குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஈழ இறுதிப்போர் நடந்த கிராமங்களில் ஒன்று வட்டுவாகல். இன்னமும் போரின் வடுக்கள் ஆறாதிருக்கும் அந்தக் கிராமத்தின் ஒரு பகுதி இராணுவ அடையாளத்தோடு காணப்படுகிறது. மாபெரும் இராணுவ முகாம். அதன் பெயர் இலங்கை கடற்படை கப்பல் கோத்தபாய. மிகப் பெரும் ஆக்கிரமிப்பாய் இருக்கும் இந்த முகாமினால் இப் பிரதேசம் உறங்கிக்கிடக்கிறது.முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் அடங்கும் வட்டுவாகல் 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதி. பின்னர் அது யுத்தத்ததால் மேலும் பாதிக்கப்பட்டது. யுத்தம் என்றால் இறுதி யுத்தம். ஈழத் தமிழ் இனம் சந்தித்த மாபெரும் இனப்படுகொலை யுத்தம். பேருழியின் இரத்தக்கறை படிந்த பல்வேறு குரல்களின் சாட்சியே வட்டுவாகல்.
சுனாமியினாலும் போரினாலும் காயப்பட்ட வட்டுவாகல் பாலத்தை கடந்து செல்லும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்முறைமுறையும் நெஞ்சை அக் குரல்கள் உலுக்கும். அதன் வட்டுவாகல் பாலம் நந்திக்கடல் என்ற மாபெரும் துயரம் படிந்த கடலை கடந்து செல்லும் பாலம்.
இன அழிப்பில் கொன்று வீசப்பட்டவர்கள் மதிந்த கடல் நந்திக்கடல். இன அழிப்புச் செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை அறிந்த கடல். ஈழத் தமிழினம் இன அழிப்பு வேட்டையாடப்பட்ட, இன அழிப்புப் போரின் ஈற்றில் தோற்றுப்போனவர்களாக, யாவற்றையும் இழந்தவர்களாக ஈழச் சனம் கடந்த பாலமும் கடலும் அது.
யுத்தம் முடிந்து, நிலங்களை பிடித்து, இப்போது ஆறு வருடங்களும் கடக்கின்றன. ஏன் இந்த யுத்தம் நடந்தது? யுத்தத்தில் என்ன நடத்தது? யுத்தத்தின் பின்னர் சனங்களும் அவர்களின் நிலத்திற்கும் என்ன நடந்தது என்பதற்கும் இப்போது சாட்சியாக இருக்கிறது வட்டுவாகல்.
வட்டுவாகல் பாலத்தின் இரு முனைகளிலும் இராணுவமுகாங்கள். வட்டுவாகல் பாலத்திலிருந்து முள்ளிவாய்ககால் வரை இலங்கை கடற்படைக்காய் நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன. முள்வேலிகள் அமைக்கப்பட்டு இலங்கை கடற்படையின் பாதுகாப்பு இடப்பட்டு அந்த நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தின் முள்வேலிக்குள் பற்றை மண்டி பாழடைந்து காட்சியளிக்கிறது வட்டுவாகல் கிராமத்தின் ஒரு பகுதி. தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்தக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது ஒரு பதிவாக மாத்திரமே இருக்கிறது. இலங்கை அரச படைகளால் அபகரிக்கப்பட்ட நிலங்களை மீட்கும் அதிகாரம் வடக்கு மாகாண சபைக்கு இல்லையே?
வட்டுவாகல் சூழல் இலங்கை இராணுவத்தின் மயத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தப் பகுதியில் சுதந்திரமாக தொழிலில் ஈடுபட முடியாத நிலையே அங்கு காணப்படுகிறது. நாலா புறமும் இராணுவமுகாம் என்றால் எப்படி மீனவர்கள் தமது தொழிலை முன்னெடுப்பது? தமது வாழ்வை மேம்படுத்துவது? அந்த மக்கள் வசிக்க அவர்களின் நிலமும் அவர்களிடம் இல்லை. மறுபுறம் அவர்களின் வாழ்வை நடத்த அவர்களால் தொழிலையும் செய்ய முடியாத நிலை.
