வாரத்துக்கொரு கேள்வி – 07.01.2018
இவ் வாரத்துக்குரிய கேள்வி சற்று வித்தியாசமாகக் கேட்கப்பட்டுள்ளது. கேள்வி இதோ-
கேள்வி – அடுத்த மாதம் நான்காந் திகதி 70வது சுதந்திர தினம். எழுபது வருடங்களாகத் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாகப் போராடி வருகின்றனர். கண்ட பலன் என்ன? இருந்தவற்றை இழந்தோமேயொழிய என்ன நன்மைகளை நாம் பெற்றுள்ளோம்? தமிழ் மக்களின் விடிவுக்காக உங்களிடம் தீர்வு இருக்கின்றதா? அப்படியானால் அது என்ன?
பதில் – உங்கள் கேள்வி விசித்திரமாக உள்ளது. போராட்டங்களினால் கண்ட பலன் ஒன்றுமில்லை என்றால் என்னிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?
எமது போராட்டத்திற்குக் காரணம் பெரும்பான்மையினர் எம்மை உதாசீனம் செய்தமையும் எமக்கெதிராக சட்டங்கள் கொண்டுவந்தமையுமே. வெள்ளையர் வன்முறையாலும் இராஜதந்திர ரீதியிலும் இந் நாட்டின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றி நூற்றியைம்பது வருடங்களுக்கு மேல் ஒரு காலனித்துவ நாடாக எம்மை ஆண்டனர். அவர்கள் தம்வசம் இருந்த அதிகாரங்கள் அனைத்தையும் தெரிந்தோ தெரியாமலோ இந் நாட்டின் பெரும்பான்மையோர் கைவசம் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். சிறுபான்மையோர் கதி என்ன என்ற கேள்விக்கு அரசியல் யாப்பின் உறுப்புரை 29 மற்றும் மேலவை (Senate) போன்றவற்றை உதாரணங்காட்டி பெரும்பான்மையோர் தமது அதிகாரங்களைத் தான்தோன்றித்தனமாகப் பாவிக்க இவை இடங்கொடுக்க மாட்டா என்று கூறிச்சென்றனர்;. ஆனால் அது நடக்கவில்லை. சுதந்திரம் கிடைத்த அடுத்த வருடமே மலைநாட்டுத் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. அதன் பின் 1956ல் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அச் சட்டம் உறுப்புரை 29க்கு முரணானது என்று நீதிமன்றம் (நீதியரசர் டி க்ரெட்சர்) தீர்ப்பு எழுத அவ் விடயத்தை மேன்மறையீடு செய்வதாக அறிவித்து நீதி மன்றங்களிலேயே பல விதங்களில் வழக்கைத் தாக்காட்டி தாமதிக்கவைத்து 1972ம் ஆண்டில் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் மக்களின் எதிர்ப்புக்கிடையில் சட்டமாக்கப்பட்ட பின்பு கிடப்பில் போடப்பட்டது. நீதியரசர் டி க்ரெட்சரின் தீர்ப்பின் படி ‘சிங்களம் மட்டும்’ எமது யாப்புச் சட்டத்திற்குப் புறம்பானது. ஆகவே ஆட்சி உரிமைகளை அவர்கள் தம் கைவசம் வைத்துக் கொண்டிருந்தமையால் பெரும்பான்மையின அரசியல் வாதிகள் தான்தோன்றித்தனமாக இதுவரையில் நடந்து வந்துள்ளார்கள். அரசியல் அதிகாரங்களை முழுமையாக அவர்கள் தம்கைவசம் வைத்திருந்து வந்ததாலேயே தமிழ் மக்களின் போராட்டங்கள் பலிக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் என்றென்றும் இந்த நிலைதான்.
