“ஏக்கிய இராட்சிய” என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சி என்றே எழுதுகின்றன என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது இல்லத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த சுமந்திரன், ஏக்கிய இராட்சி என்றால் ஒற்றையாட்சி இல்லை என தனது வியாக்கியானத்தை முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
“மகாநாயக்கர்களைச் சந்தித்த ரணில் ஒற்றையாட்சி தீர்வை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாக தமிழ் ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவும் மகாநாயக்கர்களும் தமிழிலா உரையாடினார்கள். அவர்கள் சிங்களத்தில் தான் உரையாடினர். அன்போது ஏக்கிய இராட்சிய என்றே கூறியிருப்பார். ஒற்றையாட்சி என்று கூறியிருக்கமாட்டார்கள்.
மகாநாயக்கர்களுடனான சந்திப்பின்போது பௌத்தத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார் என எழுதியுள்ளார்கள். ஆம் நாம் உத்தேச அரசியல் யாப்பின்போதே அதனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்பதில் எமக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அனைத்து மதங்களும் மதிக்கப்பட்டு அவை சம அந்தஸ்தில் நோக்கப்படவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1 comment
திரு. சுமந்திரனுக்கு சிங்களம் தெரிந்திருப்பதில் வியப்பொன்றும் இல்லை. அதற்காக, தான் சிங்கள மொழியில் பாண்டித்தியம் பெற்றவர் போல் காட்டிக் கொள்ள முனைவது ஏற்புடையதல்ல.
இரு நாட்களுக்கு முன்னர் கூட, ஆளும் UNP கட்சியைச் சார்ந்த மூத்த அமைச்சரான திரு. லக்ஷ்மன் கிரியெல்ல, ‘அரசியலமைப்புத் திருத்த வழிநடத்தல் குழுவில் தானும் அங்கம் வகிப்பதாகவும், இத் திருத்தத்தினூடாக ஒற்றையாட்சி வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும்’, மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.
மேலும், ‘பௌத்த மதத்துக்கு முன்னுரிமை, ஏனைய மதங்களுக்குச் சம அந்தஸ்து’, என்ற வாதம் கூட ஏற்புடையதல்லவே? இவ் வாதத்தின்படி, பௌத்தத்துக்கு முன்னுரிமை என்றும், அது தவிர்ந்த ஏனைய மதங்களான இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதங்களுக்குச் சம அந்தஸ்து என்றுதான் பொருள் கொள்ளப்பட முடியும்.
இது குறித்து அவரது 101 வது விளக்கம்தான் என்ன?