Home இலங்கை ‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே

‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே

by admin

வாரத்துக்கொரு கேள்வி 05.02.2018

 

தேர்தல் காலத்தில் அரசியல் சார்பற்ற ஒரு கேள்வி இவ்வாரக் கேள்வியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பதிலில் அரசியல் புகுந்துள்ளதை அவதானிக்கலாம். கேள்வி பின்வருமாறு –

கேள்வி – நீங்கள் ஜனாதிபதியுடனும் வேறு சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் மிக அன்னியோன்யமாக சிரித்துப் பேசுவதைக் கண்டிருக்கின்றோம். ஆனால் உங்கள் அரசியல்க் கருத்துக்கள் மிகத் தீவிரமாக இருக்கின்றனவே? இது ஒரு நாடகமா?
பதில் – நான்கு விடயங்களை நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். சிங்களத்தில் பேசுவது, சிரித்துப் பேசுவது, என் அரசியல் சிந்தனைகள் தீவிரம் பெற்றுள்ளமை மற்றும் இவை முரண்படுந் தன்மையுடையதால் (நீங்கள் மக்களிடம் எதையோ பெற) நாடகம் ஆடுகின்றீர்களா என்பனவாவன அவை. அவற்றைத் தனித்தனியே பரிசீலிப்போம்.
1. சிங்களத்தில் பேசுவது
ஜனாதிபதியுடனும் சில மத்திய அமைச்சர்களுடனும் சிங்களத்தில் பேசுகின்றேன் என்றால் என் கருத்துக்களை அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியில் அவர்களுடன் பேசுவது அவசியம் என்பதால். ஆனால் பிரதம மந்திரியுடன் நான் சிங்களத்தில் பேசுவதில்லை. ஆங்கிலத்திலேயே பேசுவேன். அதே போல் எமது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுடனோ எனது மாணவர் சுமந்திரனுடனோ அல்லது எமது அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்துடனோ எதிர்க் கட்சித் தலைவர் தவராசாவுடனோ பெருமளவில் ஆங்கிலத்தில்த்தான் சம்பாஷிப்பேன். தமிழிலும் பேசுவேன். அவரவர்கள் எந்த மொழியில் இலேசாகக் கருத்துப் பரிமாற்றங்களில் ஈடுபடுவார்கள் என்பதை ஊகித்தறிந்து அந்த மொழியில் பேசுவேன். ஒரு சிங்களவருடன் சிங்களத்தில் பேசுவது பிழையென்று எனக்குப் படவில்லை. ஆங்கிலத்தில் படித்தவர்கள் தமக்குள் ஆங்கிலத்தில் பேசுவதும் பிழையென்றுபடவில்லை. ஆனால் தமிழில் தமிழன்பர்களுடன் பேசுவதை நான் விரும்புகின்றேன், வரவேற்கின்றேன். மனதின் வாகனம் மொழி. எவரெவருடன் எந்த மொழியில் பேசினால் அங்கு அன்னியோன்யம் மேலோங்குமோ அந்த மொழியை நாடுவது குற்றமாக நான் கருதவில்லை.

2. சிரித்துப் பேசுதல்
ஒரு சிங்களத் தலைவருடன் எவ்வாறு நீங்கள் சிரித்துப் பேச முடியும் என்று கேட்பது போல் இருக்கின்றது. இங்கு நான் என்னைப் பற்றிக் கூறுவது அவசியமாகின்றது. உங்களுள் பலர் வெறுப்பின் அடிப்படையிலேயே வாழ்க்கையை, வேற்று இன மக்களைப் பார்த்தவர்கள், பார்ப்பவர்கள். நான் சமய சார்பான வாழ்க்கையில் வளர்ந்தவன். முதலில் 1957ம் ஆண்டளவில் சமய ஒப்பீடு என்ற பாடத்தில் றோயல் கல்லூரியில் பலருடன் போட்டி போட்டு பரிசு பெற்றவன். அப்பொழுதிருந்தே எனது வாழ்க்கையைச் சமயங்கள் வழிநடத்தி வந்துள்ளன. பல்சமய ஞானிகளைச் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. சமயங்கள் அனைத்தும் அன்பையும், கருணையையும், புரிந்துணர்வையும், கொடையையும், சகோதரத்துவத்தையுமே வலியுறுத்துகின்றன. இதனால் நான் எவருடனும் பழகும் போது அன்புடனும் பண்புடனுந்தான் பழகுகின்றேன். நீங்கள் வன்மமுடனும் வேற்றுமையுடனும் வெறுப்புடனும் நடந்துகொள்வது போல் என்னால் நடக்க முடியாதிருக்கின்றது. மற்றவர்கள் கூறும் கருத்துக்கள், அவர்களின் செய்கைகள், கொள்கைகள் எனக்குப் பொருந்தாதனவாக இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்களை எனது எதிரிகளாக நான் பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. அவர்களின் கொள்கைகளுக்கு நான் எதிர். அவர்களின் சிந்தனைகளுக்கு நான் எதிர். ஆனாலும் அவர்கள் என் சகோதர சகோதரிகளே. கருத்து முரண்படலாம். அதற்காகக் கர்த்தாவை வெறுக்க வேண்டியதில்லை. ஒரு குழந்தையைப் பாருங்கள். சில நேரங்களில் அவர்கள் அடம்பிடிப்பார்கள். ஆனால் நாங்கள் அவர்களைத் தேற்றி கூடுமான வரை புரிய வைத்து அவர்களை சமாதானப்படுத்துகின்றோம். எனினும் சிலர் குழந்தைகளை வைவார்கள், அடிப்பார்கள். ஆனால் குழந்தைகள் மேலுள்ள அன்பு அதனால் குறைவதில்லை. சமய ஞானிகள்; என் சிந்தனையை மாற்றிவிட்டுள்ளனர். ‘கர்த்தாவை நேசி. கருத்தில் முரண்பட்டுக்கொள்’ என்கின்றது சமயங்கள். ஆகவே ஜனாதிபதியுடன் சிரித்துப் பேசும் போது எம் இருவரினதும் மனிதம் அங்கு வெளிப்படுகிறது. நாங்கள் அன்புடன் அளவளாவுவதினால் சில சமயங்களில் அவர்கள் தங்களுக்கு அரசியல் ரீதியாக இருக்கும் பிரச்சினைகளைக்கூட எங்களுடன் மனம் திறந்து பகிர்ந்து கொள்கின்றார்கள். ‘நாங்கள் – அவர்கள்’ என்ற இருமையில் சிறைபட்டு வாழ்பவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். ஆகவே உங்கள் கேள்விக்குப் பதில் கருத்து வித்தியாசங்கள் இருப்பவர்கள் கூட சிரித்துப் பேசி முடிவுகளுக்கு வரலாம் என்பதே. எங்கள் கொள்கைகளில் பற்றுறுதி இருந்தால் இது சாத்தியமாகும். எமது கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து உடையவர் எமக்கு எதிரி என்றோ துரோகி என்றோ கருதும் காலம் தற்போது மலையேறிவிட்டது. சுயநல காரணங்களுக்காக அந்தக் கருத்து மேலோங்கியிருந்தது. அதனை மக்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.

