தமிழகத்தில் ஊதிய உயர்வு கோரி 8 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாளை காலை முதல் பேருந்துகள் வழக்கம் போல ஓடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய தொகை கோரி, போக்குவரத்து தொழிலாளர்கள் கடந்த 8 நாட்களாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போதிய அளவிலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. பொங்கல் பண்டிகைக்கு மக்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் அவதியுறும் நிலை உள்ளதால் பணிப்புறக்கணிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகளின் அறிவுரையை ஏற்று 2.44 சதவீதத்தை இடைக்கால ஊதிய உயர்வாக பெற்று கொள்வதாக தொழிற்சங்கங்கள் ஏற்றனர். எனினும் ஜனவரி 4-ஆம் தேதி போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டால் பணிப்புறக்கணிப்பை உடனே வாபஸ் பெறுகிறோம் என தெிரிவித்தனர்.
ஆனால் இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன்போது நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் கோரியது போல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனை அடுத்து நீதிபதிகள் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதி ஈ. பத்பநாபனை நியமிக்க உத்தரவிட்டனர். மேலும் 0.13 சதவீத வித்தியாசத்தை இன்னும் ஒரு வார காலத்துக்குள் தொழிலாளர்களுடன் பேசி பத்மநாபன் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் கூறுகையில், பொதுமக்களின் துன்பத்தை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை. தொழிலாளர்கள் பிரச்னைக்காகவே தொழிற்சங்க பிரதிநிதிகள் பேசுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு செல்வது அல்லது மறுப்பது தொழிற்சங்கங்களின் விருப்பம் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுமாறும் ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பேருந்துகளை இயக்க தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தரப்பு வழக்கறிஞர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக நீடித்து வந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் இன்று இரவு முடிவுக்கு வருகிறது.