ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை துண்டிக்கும் சட்ட மசோதா பிரித்தானிய பாராளுமன்ற கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளைத் துண்டித்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்ற கீழவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீதான விவாதத்திற்குப் பின், நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
650 உறுப்பினர்கள் கொண்ட இந்த சபையில், மசோதாவை ஆதரித்து 324 உறுப்பினர்கள் வாக்களித்ததால் அந்த மசோதா நிறைவேறியுள்ளது. பிரெக்சிட் விவகாரத்தில் இந்த மசோதா முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இனி இந்த மசோதா பாராளுமன்ற மேல்சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு மேல் சபையில் இந்த மசோதா குறித்து விவாதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக பிரித்தானிய பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பிரித்தானியாவிலிருந்து விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகமானோhர் வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து, எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் 29ம் திகதிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான பணிகளை பிரித்தானிய பிரதமர் தெரசா மே மேற்கொண்டு வருகின்றார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை பிரித்தானியா திரும்பப்பெற வேண்டும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் டஸ்க் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.