கண்ட பலன் பற்றி நீங்கள் கேட்கின்றீர்கள். எதை மனதில் வைத்துக் கொண்டு கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை. பொருளாதார ரீதியாக நாங்கள் முன்னேற்றம் அடையவில்லை என்பதையே நீங்கள் குறிப்பிடுவதாகத் தெரிகின்றது. அரசியல் ரீதியான முன்னேற்றம் காணாமல் பொருளாதார முன்னேற்றம் காண்பது எமக்கெல்லாம் நன்மையைத் தரும் என்று கூறமுடியாது. 1983ம் ஆண்டின் முற்பகுதியில் கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் என்றும் காணாத முன்னேற்றம் அடைந்திருந்தார்கள். ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்தது என்ன? ஜூலைக் கலவரத்தில் அத்தனை பேரினுடைய அல்லது அவர்களில் பெரும்பான்மையினருடைய கடைகள் எரிக்கப்பட்டன. வீடுகள் தகர்க்கப்பட்டன. வர்த்தகத் தமிழ் மக்கள் கூட இருந்த இடத்திலேயே எரிக்கப்பட்டு சாம்பலாகினர். ஆகவே அதற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள் யாவும் சைபர் நிலைக்குக் கொண்டுவரப்பட்டன. எமக்கென்று அதிகாரங்களைப் பெறாமல் பொருளாதார விருத்தியில் ஈடுபட்டோமானால் என்றென்றும் நாம் பெரும்பான்மையினர் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டேயிருக்க வேண்டியேற்படும். ஆகவே நாம் முன்னேறும் போது அம் முன்னேற்றத்திற்கு எதிரான அடிகளை வாங்கிக் கொண்டேயிருக்க வேண்டி வரும். 1981ம் ஆண்டு ஜூன் முதலாந் திகதி அதிகாலையில் எமது அறிவுச் சுரங்கமே அடியோடு அழிக்கப்பட்டது. இது இன்னொருமுறை நடவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எம்மை நாம் பலப்படுத்திக்கொள்ள எமக்கென அதிகாரங்களைப் பெற வேண்டும். ஆனால் அதற்கு நாங்கள் பலமாக இருக்க வேண்டும். பலம் இல்லாது போனால் பெரும்பான்மையினர் தமது அதிகாரங்களைப் பகிர மாட்டார்கள். மலைநாட்டுத் தமிழ் மக்களின் தலைவர் சௌம்யமூர்த்தி தொண்டைமான் அவர்கள் தொழிற்சங்கப் பலத்தைக் கொண்டு தாம் இழந்த பல அதிகாரங்களை மீளப் பெற்றார். தம்பி பிரபாகரன் வன்முறையை நாடி ஈற்றில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றோம். ஆகவே அதிகாரங்களைத் திரும்பிப் பெற எமக்குப் பலம் அவசியம்;. பலம் இன்றேல் அதிகாரங்களைப் பெற முடியாது. அதிகாரம் இல்லையென்றால் நாம் பலமற்றவர்கள் ஆவோம். இது ஒரு கொடிய வட்டமாகும். நீங்கள் இதுவரையில் நாம் எதைக் கண்டோம் என்று கூறும் போது உங்கள் மனதில் விரக்தி குடி கொண்டுள்ளதாக அடையாளம் காண முடிகிறது.
முதலில் நாம் இதுவரையில் எதைக் கண்டுவிட்டோம் என்பதை ஆராய்வோம்.
பலதைக் கண்டுவிட்டோம். முதலாவது எமது இளைஞர்களின் துணிச்சல், விவேகம், ஈடுபாடு போன்றவை உலகறியச் செய்யப்பட்டுள்ளன. இரண்டாவது இலங்கையினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய தமிழ் மக்கள் உலகெல்லாம் இன்று பரந்து கிடக்கின்றார்கள். மூன்றாவது பரந்து கிடக்கும் எம்மவரில் பலர் உலகத்தில் பல துறைகளில் மேம்பட்ட பிற நாட்டவர்களை விஞ்சியவர்களாகப் பவனிவரக்கூடியதாக உள்ளது. நான்காவது அவர்களுள் பலர் பொருளாதார ரீதியாக உச்சக்கட்டத்தில் இருக்கின்றார்கள். ஐந்தாவது அவர்கள் வசிக்கும் அந்தந்த நாடுகளின் அதிகார வர்க்கத்துடன் எம்மவர் கிட்டிய உறவினைப் பேணி வருகின்றனர். ஆறாவது சர்வதேச ரீதியாக எமது இனம் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்ட கடமையுணர்வுள்ள ஒரு இனம் என அடையாளம் காணப்படுள்ளது. ஏழாவது எமது பிரச்சனைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளன. இங்கு நடக்கும் அட்டூழியங்கள் உலகறியச் செய்யப்பட்டுள்ளன. போர்க் குற்றங்கள் உலக அரங்கில் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.
