இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2 – பிணைமுறி மோசடி-ஆணைக்குழு அறிக்கை – வழக்குத் தொடருதல் குறித்து ஆராய்வு

பிணைமுறி ஆணைக்குழு அறிக்கையுடன் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வழக்குத் தொடருதல் மற்றும் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீட்டெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்து சட்ட மா அதிபர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் விரிவாக விளக்கினர்.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தேவையான புதிய சட்டங்களை ஆக்குதல் மற்றும் ஏற்கனவேயுள்ள கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான வரைபுகளை ஆக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு சட்டத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் இது வரையில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன், அதற்கான சட்ட வரைபுகளைத் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அதனை இன்னும் சில வாரங்களில் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளின்படி இலங்கை மத்திய வங்கியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களுக்கான புதிய திட்டமிடல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்தார்.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான விசாரணை அறிக்கையில் சில பக்கங்கள் குறைவாக உள்ளதாகக் குறிப்பிடப்படும் கருத்துக்கள் குறித்து விளக்கமளித்த அதிகாரிகள் அவ்வாறு அறிக்கையின் எவ்வித குறைபாடும் இல்லையென்றும் அதனுடன் தொடர்புடைய துணை ஆவணங்கள் பெருமளவில் இருப்பதாகவும் குறித்த வழக்கு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்வரை இரகசியத்தன்மையுடன் பாதுகாக்க வேண்டிய ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறித்த நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்தல், அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை மீட்டெடுத்தல் மற்றும் ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் தொடர்ச்சியாக வினைத்திறன்மிக்க வகையில் தாமதமின்றி நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் குறித்த துறைத் தலைவர்கள் முன்னேற்ற மீளாய்வுக்கூட்டமொன்றை வாரத்திற்கு ஒரு முறை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஹெல உருமய கட்சி, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளடங்களாக பல்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதிக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு

Jan 29, 2018 @ 03:14

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடத்தப்பட உள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இவ்வாறு ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்த உள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இன்றைய தினம் முற்பகலில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது.

பாரிய நிதி மோசடிகள், அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பிணை முறி மோசடி குறித்த அறிக்கை தொடர்பில் இன்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என ஜே.வி.பி அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தைகளை நடத்துவதனை விடவும் செயலில் ஜனாதிபதி இறங்க வேண்டுமெனவும், வெறுமனே பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்வித பயனும் கிடையாது எனவும் ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap