குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் தமிழ்த் தேசியப் பேரவையினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (30) தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு வலி வடக்குபிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் வலிவடக்கு பிரதேச உள்ளூராட்சித் தேர்தல் வேட்பாளருமான சுகிர்தன் ஊடாக தமிழரசுக் கட்சி தாக்கல் செய்திருந்தது.
ஏற்கனவே குறித்த விவகாரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் காங்கேசன்துறை காவல்துறையினருக்கும் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய குருக்கள் நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்போது ஆலயப் பிரதேசத்தில் பூசை வழிபாடே இடம் பெற்றிருந்ததாகவும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை எனவும் குருக்கள் கூறியிருந்த நிலையில் இனிவரும் காலங்களிலும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலுடன் வழக்கு முடிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்நிலையில் காவல்துறையினர்ர் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்ள வில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான றட்ணஜீவன் கூல் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபருக்கு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பாக மீண்டும் காவல்துறையினர் அது தொடர்பான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு அது தொடர்பில் அறிக்கை ஒன்றை மல்லாகம் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.
அதன் பிரகாரம் இன்றையதினம் குறித்த வழக்கானது மல்லாகம் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த்து. அதன் போது குறித்த சம்பவம் தொடர்பாக தாம் தெளிவாக விசாரணை நடாத்தியதாக தெரிவித்த காவல்துறையினர் எதிராளிகள் தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் செயற்படவில்லை என மன்றுக்கு தெளிவுபடுத்தியதுடன் அது தொடர்பான புகைப்படங்களையும் மன்றுக்கு சமர்பித்தனர். இதனை தொடர்ந்து நீதிவான் முறைப்பாட்டாளர்களிடம் இது தொடர்பான மேலதிக ஆதாரங்கள் உள்ளதா என வினாவிய போது, அவ்வாறான மேலதிக ஆதாரங்கள் இல்லை என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து நீதிவான் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்ததுடன் , வழக்கினையும் தள்ளுபடி செய்த்தார்.