இலக்கியம் இலங்கை சினிமா பிரதான செய்திகள்

பொன்மணி என்ற ஈழத் திரைப்படத்தை தந்த தர்மசேன பத்திராஜ காலமானார்!

பொன்மணி ஈழத் திரைப்படத்தை தந்த சிங்கள திரைப்பட இயக்குனர்  கலாநிதி தர்மசேன பத்திராஜ ( 28 மார்ச் 1943 – சனவரி 27, 2018) தனது 75ஆவது வயதில் நேற்று காலமானார்.  பொன்மணி என்ற ஈழத் தமிழ்த் திரைப்படம் உட்பட ஏறத்தாழ பத்து முழுநீளத் திரைப்படங்கள், ஏழு ஆவணப் படங்கள், பதினொரு தொலைக்காட்சி நாடகங்களையும் இவர் ஆக்கியுள்ளார்.
கண்டி தர்மராஜா கல்லூரியில் கல்வி பயின்ற தர்மசேனா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1967 இல் சிங்களம், மற்றும் மேற்கத்தைய கலாசாரத்தில் சிறப்பு இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் நாடகத்துறை, மற்றும் நிகழ்கலையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். அவுஸ்ரேலியா, மொனாசுப் பல்கலைக்கழகத்தில் வங்காளத் திரைப்படத்துறை குறித்த ஆய்வை மேற்கொண்டு கலாநிதி பட்டம் பெற்றார்.
தர்மசேன பத்திராஜா களனிப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியைத் திடங்கியவர், பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், றுகுணு பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் விரிவுரையாளராகவும், இலங்கை ஊடகப்பயிற்சி நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

இலங்கை சினிமாவின் பொற்காலமான 70 தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க படைப்புக்களை வழங்கிய திரைப்பட இயக்குனராகவும் ஊடக கற்கை தொடர்பான சிரேஷ்ட விரிவுரையாளருமான தர்மசேன பத்திராஜ ருஹூணு பல்கலைக்கழகம், ஸ்ரீபாலி வளாகம், கொழும்பு பல்கலைக்கழகம் போன்றவற்றின் சிரேஷ்ட விரிவுரையாளராக பணியாற்றிய அவர், 1974 இல் “அஹஸ்கவ்வ“ திரைப்படத்தை இயக்கி திரைப்படத்துறையில் நுழைந்தார்.

“எயா தென் லொக்கு லமயெக்“ பொன்மணி, பம்பரு அவித், பார திகே, சோல்தாது உன்னஹே, வாசுலீ, மதுயம் தவச, சுவரூப சகா சத்காரங் ஆகிய உன்னத திரைபடங்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அவர், “அந்துரென் எலியட்ட, வெரல, தல ரல பெல, புனராவர்த்தன, மாவதக் சொயனு பிணிச“ போன்ற விவரணப் படங்களையும் இயக்கியுள்ளதுடன், தொலைக்காட்சி நாடகங்களையும் இயக்கியுள்ளார்.

உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு ரீதியில் பெரும் புகழ்பெற்ற அவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இலங்கை சினிமா துறைக்கு ஆற்றிய பணிக்காக வாழ்நாளில் ஒரு தடவை மட்டும் வழங்கப்படும் சுவர்ணசிங்க விருதையும் பெற்றுள்ளார்.  இவர் தயாரித்த பொன்மணி தமிழ்த் திரைப்படம் இந்தியாவில் 1980 இல் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது

இலங்கை சினிமா துறைக்கு சிறப்பான பங்களிப்பு நல்கிய பிரபல திரைப்பட இயக்குனர் தர்மசேன பத்திராஜ அவர்களது கலை உலக வாழ்க்கையின் ஐம்பது ஆண்டு நிறைவையொட்டி தேசிய திரைப்பட கூட்டுத்தாபன தரங்கனீ மண்டபத்தில் இடம்பெற்றது கடந்த ஆண்டு நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டது. ”பத்திட பனஹய் தர்மசேன பத்திராஜ நிர்மாணவலோக்கனய” எனும் தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link