம் தீவிர அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ள நிலையில் அவரது கனவை நனவாக்கும் வகையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் மனிதநேயமிக்க இத்தீர்மானத்தினை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக விளையாடி தலைவராக உயர வேண்டும் என்பதே ஆர்ச்சி சில்லரின் கனவாக இருந்த நிலையில் அவரது கனவை நனவாக்க இவ்வருட கைவிசேட போட்டியை அவுஸ்திரேலியா அவருக்கு வழங்கியுள்ளது.
ஆர்ச்சி சில்லர் அவுஸ்திரேலிய அணி வீரர்களுடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபட்டு அவர்களினதும், உலக ரசிகர்களினதும் மனதை கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது