Home இலங்கை உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கு.

உயர்தர விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்த மாணவ மாணவியரின் கவனத்திற்கு.

by admin


2017ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்துவிட்ட நிலையில் வடபகுதி மாணவர்களில் குறிப்பிட்ட வகுதியினர் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று முன்நிலை வகிப்பது வாழ்த்துக்குரியது. அதே போன்று கணிதத்துறையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற தமிழ் மாணவனின் அயரா உழைப்பும் புத்திக் கூர்மையும் பாராட்டுக்குரியது. நாம் எமது பழைய நிலைக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றோம் என்பது புலனாகின்றது.

விஞ்ஞானப் பிரிவில் சித்தியடைந்தவர்களில் முதன்மை நிலைகளை வகிக்கக்கூடிய ஒரு தொகுதி மாணவர்கள் மருத்துவத்துறை, பல் வைத்தியத்துறை, மிருக வைத்தியத்துறை மற்றும் உயிரியல் விஞ்ஞானம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்று பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்ற அதே நேரம் 03 பாடங்களில் சித்தி பெற்றும் பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகாத பல நூற்றுக் கணக்கான மாணவ மாணவியரில் ஒரு சிலர் இரண்டாவது தடவை பரீட்சைக்காக தம்மைத் தயார் செய்கின்ற போதும் ஏனைய மாணவர்கள் எதிர்காலம் பற்றிய எந்த வித ஆக்க பூர்வமான வழிமுறைகளும் தெரியாத நிலையில் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றார்கள்.

இதனை நான் புதன் கிழமைகளில் மக்களைச் சந்திக்கும் போது அவதானித்து வருகின்றேன். மிகச் சொற்ப மாணவ மாணவியர் தவறான முடிவுகளுக்குக்கூட சென்று விடுவது வேதனையளிக்கின்றது.
விஞ்ஞானத் துறையில் 03 பாடங்களில் சித்தியடைந்த மாணவ மாணவியர்க்கு தாதியர் சேவை, மருந்தாளர் சேவை, கதிரியக்கவியலாளர் சேவை, கண் காது தொழில்நுட்பவியலாளர் சேவை, ஆய்வுகூடப் பரிசோதகர் சேவை, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சேவை என பல்வேறுபட்ட தொழில் வாய்ப்புக்கள் அதி கூடிய ஆரம்பச் சம்பளத்துடன் இருக்கின்ற போதும் இம் மாணவ மாணவியர் அவற்றில் ஆர்வம் காட்டாது சோம்பி இருக்கின்றமை தவிர்க்கப்படவேண்டியது. பலருக்கு இவ்வாறான இடைவெளிகள் இருப்பது பற்றித் தெரியாதுள்ளது.

அதே போன்று உயிரியல் துறையில் இரு பாடங்களில் சித்தியடைந்தவர்கள் கூட
1. குண்டசாலை விவசாயக் கல்லூரி
2. வவுனியா விவசாயக் கலலூரி
3. அம்பாறை ஹார்டி தொழில்நுட்பக் கல்லூரி

ஆகியவற்றில் இணைந்துகொண்டு விசேட தேர்ச்சிகளைப் பெறலாம். எதிர்பார்க்கப்பட்ட சம்பள அளவுத் திட்டங்களுக்கு மேலதிகமாக ஊதியங்களைப் பெறவும் தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவும் வழிவகைகள் காணப்படுகின்ற போதும் இவை பற்றிய விழிப்புணர்வுகளை எம் மாணவர்களிடையே எடுத்துச் செல்லாத காரணத்தால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இவை பற்றி அறியாது அல்லது அதிகளவு நாட்டம் காட்டாமல் இருந்து விடுகின்றார்கள்.

வர்த்தகத் துறையில் அல்லது முகாமைத்துவத் துறையில் சிறந்த பெறுபேறுகளைப் பெறுகின்ற மாணவர்கள் தமது பல்கலைக்கழக பட்டப் படிப்பினை நிறைவு செய்த பின்னர் வங்கிகளிலோ அல்லது அரச துறைகளிலோ குறிப்பிட்ட சில தொழில் முயற்சிகளில் தம்மை இணைத்துக்கொள்ள முடியும். உதாரணமாக க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் 80மூ இற்கு மேற்பட்ட புள்ளிகளை பெறுகின்ற மாணவர்கள் ஒரு மருத்துவராகவோ அல்லது பொறியியலாளராகவோ அல்லது கணக்காளராகவோ அல்லது ஆசிரியராகவோ, வங்கி ஊழியராகவோ நியமனத்தைப் பெற முடியும். ஆனால் க.பொ.த உயர்தரத்தில் 60% இற்கும் 80ம% இற்குமிடையே புள்ளிகளைப் பெறுகின்ற மாணவ மாணவியர் மேலே குறிப்பிட்ட மாணவர்களின் நேரடி அதிகாரிகளாக அவர்களின் கடமைகளை கண்காணிப்பவர்களாக அமர்ந்திருக்க வாய்ப்புண்டு. அதே போன்று 50% இற்கு மேற்பட்டதும் 60% க்குக் குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவ மாணவியரில் சிலர் அனைவருக்கும் மேலாக முதன்மைத்தர முகாமையாளர் பதவிகளை அலங்கரிப்பது பல வேளைகளில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இம் மாணவ மாணவியர் தாம் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 80மூ புள்ளிகளுக்கு மேல் பெறுகின்ற மாணவர்களே தப்பிப் பிழைப்பர், ஏனைய மாணவர்கள் வேலைவாய்ப்பை இழந்தவர்களாக மாற்றப்படுவார்கள் என்ற தவறான கருத்தை தங்கள் மனதில் இருந்து அகற்றிக் கொள்ள வேண்டும். எந்தத் துறை மீது ஆர்வம் இருக்கின்றதோ மாணவ மாணவியர் அந்தத் துறையில் தொடர்ந்து கற்பதற்கும் முன்னோக்கிப் பயணிப்பதற்கும் உயர்ந்த பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வழிவகுக்கக்கூடிய கல்வித் துறைகளை தேர்ந்தெடுக்க முன் வர வேண்டும். எமது எல்லா மாணவ மாணவியரின் எதிர்காலமும் சிறப்புற விளங்க ஆசீர்வதிக்கின்றேன்.
நன்றி.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்,
முதலமைச்சர்,
வடமாகாணம்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More