குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் புரிபவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகளிலிருந்து குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைச் செயல்களில் ஈடுபடுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு ஹோர்மோன் செலுத்தும் செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு போக்சோ சட்டம் 9ஆவது பிரிவின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்பதுடன் சில குற்றங்களுக்கு மரண தண்டனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் குழந்தைகள் படத்தை ஆபாசமாக வெளியிடுபவர்களுக்கும், அதை வைத்திருப்பவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக இந்தச் செயல்களில் ஈடுபடுவோர்க்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் அதேவேளை இரண்டாவது முறையாகவும் ஈடுபட்டால் ஏழாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.