குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றிய மயக்கமருந்து நிபுணர் தன்னிச்சையாக வெளிநாடுக்கு சென்று விட்டார். அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சிடம் கோரியுள்ளேன் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்ற போது கருத்து தெரிவிக்கையிலையே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
மன்னார் வைத்திய சாலையில் கடமையாற்றிய மயக்க மருந்து நிபுணர் விடுப்பு அனுமதி எடுக்காது வெளிநாடு சென்று விட்டார். அவர் சென்றமையால் தற்போது மன்னார் வைத்திய சாலையில் மயக்க மருந்து நிபுணர் இல்லாத நிலை காணப்படுகின்றது.
தற்போது அங்குள்ள வைத்திய நிபுணர் ஒருவருக்கு வெளிநாட்டில் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஒருவர் கல்வி கற்பதற்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும், அவரின் கல்விக்கு குறுக்கே நிற்க கூடாது. ஆனால் அவர் வெளிநாடு சென்றால் அந்த வைத்திய நிபுணரின் இடத்திற்கு பதிலீடு இல்லாமல் போய்விடும் எனும் காரணத்தால் அவருக்கு கல்வி கற்க செல்ல அனுமதி வழங்கவில்லை.
அவர் கல்வி கற்க விரும்பின் தன்னிச்சையாக வெளியேறி செல்ல வேண்டும். அந்த வைத்திய நிபுணரின் இடத்திற்கு வேறு வைத்திய நிபுணர் கடமைக்கு வந்தால் அவருக்கு கல்வி கற்க செல்ல அனுமதிக்க முடியும். மத்திய அரசு இது தொடர்பில் உரிய கரிசனைகளை கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.