குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையது என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியின் பாறையொன்றில் பெரிய இரண்டு பாதச் சுவடுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தன. இந்தப் பாதச் சுவாடுகள் தொடர்பில் கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு இன்றைய தினம் அந்த இடத்துக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இந்தப் பாதச் சுவடுகளை புகைப்படம் எடுத்த ஆய்வாளர்கள் அதன் நீள, அகல, உயரம் பற்றிய விபரங்களை திரட்டியுள்ளனர்.
பாதச் சுவடிகள் தொடர்பில் தற்போதைக்கு ஆய்வு ரீதியான தகவல்களை வெளியிட முடியாத எனவும் மேலதிக ஆய்வின் பின்னர் அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடப்படும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இந்த பாதங்கள் அனுமான் கடவுளின் பாதச்சுவடுகள் என தெரிவித்து பிரதேச மக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து பிரதேச வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கடந்த 1ம் திகதி கனவில் அனுமார் தோன்றி தனக்கு காட்சியளித்ததாகவும், அவர் இந்த பிரதேசத்தில் உறைந்துள்ளதாக தெரிவித்ததாகவும் அதனைத்தொடர்ந்து குருக்களிடம் இந்த பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட போது பாதங்களை கண்டதாகவும் பாதங்கள் அனுமான் பாதமாக இருக்கலாம் என பிரதேச மக்கள் கருதுகின்றனர்.