புத்தாண்டிலும் வீதியிலிருந்து போராடும் நிலைக்கு இந்த நல்லிணக்க அரசாங்கம் எம்மை தள்ளியுள்ளது என பூநகரி இரணைதீவு மக்கள், விசனத்தையும், கவலையையும் வெளியிட்டுள்ளனர்.கடந்த எட்டு மாதங்களாக, தம்மை மீள்குடியேற அனுமதிக்கக் கோரி இரணைதீவு மக்கள், இன்றைய புத்தாண்டு தினத்திலும் போராட்டத்தை தொடர்கின்ற நிலையில் தமது ஆதங்கத்தை வெளியிட்டு உள்ளனர்.
நூற்றாண்டு காலம், பூர்வீகமாக மக்கள் வாழ்ந்து வந்த இரணைதீவில் இருந்து, யுத்தம் காரணமாக மக்கள் வெளியேற்றப்பட்டபோதும், இன்றுவரை அவர்களை அந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கான உரிமை வழங்கப்படவில்லை. கடல்சார்ந்த வளமான இரணை தீவுப் பிரதேசம் கடலுணவு உற்பத்தியில் சிறப்பாக விளங்கியிருந்தது.
இந்த நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்ட போது, இரணைதீவு மக்களும், தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். எனினும் பல்வேறு காரணங்களைக்காட்டி மக்கள் மீள்குடியேற்றம் பிற்போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி உலகத்தொழிலாளர் தினத்தில் இருந்து, தமக்கான தொழில் செய்யும் உரிமையையும், தமது நிலத்தில் வாழ்வதற்குமான உரிமையையும் வலியுறுத்தி, கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். கடந்த டிசம்பர் 25ம்திகதி கிஸ்த்துவின் பிறப்பையும் புத்தாண்டையும் தங்கள் பூர்வீக நிலமான இரணைதீவில் சென்று கொண்டாடுவதற்கு வழிவகை செய்யவேண்டுமெனவும் கோரியிருந்தனர். ஆனால் இவை எதுவுமே ஆட்சியாளர் கவனத்தில்கொள்ளவிலை்லை என்ற நிலையில் 2018ஆம் ஆண்டும் துயர் நிறைந்த ஆண்டாகவே மலர்ந்திருக்கிறது என போராட்டத்தை தொடரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.