” ஜனநாயக போராளிகள் கட்சியை, ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்தக்கட்சி தற்போது எமது கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சித் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றது என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
நற்பிட்டிமுனை சுமங்கலி திருமண மண்டபத்தில், அம்பாறை மாவட்ட , தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான, தேர்தல் தெளிவூட்டும் கலந்துரையாடலில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் ஜனநாயக போராட்ட வரலாற்றில், மிகவும் உச்சமான , பலமாக இருந்தது தமிழீழ விடுதலைப்புலிகளின் காலம் என்பதனை யாவரும் அறிந்திருப்பீர்கள் என குறிப்பிட்ட அவர், இன்றைய காலத்தின் தேவைக்கு ஏற்ப எதிர்கால சந்ததியினராகிய இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க வேண்டிய தேவையும் உள்ளது. அதனைக் கருத்தில் கொண்டே, கூட்டமைப்பு இம்முறை முன்னாள் போராளிகளையும் தேர்தலில் களமிறக்கியிருப்பதாக தெரிவித்தார்.
2009 மே.18 அன்று, ஆயுத போராட்டமானது ஒரு எல்லையை அடைந்தது. அதன்பின், தமிழ் மக்களுடைய பேரம் பேசும் பலம் வலுவிழந்து போனது. எனினும் எமது மக்கள் தங்களது பலத்தினை தேர்தல் காலங்களில் வாக்குப்பலம் மூலம் நிரூபித்து, வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதேபோல் ஆயுதப்போராட்டம் முடிவுற்றதன் பின், நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் த.தே.கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதனை தமிழ் மக்கள் நிருபிக்க தவறவில்லை.
அவற்றின் பயனாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச வேண்டும் என சம்பந்தன் தலைமையிலான குழுவினை அழைத்த அமெரிக்கா, தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டது எனவும் தமாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.