மக்களும் இல்லை, அவர்களின் தொழிலையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட புத்தர் மாத்திரம் மாபெரும் விகாரையுடன் குடியேற்றப்பட்டுள்ளார். இந்தப் பகுதியில் மக்களின் கடுமையான எதிர்ப்பை மீறி மக்களின் காணியில் கடற்படை முகாம் சூழலில் பாரிய விகாரை ஒன்றை இராணுவத்தினர் அமைத்தள்ளனர். மக்களை குடியெழுப்பவும் புத்தரை குடியமர்த்துவமா இராணுவத்தினர் நிலங்களை அபகரிக்கின்றனர்?
வட்டுவாகலின் நில அபகரிப்பு விடயத்தில் இன்னொரு அதிர்ச்சி நல்லாட்சி எனும் அரசின் காலத்தில்தான் நடந்துள்ளது. இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை நிரந்தரமாகவே பிடுங்கி எடுக்கும் கூட்டம் ஒன்று சில தினங்களின் முன்னர் முல்லைத்தீவு அரச செயலகத்தில் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி வசந்த பெரேரா கலந்து கொண்டு சனங்களின் காணிகளை கடற்படைக்கு வழங்கும்படி கேட்டிருக்கிறார்.
வட்டுவாகல் பகுதி மக்கள் தமது நிலத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று சொல்கிறார்கள். தாம் காலத் காலமாக பண்பாடாக, பாரம்பரியமாக வசித்து வந்த நிலத்தை விட்டுக்கொடுத்து தம்மை அழித்துக் கொள்ள தயாரில்லை என்றும் கூறுகிறார்கள். அந்தப் பகுதியிலிருந்து விரையில் கடற்படைமுகாமை அகற்றி தாம் இழந்த வாழ்வை மீட்டுத்தரவேண்டும் என்றும் கோருகிறார்கள்.
காணிகளை தமிழ் மக்களிடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம் என்று குறிப்பிடும் இலங்கையின் புதிய அரசு வட்டுவாகல் போன்ற இடங்களில் இராணுவம் அபகரித்திருக்கும் காணிகளை பிடுங்கி எடுத்து நிரந்தரமாக ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சிகள் உண்மையில் காணி விவகாரத்தில் இலங்கையின் புதிய அரசு எப்படி நடக்கிறது என்பதை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் என்பது நிரூபணமாகிறது.
வட்டுவாகலில் கடற்படைமுகாமை நிரந்ரமாக்க நினைக்கும் இலங்கை அரசு அந்த நிலத்தில் காலம் காலமாக வாழ்ந்து மக்களின் வாழ்வை திருப்பிக் கொடுக்க மறுக்கிறது என்பதை தெரிந்தே செய்கிறதா? அந்த மக்களின் தொழிலை, வாழ்வை, வரலாற்றை, நிம்மதியை, கனவை கெடுத்து அதில் ஒரு இராணுவமுகாமை நிரந்தரமாக்கினால் அது எதன் வெளிப்பாடு என்பதையும் அது என்ன விளைவை உருவாக்கும் என்பதையும் அரசு உணரவேண்டும்.
வட்டுவாகல் வடுவின் சின்னமாக வடுவின் குரலாக,வடுவின் சாட்சியாக மட்டுமல்ல ஆக்கிரமிப்பின் சின்னமாகவும் இருக்கிறது.
வட்டுவாகல் குறித்த குளோபலின் பதிவுகள்
1 comment
அரச பயங்கரவாதிகளிடம் இருந்து எமது நிலத்தைக் மீட்டெடுக்க பல திட்டங்களைத் தீட்டி, அமுல்படுத்த வேண்டும். தமிழ்த் தரப்பு சிந்திக்குமா? செய்யுமா? நேர்மையாகவும் மற்றும் உறுதியாகவும் செயல்பட்டால் முடியும்.