155
அரசியல் பிழைப்புக்காகவே முஸ்லிம் காங்கிரஸ் வடக்கையும் கிழக்கையும் இணைக்கப்போகிறது என்று பிரசாரம் செய்துவருகின்றனர். சமகாலத்தில் நடக்கமுடியாத ஒரு விடயத்துக்காக தமிழர்களின் அபிலாஷையில் மண்ணை அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நிந்தவூர் பிரதேச சபையில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும்வகையில், கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் ஆரிப் சம்சுதீன் தலைமையில் நிந்தவூரில் நேற்றிரவு (05) நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
வடக்கையும், கிழக்கை இணைப்பதற்கு நான் இரகசியமாக ஒப்பந்தம் செய்ததுபோல பேசிக்கொண்டு திரிகின்றனர். இவற்றையெல்லாம் செய்யவேண்டும் என்று பேசிய வந்த முன்னாள் செயலாளர் இப்போது பல்டி அடித்துக்கொண்டு இப்படி பேசித்திரிகின்றார். இந்தக் காலகட்டத்தில் நடக்காத ஒரு விடயத்தைப் பற்றி பேசுவதில் எந்த நியாயம் இருக்கிறது.
அரசியல் பிழைப்புக்காக தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச போன்றோர் வட – கிழக்கு இணைப்பு தொடர்பாக பேசலாம். அவர்களைப் போல, இவர்களையும் இதை வைத்துத்தான் அரசியல் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற நிலைக்கு அவர்களது ஆதரவுத்தளம் இருக்கிறது.
வட – கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மு.கா. பகிரங்கமாக எதையும் பேசப்போவதில்லை. அப்படியொரு விடயம் நடந்தால் நாங்கள் அதைப்பற்றிப் பேசுவோம். எங்களது அரசியலுக்காக தமிழர்களின் அபிலாஷைகளில் மண் அள்ளிப்போடவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் அமையாமல் இது எதுவும் நடக்கப்போவதில்லை. முஸ்லிம்களின் உரிமைகளை நாங்கள் ஒருபோதும் அடகுவைக்கப் போவதில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சாமானியர்களை பதவிகளில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறது. நானும் அப்படியான ஒருவன்தான். பாமர மக்களுக்கு அவர்களின் திறமைகளின் அடிப்படையில் அரசியலில் அடையாளம் கொடுத்திருக்கிறது. ஏனைய கட்சிகள்போல இது வாரிசுரிமை கட்சியல்ல. சில பாராளுமன்ற உறுப்பினர்களை அவர்களது சகோதரர்களை அரசியலுக்குள் இழுந்தவந்தபோது இதற்கு இடம்கொடுக்கவில்லை.
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருக்கு எதிராக 3 முதலமைச்சர்களிடம் இருந்து கடிதம் வந்திருக்கிறது. அவருக்கு கடிதம் வந்தால் உடனே என்னிடம்தான் ஓடிவருவார். அப்படி வந்தவரை பாதுகாத்தவன் என்றவகையில் எனக்குள் குற்ற உணர்வு இப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அவர்கள் எங்களது கட்சி சார்பாக தவிசாளராக இருந்தபோது அந்த அவப்பெயர் கட்சியை பாதிக்கக்கூடாது என்று நினைத்தோம். இப்போது அவர் எங்களை குறைசொல்லித் திரிகின்றார்.
தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக செயலாளரே கையெப்பம் இடவேண்டும். எங்களது முன்னாள் செயலாளர் ஹஸன் அலிக்கு தேசியப்பட்டியல் வழங்குவதற்கு அவருக்கு அவரே கையொப்பம் வைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் கட்சிக்கு பல சிக்கல்கள் எழுந்தன. இதற்காக செயலாளர் பதவியில் இருப்பவர் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது என்று எங்களது யாப்பை மாற்றினோம். இதன்போதுதான் எனக்கும் ஹஸன் அலிக்கும் பிரச்சினை ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேசியப்பட்டியல் பெற்ற 15 பேரில் 11 பேர் கட்சியை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். இவ்வாறு, பதவிக்காக மட்டும் கட்சியில் இருந்துவிட்டுப் போகின்றவர்கள் பற்றி நாங்கள் ஒருபோதும் அலட்டிக்கொள்வதில்லை.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற பஸ் இலங்கை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கும். பஸ்ஸில் யாரும் ஏறலாம், இறங்கலாம். சாரதியாக இருக்கின்ற நான்கூட மாறலாம். ஆனால், இந்த மக்கள் இயக்கம் வாழவேண்டும். இந்த இயக்கத்துக்கு இருக்கின்ற புனிதத்தை யாரும் பிழைப்புக்கான பாவிக்கமுடியாது. கட்சியை விட்டு வெளியேறியவர்கள் மரச்சின்னம் பற்றி கதைப்பதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள்.
அம்பாறை மாவட்டத்தில் மக்களின் காணிகளை வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள், தொல்பொருளியில் திணைக்களம் என்பன ஆக்கிரமித்துள்ள நிலையில், அவற்றின் பணிப்பாளர்களையும், நில அளவைத் திணைக்கள பணிப்பாளரையும், அரசாங்க அதிபரையும் களத்துக்கு அழைத்துச்சென்று அங்கள்ள உண்மை நிலவரங்களை நேரில் காண்பித்தோம். அதிலுள்ள நியாயங்களை எடுத்துக் கூறினோம்.
காணிப் பிரச்சினைகள் சம்பந்தமாக இப்போது அறிக்கை தயாரிக்கப்பட்டு, ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு பொறுப்பானவர் என்றவகையில் ஜனாதிபதியே இதுகுறித்து இறுதி முடிவெடுப்பார். அவர் நல்லதொரு தீர்வை தருவார் என்று நம்புகிறோம். இந்நிலையில், ஜனாதிபதியின் கட்சியில் தேர்தல் கேட்பவர்கள் காணிப் பிரச்சினைகளுக்காக எதுவுமே செய்யாமல் மெளனம் காப்பது ஏன்?
தேர்தல் பிரசாரங்களுக்கு செல்லும்போது அபிவிருத்திகளை செய்துதருமாறு மக்கள் என்னிடம் கேட்கின்றனர். தேர்தலின் பிற்பாடு அவற்றை செய்துகொடுப்பதற்கான பொருத்தங்களை கொடுத்திருக்கிறோம். மற்றக் கட்சிகள் செய்வதுபோல வீடு வீடாகச் சென்று சாமான்களையும், பணத்தையும் பங்கிடுகின்ற வேலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்யாது. காசு கொடுத்து வாக்கு கேட்கின்றன வங்குரோத்து நிலைக்கு இந்தக் கட்சி வரமுடியாது.
ஒலுவில் துறைமுகத்தினால் கடலரிப்பு ஏற்பட்டு பல ஏக்கர் காணிகள் இழக்கப்பட்டு வருகின்றன. ஒலுவில் துறைமுகத்தில் மண் மூடுகின்ற பிரச்சினை, மீனவர் பிரச்சினை போன்றவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான் செய்துகொடுக்கும். இப்போது அடையாளம் தேடிக்கொண்டிருக்கும் மயிலும், வண்ணாத்திப்பூச்சும் இதனை செய்துகொடுக்க இயலாது.
15 வருடங்களாக தேசிய காங்கிரஸின் நிந்தவூர் அமைப்பாளரான கடமையாற்றியவர் இந்தக் கூட்டத்தில் வைத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்.
இக்கூட்டத்தில் சுகதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கட்சியின் தவிசாளர் அப்துல் மஜீத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வேட்பாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
Spread the love