அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அணியின் முன்னாள் மருத்துவர் லாரி நாசரால் (Larry Nassar) பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டதாக நான்கு முறை ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்ற சிமோன் பைல்ஸ் கூறியுள்ளார்.
லாரி நாசரால் என் அன்பையும் மகிழ்ச்சியையும் திருட முடியாது என, ரியோ போட்டிகளின் நட்சத்திர வீராங்கனையான பைல்ஸ் கூறியுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படங்களை வைத்திருந்த நாசருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனைகளைத் தாக்கியதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
”இந்த கொடூரமான அனுபவம் என்னை வரையறுக்கவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் இதையும் தாண்டியவள்” என கூறியுள்ளார் பைல்ஸ். மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மூன்று முன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் வீராங்கனைகள் நாசர் மீது குற்றச்சாட்டியுள்ளனர். குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த படங்களைத் தனது கணினியில் வைத்திருந்த 54 வயதான நாசர் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பைல்ஸ் கூறியது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம் என நாசரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.
நாசரின் கொடூரமான செயல்களினால் விளையாட்டு வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், மனம் உடைந்துள்ளதாகவும், கோபத்தில் உள்ளதாகவும் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. டிவிட்டரில் #MeToo என ஹேஷ்டாக்கில், நாசரை பைல்ஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.
”என்னை மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சுறுசுறுப்பான பெண்ணாக பலரும் அறிந்திருப்பார்கள். பிறகு நான் உடைந்துபோனதாக உணர்ந்தேன். எனக்கு நடந்த அனுபவத்தை மற்றவர்களிடம் கூற பயந்தேன்.” என்கிறார் பைல்ஸ்.
”நான் தனித்துவமான, திறமையான, ஆர்வமுள்ள பெண்ணாக இருக்கிறேன். நான் இதை எல்லாம் தாண்டி வருவேன் என எனக்குள் உறுதி அளித்துள்ளேன்.” எனவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் அமைப்பில் 1980 முதல் 2015 வரை நாசர் பணியாற்றிவந்தார். நாசர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி 130க்கும் மேற்பட்ட பெண்கள் அவருக்கு எதிரான சிவில் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.