இந்தியா சினிமா பிரதான செய்திகள்

ஆண்டாளைப் பற்றி அப்படி என்னதான் பேசினார் வைரமுத்து?

சமீப காலமாக இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதாக் கட்சி திரைப்படங்களில் வரும் அரசுக்கு எதிரான கருத்துக்களையும் மதம் பற்றிய விடயங்களையும் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி வருகிறது. சில திரைப்படங்களும் சில நடிகர்களும் இந்த சர்ச்சையில் மாட்டிக்கொண்டனர்.
இந்த நிலையில் திரையுலக கவிஞர் வைரமுத்துவும் இதில் தற்போது சிக்கிக்கொண்டுள்ளார். தமிழை ஆண்டாள் என்ற தன்னுடைய நூலில் வைரமுத்து பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளைக் குறித்து தவறாகப் பேசியுள்ளார் என்றும் அதனை உடனே நீக்குவதுடன் வைரமுத்து பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ஆளும் பாரதிய ஜனதாக் கட்சியை சேர்ந்தவர்கள் சர்ச்சையை எழுப்பி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்துவும் வருத்தம் தெரிவித்துள்ளார். எனினும் ஆண்டாளை கொச்சைப்படுத்தும் நோக்கில் தான் அவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்றும் ஆண்டாளை சிறப்பிக்கும் முகமாகவே அவ்வாறு எழுதியதாகவும் கூறிய வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆய்வு நூல் ஒன்றின் மேற் கோள் வரிகளே அது என்றும் கூறியிருந்தார்.
சர்ச்சையை ஏற்படுத்திய இக் கட்டுரை உள்ளிட்ட வைரமுத்துவின் கட்டுரைகளை வெளியிட்ட தினமணிப் பத்திரிகையும் இதற்காக வருத்தம் தெரிவித்தது. அத்துடன் வைரமுத்துவின் வருத்த ஒப்புதலையும் தினமணி பத்திரிகை வெளியிட்டது. இருந்தும் பாரதிய ஜனதா கட்சியினர் அவரை விடுவதாகத் தெரியவில்லை.
இந்த நிலையில் நேற்றைய தினம் டைம்ஸ் ஒப் இந்தியா நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில்
“ஆண்டாளை அவரது காலப் பின்னணியில், ஒரு சமூகத்தின் கண்ணோட்டத்திலும், மதத்தின் கண்ணோட்டத்திலும் வைத்துப் பார்த்திருக்கிறேன்.  ஒரு வைணவனைக் காட்டிலும் அவரது தமிழுக்குள் ஆழமாகச் சென்றுள்ளேன். அவரது தமிழை மட்டுமே நான் கொண்டாடவில்லை. பெண் உரிமையின் முதல் குரலாக அவரை நான் பார்க்கிறேன். நான் கொடுத்த மேற்கோளில் உள்ள “தேவதாசி ” எனும் சொல், தற்காலத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அஞ்சியதால், அது பற்றி விரிவாகக் குறிப்பட்டேன். பக்தர்கள் உடனடியாக இதைப் புரிந்து கொள்ள இயலாது. ஆனால், அவர்கள் சூழலை ( context ) புரிந்து கொண்டால், அவர்கள் அதை ஏற்றுக் கொள்வார்கள். நான் “தாசி” என்ற சொல்லைச் சரியான பொருளில்தான் பயன்படுத்தினேன். ஆனால் நான் அஞ்சியது உண்மையானது. சிலர் அதை ” வேசி” என்பதாகத் தவறாகப் புரிந்து கொண்டனர். நான் சுட்டிக்காட்டிய மேற்கோள், கேள்விக்கு உள்ளாக்கப்படவோ, ஏற்கப்படவோ இல்லை. நான் பயன்படுத்திய மூலக்கருத்து தவறில்லை என்றால், நான் சுட்டிய மேற்கோள் மட்டும் எப்படித் தவறாக முடியும்? ஆண்டாளைக் கிஞ்சித்தும் இழிவுப்படுத்த வேண்டும் என்பதற்காக அம்மேற்கோளை நான் பயன்படுத்தவில்லை. ஆண்டாள் எனது தாய். எனது அன்னையை எவ்வாறு என்னால் இழிவு படுத்த முடியும்? அரசியல் நிர்ப்பந்தங்களுக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ இது முழுவதும் வேண்டுமென்றே திரிக்கப்பட்டுள்ளதா என்பது எனக்குத் தெரியாது.

நான் வருத்தம் தெரிவித்து விட்டேன். இதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்? ஆண்டாளை இழிவுபடுத்த வேண்டும் என நான் விரும்பியிருந்தால், அவரது பிறந்த இடத்திற்கே சென்று நான் சொற்பொழிவு ஆற்றியிருப்பேனா? நான் கற்ற தமிழ் மூலம் அவரது இலக்கியப் பங்களிப்பு குறித்துப் பாராட்ட விரும்பினேன். உள்ளபடியே சொல்லப்போனால், ஆண்டாளது படைப்புக்களை ஒரு பகுத்தறிவாளன் இந்த அளவுக்குச் சிறப்பாகப் பாராட்டுவது இதுதான் முதல் முறையாகும். எனது பணியில் நான் உண்மையாக இருந்துள்ளேன். மேலும், நீதி என் பக்கம் உள்ளது” என்று வைரமுத்து கூறியுள்ளார்.

ஆண்டாள் பற்றி வைரமுத்து கூறிய கருத்துக்கள் தற்போது கடும் அரசியல் நிலைப்பட்டுள்ளன. தமிழகத்தின் அரசியல் சூழலில் இருந்து வைரமுத்துவுக்கு எதிர்ப்பும்  ஆதரவும் எழுந்துள்ளன. அத்துடன் இந்திய ஊடகங்களில் இந்த விவாதம் பற்றிய உரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் காரணமாக இருக்கும் தமிழை ஆண்டாள் கட்டுரையில் வைரமுத்து அப்படி என்னதான் எழுதினார்?
அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆய்வில் கூறப்பட்ட கருத்தை வைத்து வைரமுத்து கூறிய கருத்து இதுதான்.

“ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும் அவள் பிறப்பு குறித்து எவுதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலம் அறியாத ஒருத்தியை குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமானம் உள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்து விட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணை காணிக்கை ஆக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்தாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க  முடிவுக்கு சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.”

 
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link