குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாணத்திற்கு வைத்தியர்கள் பற்றாக்குறையாக உள்ளது. அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா. குணசீலன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 115 ஆவது அமர்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போது கருத்து தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
வடக்கில் தொடர்ந்து வைத்தியர்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றனர். அதனை நிர்வர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதற்காக மத்திய அரசுக்கு வடக்கை பிரதிநிதித்துவ படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
அவர்கள் என்னுடன் இணைந்து எனக்கு பக்கபலமாக இருந்து வடமாகாணத்தில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
சில வேளைகளில் வடமாகாண சுகாதார அமைச்சராக குணசீலன் இருப்பதனால் அதனை செய்ய விரும்பவில்லை அந்த அமைச்சு பதவியில் வேறு நபர்கள் அமைச்சராக இருந்தால் செய்வோம் எனும் எண்ணத்தில் இருந்தால் நான் என் பதவியை இராஜினாமா செய்கிறேன். அவர்கள் தமக்கு விரும்பியவரை அமைச்சர் ஆக்கி வைத்தியர்கள் பற்றாகுறையை நீக்க நடவடிக்கை எடுக்கட்டும். என தெரிவித்தார்