நீங்கள் எதைப் பெற்றுவிட்டோம் என்று கேட்கும் போது உங்கள் அங்கலாய்ப்பு நிலை புரிகிறது. நாம் போராடாதிருந்தால் எவ்வளவோ பெற்றிருக்க முடியும் என்று கூறுவது போல்த் தெரிகிறது. நாங்கள் போராடாதிருந்தாலும் சிங்கள மக்கட் தலைவர்கள் எங்களைப் போராட வைத்திருப்பார்கள். ஏன் என்றால் அவர்கள் மனதில் சில எதிர்பார்ப்புக்கள் இருந்து வந்துள்ளன. முதலாவது வெள்ளையர் காலத்தில் தமிழ் மக்களுக்கிருந்த செல்வாக்கை அழிக்க வேண்டும் என்பது. ஏறக்குறைய அதனை அவர்கள் செய்து விட்டார்கள். நாடு பூராகவும் பரந்திருந்த எம் மக்கள் பிற நாடுகளிலும், கொழும்பிலும், அதன் சுற்றுப்புறங்களிலும், வட கிழக்கிலும், சிலர் மலையகத்திலும் வாழ்ந்து வருகின்றார்கள். திஸ்ஸமகாராமவில் ஏக்கர் ஏக்கராக நெற் காணிகள் வைத்திருந்த என் தந்தையாரின் நண்பர் பசுபதி போன்றவர்களின் வாரிசுகளுக்குத் தமது காணிகளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் இருக்கின்றது. ஒருவர் பங்களூரில் வசித்து வருவதாக அறிகின்றேன். போன காணிகள் திரும்பி வரவா போகின்றன? காணிகள் பறிபோய் விட்டன. அரச சேவைப் பதவிகள் பறிபோய் விட்டன. கடைகள் பறிபோய் விட்டன. வாணிபம் உருகுலைந்து விட்டது. உயிருடன் இருந்தவர்கள் உயிருக்கு அஞ்சி இந் நாட்டின் தெற்கத்தைய புலங்களில் இருந்து இடம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள். ஆகவே தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்களின் செல்வாக்கு மட்டுமன்றி அம் மக்களில் பலரே அழிக்கப்பட்டும் விட்டனர். இரண்டாவது சிங்கள ஆதிக்கத்தை நாடு பூராகவும் செலுத்த வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதுவும் ஆகிவிட்டது. அதனால்த்தான் நாங்கள் எமது உரிமைகளைக் கோர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. சிங்களம் மட்டும் சட்டம், சிங்களக் குடியேற்றம், பௌத்த ஊடுறுவல் போன்றவற்றால் எமது இனம் பலவீனப்படுத்தப்பட்டு சிங்கள ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கின்றது. மூன்றாவதாக வேறு நாடுகள் எவற்றிலும் சிங்கள மக்கள் கணிசமாக வாழ்ந்து வராததால் இந்த நாட்டைத் தமக்குரியதெனப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியம் அவர்களுக்கிருந்ததாகக் கூறியுள்ளார்கள். தமிழர்களுக்குப் பல நாடுகள் உண்டு. சிங்களவருக்கு இது மட்டுமே என்று கூறி தமிழர்களிடம் இருந்து வேறு பலவற்றுக்கிடையில் எங்கள் சரித்திரத்தையும் பறித்து வருகின்றார்கள். தவறான, பிழையான, பிறழ்வான சரித்திரம் உலகத்துக்குச் சொல்லப்பட்டு வருகின்றது. ஆகவே தமிழர்களுக்கு எதுவுங் கொடுக்கக் கூடாது, அவர்களைக் கூடுமான வரையில் அழிக்க வேண்டும் அல்லது துரத்தி விடவேண்டும், அவர்கள் எங்களை அண்டியே வாழ்ந்து வர வேண்டும் என்ற மனோநிலை சிங்கள அரசியல்த் தலைவர்களைப் பீடித்திருந்ததால் நாங்கள் போராடாது இருந்திருக்க முடியாது. போராட விரும்பாதவர்கள் வெளிநாடுகள் நோக்கிச் சென்றுவிட்டனர்.
முன்னர் தமிழ்மக்களின் செல்வாக்கைக் குறைக்க வேண்டும் என்று எழுந்த சிங்கள வைராக்கியம் பின்னர் அதற்கும் அப்பால் சென்றுள்ளதை நாம் அவதானிக்க வேண்டும். தமிழர்கள் எமது அரசாங்க வேலைகளை எடுத்துவிட்டார்கள், அளவுக்கதிகமாக அவர்களின் செல்வாக்கு நாட்டில் பரவியுள்ளது அதைக் குறைக்க வேண்டும் என்று தொடங்கியவர்கள் பின்னர் எமது கலை, கலாச்சார, பாரம்பரியங்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்ப்படத் தொடங்கினார்கள். இப்பொழுது சரித்திரத்தையே மாற்றி என்றென்றும் இந் நாடு எமதாகவே இருந்தது, இனிமேலும் இருக்கும் என்ற கருத்தைப் பரப்பிச் செல்கின்றார்கள்.
இந்தப் பின்னணியில்த்தான்
எனது தீர்வு என்ன என்ற கேள்வி எழுகின்றது. தீர்வுகள் வேறு, தந்திரோபாய வழிமுறைகள் வேறு. வழிமுறைகள் எம்மால் அந்தரங்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தீர்வுகள் வெளிப்படையாகக் கூறப்படலாம்.
தீர்வுகள் பற்றி ஆராய முற்படும் போது முதலாவது எமக்கிருக்கும் பலம் ஆராயப்பட வேண்டும். அவையாவன –
1. ஐக்கிய நாடுகள் பிரேரணை – இது அரசாங்கத்தை சில வழிகளில் நிர்ப்பந்திக்கின்றது. அதை எடுத்துச் செல்லல் அவசியம்.
2. எமது புலம்பெயர்ந்தோர் செல்வாக்கு – அதனை நாம் எமக்குச் சார்பாக பாவிக்க முன்வர வேண்டும்.
3. எமது புராதன பாரம்பரியமும் வரலாறும் – உலக அரங்கில் இது எம்மை அடையாளப்படுத்துகின்றது.
4. எமக்கெதிராக அரசாங்கத்தாலும் அரசாங்க படையினராலும் செயற்படுத்தப்பட்டுள்ள அநியாயங்களும் அட்டூழியங்களும் – (இவையும் எமது பலமே!)
5. சிங்கள மக்களிடையே ஏற்பட்டுள்ள மன மாற்றமும் விரக்தி நிலையும் – இதனையும் எமக்குப் பலமாகப் பாவிக்கலாம்.
6. அரசாங்கத்தின் ஆபத்தான பொருளாதார நிலை – இதன் காரணத்தால் சிங்கள மக்கட் தலைவர்கள் சில நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
7. அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மனவேதனை அடைந்திருக்கும் வல்லரசுகளின் மனோநிலை – இதை எமது பலத்திற்கு சாதகமாக மாற்றலாம்.
எமக்குப் பாதகமாக அமைந்திருப்பது முக்கியமாக எமது இயற்கைக்குணம். ஒத்து, ஒருமித்து, உடன் சேர்ந்து, ஒற்றுமையுடன் முடிவெடுக்க எம்மால் முடியாதிருக்கின்றது. தான் கூறுவதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்பதே எமது பெரும்பாலான தலைவர்களின் ஆசை. ஒவ்வொருவரும் அவ்வாறு நினைத்தால் ஏற்படுவது குழப்பமே. இந்தக் குழப்ப நிலை எம்மிடையே நீடித்து வருகின்றது. கொள்கைகளுக்கு முதனிலை கொடுத்து தனி நபர்களின் செல்வாக்கை முதனிலைப்படுத்தாது நாம் அரசியலைக் கொண்டு போனால் எம்மால் எதையுஞ் சாதிக்க முடியும். கூர்ந்து பார்த்தீர்களானால் எமக்கு நாமே எதிரிகள். குதிரைக்கு கொம்பு கொடுக்காது விட்டது கடவுள் பிழையில்லை. கொடுத்திருந்தால் அது எவரையும் விட்டுவைத்திருக்காது. எங்களுள் முரண்பாடும் சுபாவத்தை எமக்குக் கடவுள் வேண்டும் என்றே தந்திருப்பதாக நான் உணர்கின்றேன். ஐக்கியத்தடன் சேர்ந்து வாழும் முறைமையை தமிழ் மக்கள், முக்கியமாக யாழ்ப்பாண மக்கள், கற்றிருந்தால் உங்கள் கேள்வியில் தொனிக்கும் மன விரக்திக்கு இடமில்லாமலே போயிருக்கும். விட்டுக்கொடுக்க நாங்கள் முன்வருவதில்லை. எனக்கு மூக்குடைந்தாலும் பரவாயில்லை மற்றவன் அடைய விரும்புவதை அவன் அடையக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு. எனக்கு இருகண்ணும் போனால் பரவாயில்லை அவனுக்கு ஒன்றேனும் பழுதாய் போக வேண்டும் என்பது எமது இயல்பு. இந்தக் குறைபாடு நீக்கப்பட வேண்டும்.
இறைநம்பிக்கை கொண்ட எம் மக்கள் ஒன்றை மனதில் வைத்திருக்க வேண்டும். எல்லாம் இறை சித்தத்தின் படியே நடைபெறுகின்றன. பெறவேண்டிய பேறு பெறுவதற்கெமக்கிருந்;தால்த்தான் பெறுவோம். ஆனால் எமக்கென கடமைகள் உண்டு. அவற்றைத் தட்டிக்களிக்கக் கூடாது. அப்பேர்ப்பட்ட கடமையுணர்ச்சி தான் நாங்கள் எமது இழந்து போன உரிமைகளைப் பெற உதவுவன. பாண்டவர்கள் 14 ஆண்டுகள் உரிமையிழந்து இருந்தார்கள். பின்னர் தமது உரிமைகளைப் போரிட்டு வென்றார்கள். ஐந்து மடங்கு வருடங்கள் (70 வருடங்கள்) எமது உரிமைகளை இழந்து நாம் வாழ்ந்து வந்துள்ளோம். எமக்கான சுய நிர்ணய உரிமை இனியாவது எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போமாக! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத் துறையில் நாம் பணியாற்றுகின்றோமோ அந்தத் துறையில் எம்மை நாம் வலுப்பெறப் பாடுபடுவோமாக! ஆகவே தீர்வு என்று கூறும்போது எமது நிலையறிந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். ‘வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்’ என்றான் வள்ளுவன். எமது செயலின் வலிமையையும் எம் வலிமையையும் பகைவனின் வலிமையையும் எமக்குத் துணை செய்பவர்களின் வலிமையையும் நன்கு ஆராய்ந்தே எமது செயல்களைச் செய்ய வேண்டும் என்றான். நாம் எம்மைத் தயார்ப்படுத்த சில முக்கிய வேலைகளில் இறங்க வேண்டும்.
மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளின் கால அட்டவணை ஒன்றைக் கேட்டிருந்தார். அதை நாம் அனுப்பி வைத்தோமோ நான் அறியேன். அதை அனுப்பி அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்தல் அவசியம். அரசாங்கம் எம்முடன் முறுகல் நிலையை அடையக் கூடும் என்று அப் பணியை உதாசீனம் செய்தால் எம்மையே அது பாதிக்கும். நெருக்குதல் இல்லாது எந்தச் சிங்கள அரசியல் தலைவரும் தமிழ் மக்களுக்கு எதையுந் தரப்போவதில்லை. என்னுடைய ஐம்பது வருடத்திற்கு மேலான நெருங்கிய நண்பரும் தற்போது உறவினருமான கௌரவ வாசுதேவ நாணயக்கார கூட தரப்போவதில்லை. ஒரு காலத்தில் தமிழ் மக்களால் மிக நெருங்கிய நண்பராகப் போற்றப்பட்டவர் அவர். இப்பொழுது அவர் நிலைவேறு. அவரைக் குறை கூற முடியாது. இன்றைய அரசியல் நிலை அப்படி. நாங்கள் எங்கள் குறிக்கோள்களில், கொள்கைகளில் இறுக்கமாக இருந்திருந்தால் சிங்கள மக்கட் தலைவர்கள் அதற்கேற்றவாறு நடந்திருப்பர். நாம் அவர்களின் நோக்கை மையமாக வைத்து சிந்திக்கத் தொடங்கியதால்த்தான் எமது உரித்துக்களைக் கொடுக்க அவர்கள் முன்வருகின்றார்கள் இல்லை.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். பரிகாரம் தேடுபவர்கள் நாங்கள். எங்கள் பிரச்சனையை மையமாக வைக்காது பெரும்பான்மையினரின் விருப்பு வெறுப்புக்களை மையமாக வைத்து எமது காய்களை நகர்த்துவது தோல்வியையே தரும். அவர்கள் விருப்பு வெறுப்புக்கள் பிழையான அத்திவாரத்தில் கட்டப்பட்டவை என்பதை முதலில் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே அவர்களின் நோக்குப் பிழை என்பதை நாம் எடுத்துக்கூறி சர்வதேசம் அவர்களைக் கேள்வி கேட்கும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். எமது உரிமைகளை, அதிகாரங்களை பறித்தெடுத்துவிட்டு எம்முடன் பேரம் பேசுபவர்களுக்கு நாம் உண்மையை எடுத்தியம்புவதில் எந்தப் பிழையும் இல்லை. இதன் நிமித்தம் எமக்கெதிராகப் பல சதி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கக்கூடும். பதிலடிக்காக எம்மை மாண்பிழக்க வைக்கக்கூடும். என் செய்வது? அவற்றை ஏற்றே நாம் முன்னேற வேண்டும். ஏனென்றால் எமது கோரிக்கை நியாயம் பால்ப்பட்டது நீதி பால்ப்பட்டது.
