அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் பதவியேற்றுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் பொருளாதாரம் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் பொறுப்பு உதவி செயலாளர் வசம் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பொருளாதாரம் தொடர்பான ஆலோசனை வழங்குவதும், வெளிநாடுகளுடனான பொருளாதார கொள்கைகளை தீர்மானிப்பதும் அவரது முக்கிய பணிகளாகும்.. இந்த பதவியில் இருந்த சார்லஸ் ரிக்வின், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பொறுப்பேற்றதும், ராஜினாமா செய்தார்.
இதனால் வெற்றிடமாகிய, வெளியுறவுத்துறையின் பொருளாதார விவகாரங்களுக்கான உதவி செயலாளராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த மனிஷா சிங் என்ற வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதி செய்தது. மனிஷா இப்பதவியை ஏற்கும் முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் முன்னிலையில் பதவியேற்ற மனிஷா சிங், அமெரிக்காவின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பினை மேம்படுத்துவதாக உறுதி கூறியுள்ளார்.