பழனியப்பன் – அமிர்தவள்ளி
தமிழகத்தின் மன்னார்குடியில் இடம்பெற்ற, ஆணவக்கொலை வழக்கில் 3 பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் விடுதலை செய்யக் கூடாது என நிபந்தனை விதித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழமருதூரை சேர்ந்த பழனியப்பன் – அமிர்தவள்ளி ஆகியோர் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இதனால் கடந்த 2014 ஆம் ஆண்டு, அவர்களின் பிறந்த ஒரு மாத குழந்தையுடன் சேர்த்து, ஆணவப் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் பழனியப்பனின் சகோதரர்கள் சிவசுப்பிரமணியம், ராமகிருஷ்ணன், துரைராஜ் மற்றும் மகேந்திரன் ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு தஞ்சாவூர் முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேருக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கார்த்திகேயன் இன்று தீர்ப்பளித்தார்.
சிவசுப்பிரமணியனுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனையும் ராமகிருஷ்ணன் மற்றும் துரைராஜ் ஆகிய இருவருக்கும் தலா 30 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்தார். கொலைக்கு உடந்தையாக இருந்த மகேந்திரன் என்பவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், நன்னடத்தை, பொதுமன்னிப்பு போன்ற காரணங்களின் அடிப்படையிலும் விடுதலை செய்யக் கூடாது என, நீதிபதி கார்த்திகேயன் நிபந்தனை விதித்துள்ளார்.