ஆகவேதான் நான் அண்மையில் சிங்கள மொழி வந்த காலத்தைப் பற்றி எடுத்துரைத்தேன். என்மேல் கோபம் கொண்ட ஒரு சிங்கள வைத்திய அன்பர் எனக்குப் பதில் எழுத உடனே நூல்களைப் புரட்டிப் பார்த்திருக்கின்றார். அவரின் ஆராய்ச்சி அவருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது என நண்பர் ஒருவருக்கு கூறியுள்ளார். ‘இதுவரையில் எமது பாடப்புத்தகங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாகத்தான் நான் எமது சிங்களவரின் வரலாறு பற்றி அறிந்திருந்தேன். ஆனால் நானாக அதனை ஆராய்ச்சி செய்யப் புகுந்ததுந்தான் விக்னேஸ்வரன் கூறுவதில் அர்த்தம் உள்ளது என்று அறிந்து கொண்டேன்’ என்றாராம். அதுமட்டுமல்ல. அவர் இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தினாராம். ‘விஜயன் இலங்கைக்கு வந்தது கட்டுக்கதை என்றால் நாம் யாவரும் திராவிடர்கள் அல்லவா?’ என்றாராம். ‘அதைத்தான் பக்கச் சார்பற்ற வரலாற்று ஆசிரியர்கள் பலர் இதுவரை காலமும் எமக்கு உணர்த்தப் பார்த்திருக்கின்றார்கள். நாம் அவர்கள் கூற்றை செவிமடுக்கவில்லை போல்த் தெரிகின்றது’ என்றாராம். ஆகவே சிங்கள மக்களின் உண்மை வரலாறு வெளிப்படுத்தப்பட வேண்டும். தமிழ்ப் பௌத்தர்கள் ஐந்தாம் நூற்றாண்டு வரை வடகிழக்கில் வாழ்ந்து வந்த உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும். படிப்படியாக அவர்கள் பௌத்தத்தைக் கைவிட்டுத் திரும்பவும் சைவ மதத்தைத் தழுவியமை வெளிப்படுத்தப்பட வேண்டும். சிங்கள மொழி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலேயே மொழியாகப் பரிணமித்தது என்பதைக் கூற வேண்டும். அதற்கு முன்னர் சிங்களவர் என்ற எவரும் இருந்திருக்க முடியாது என்பதை வலியுறுத்த வேண்டும்.
அரசாங்கத் தலைவர்களுக்கும் சிங்கள சகோதர சகோதரிகளுக்கும் அவர்கள் பற்றிய உண்மையை வெளிக்கொண்டுவரும் அதே நேரம் உலகம் பூராகவும் எமது பலமானது செல்வாக்குப் பெற வேண்டும். அதாவது பொருளாதார ரீதியாக, கல்வியல் ரீதியாக, ஆன்மீக ரீதியாக எமது தகைமைகள் வெளிப்பட வேண்டும்.
சர்வதேச மட்டத்தில் எமது செல்வாக்கு மாண்புபெற வேண்டும்.
எமது குறிக்கோள்களை நாம் முழுக் கரிசனையுடன் நோக்க வேண்டும். அவற்றைச் சிங்கள சகோதர சகோதரிகளுக்கு எடுத்தியம்ப வேண்டும். அவர்களின் பிழையான, பிறழ்வான முடிவுகளை நாம் ஆட்டம் காண வைக்க வேண்டும். எம்முடன் ஒருமித்து சிந்திக்கும் சிங்கள சகோதர சகோதரிகளுடன் நல்லுறவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தியே சிங்கள மக்கட் தலைவர்களை மனம்மாறச் செய்யலாம்.
சுருங்கக் கூறின் முதலில் ஐக்கிய நாடுகள் உரிமைப் பேரவையின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றைக் கவனிக்காதுவிட்டு தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற முடியும் என்று நினைப்பது நகைப்புக்குரியது. நெருக்குதல் ஒன்றே தெற்கத்தையத் தலைவர்கள் எம்மை நாடி வரச் செய்துள்ளது. அடுத்து எம்மை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும். எம் நிலையறிந்து முன் செல்ல வேண்டும். சிங்கள மக்களை எமது எதிரிகளாக நினைக்காமல் எமது நிலையை அவர்களுக்கு எடுத்துக்கூற முன்வர வேண்டும். எமது பாரம்பரியம், வரலாறு, பண்பாடு போன்றவை நாடகம், நடனம், கட்டுரை மூலமாக சிங்கள மக்களிடையே பரவ விரவ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தரப்படும் வரலாற்று உண்மைகள் பிழையென்பதை எடுத்துக் கூற வேண்டும். எமது எதிர்பார்ப்புக்களில் இருந்து இம்மியும் கீழிறங்கி வரக்கூடாது. இது சொற்களால் மட்டுமல்லாது செயலிலும் காட்ட வேண்டும். எம்முட் சிலர் நாம் இன்னமும் அடிப்படைக் கருத்துக்களிலேயே உறைந்துள்ளோம் என்று கூறி விட்டு பெரும்பான்மையினர் முன்னிலையில் பனியாக உருகி விடுகின்றார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். உலகெங்கும் சென்று எமது நிலையின் உண்மைத் தத்துவத்தை விளங்கப்படுத்த வேண்டும். இதை நாங்கள் ஒரு மக்கள் இயக்கமாகப் பூரணப்படுத்த வேண்டும். இதுவே என் கருத்துக்கள். மேலும் சில நடவடிக்கைகள் இவை சம்பந்தமாகத் தேவைப்படும் என்பதையும் கூறிவைக்கின்றேன்.
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
1 comment
“மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளின் கால அட்டவணை ஒன்றைக் கேட்டிருந்தார். அதை நாம் அனுப்பி வைத்தோமோ நான் அறியேன். அதை அனுப்பி அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்தல் அவசியம். அரசாங்கம் எம்முடன் முறுகல் நிலையை அடையக் கூடும் என்று அப் பணியை உதாசீனம் செய்தால் எம்மையே அது பாதிக்கும். நெருக்குதல் இல்லாது எந்தச் சிங்கள அரசியல் தலைவரும் தமிழ் மக்களுக்கு எதையுந் தரப்போவதில்லை”.
எங்கள் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுங்கள் என்று உலகம் முழுவதும் 90 வருடங்களாக கேட்கின்றோம். இதற்கு ஏற்ப, அதிர்ஷ்டவசமாக, இலங்கை அரசாங்கமும், தமிழ் தேசியக் கூட்டமைபும் மற்றும் ஐநா மனித உரிமைகள் சபையும் சேர்ந்து தமிழர்களின் பல பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய தீர்மானங்களை எடுத்துள்ளார்கள்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி ஐ.நா. மனித உரிமைச் சபையின் தீர்மானங்களின் நோக்கமாகிய “இலங்கையின் முழு மக்களின் அனைத்து மனித உரிமைகளாலும் மற்றும் அடிப்படை சுதந்திரங்களாலும் வரும் இன்பத்தை முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்யுங்கள்” என்பதை அடைய வேண்டும்.
இந்த நோக்கத்தை அடைய, குற்றவியல் விசாரணைக்கு தயார் செய்யுங்கள்; உண்மையைத் தேடி, பொறுப்புக் கூறி மற்றும் நீதி வழங்குங்கள்; இழப்பீடுகளைக் கொடுங்கள், கொடூர குற்றங்களை மீண்டும் செய்யாது தடுங்கள், நல்லிணக்கத்தை உருவாக்குங்கள் மற்றும் மனித உரிமைகளை அமுல்படுத்துங்கள் என்ற ஆறு இலக்குகளை அடைய வேண்டும்.
இந்த ஒவ்வொரு இலக்கையும் அடையத் தேவையான பணிகளை பட்டியலிட்டு, பணிகளை ஆரம்பிக்கும் தேதிகள், பணிகளை நிறைவேற்றும் தேதிகள், பணிகளுக்கு பொறுப்பான நபர்கள் மற்றும் முடிந்த பணிகள் (சதவீதத்தில்) அடங்கிய ஒரு அட்டவணை உருவாக்க வேண்டும்.
நிறைவு செய்யப்படாமல் இருக்கும் பணிகளை அமுல் படுத்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகளுக்கு (உதாரணமாக இலங்கை, இந்தியா அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட்ட மேலே கூறிய கால அட்டவணையை தொடர்ச்சியாகக் காட்டி அவர்களைத் தூண்ட வேண்டும்.
இதை தமிழ் தலைவர்கள், தமிழ்க் கட்சிகள், தமிழ் அமைப்புகள் சார்ந்தவர்கள் மற்றும் ஆர்வமுள்ள தமிழர்கள் செய்ய வேண்டும்.