3. சிங்களவருடன் சுமுகமாகப் பேசுபவர் எவ்வாறு தீவிரமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம்?

சிங்கள மக்களுடன் சுமுகமாகப் பேசும் ஒருவர் அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியாதா?  என் சிந்தனைகள் தீவிரமானவை என்று யார் சொன்னது? எம்முடைய சில அரசியல்வாதிகள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடமிருந்து தனிப்பட்ட நன்மைகளைப் பெறத் தாம் கூறுபவையே நியாயமான கருத்துக்கள் என்று பெரும்பான்மையினரின் கருத்துக்களுக்கு ஒத்த விதத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். தாம் கூறுவது நியாயமானதென்று அவர்கள் நினைப்பதால் அவற்றிற்கு அப்பால் பேசுபவர்கள் யாவருந் தீவிரப் போக்குடையவர்கள் என்று கூறி வருகின்றார்கள். அவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள். தாம் மக்களிடம் இருந்து பெற்ற ஆணை என்ன என்பதை மறந்தே பெரும்பான்மையினருக்கு இசைவான கருத்துக்களை நியாயமான கருத்துக்கள் என்று கூறி வருகின்றார்கள். ஆனால் அதில் விசித்திரம் என்னவென்றால் மக்களிடம் மீண்டும் ஒருமுறை வாக்குக் கேட்கச் செல்கையில் தாம் முன்னர் குறிப்பிட்ட அதே ‘தீவிரமான’ கருத்துக்களையே மேலும் வலியுறுத்துகின்றார்கள். தமது புதிய சிந்தனைகளை மக்கள் முன் தேர்தல் காலங்களில் வெளிக்கொண்டு வருகின்றார்கள் இல்லை. இது ஏமாற்று வித்தை அல்லவா?

என்னைப் பொறுத்த வரையில் நான் 133000 த்துக்கு மேலான மக்கள் தந்த ஆணையை மதிப்பவன். அவர்களின் எதிர்பார்ப்புக்கு முரண்படாத வகையிலேயே எனது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றேன். எம்முள் சிலர் நடைமுறையில் பின்பற்றும் பாதைக்கு புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருப்பவை முரண்பாடுடையதாகவிருப்பதே அவர்களின் தற்போதைய பாதை நியாயமான தீர்வை நோக்கி நகரும் பாதை அல்ல என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இதை அவர்களும் உணர்ந்துள்ளார்கள். ஆகவே தமிழர்களுக்கான நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தே நான் என் பாதையில் செல்கின்றேன். நான் தீவிரவாதி அல்ல. தமது பிறழ்வான பாதையை நியாயமான பாதை என்று கூறுவோரே என்னைத் தீவிரப் போக்குடையவர் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு பெரும்பான்மையினத்தவரிடம் கூறுபவர்களும் அவர்களே. அதைக் கேட்டு பெரும்பான்மையினரும் அவ்வாறே குறிப்பிடுகின்றார்கள்.

இதை இலக்கங்கள் மூலம் விளங்கப்படுத்துகின்றேன். எமது தற்போதைய நிலைமையை பூஜ்யம் ‘0’ என்று வைத்துக் கொள்வோம். பூரண சமஷ்டி, சுயாட்சி, வட கிழக்கு இணைப்பே நாம் செல்லும் வழியின் கடைசிக் குறிக்கோளாக வைத்து அதனை ‘100’ என்று இலக்கமிடுவோம். ‘0’இல் இருந்து ‘100’ நோக்கிச் செல்லும் எதுவுமே நியாயமான கோரிக்கைகளே. அந்தக் கோரிக்கைகளை வெறும் வாய்ச் சொற்களாக முன்வைத்து அவை கிடைக்க மாட்டா என்ற எண்ணத்திலும் பெரும்பான்மை அரசியல் வாதிகளின் மனதில் இடம்பெறுவதற்காகவும் வேறு சில சில்லறைக் கோரிக்கைகளுக்கு சம்மதந் தெரிவிப்பது பிறழ்வான செயலாகும். அவற்றை நியாயமானதென்றோ நேர்மையானதென்றோ கூற முடியாது. நேர் வழியைத் தீவிரப் போக்கு என்றும் கூறமுடியாது. என் வழி தீவிரப் போக்குடையதல்ல என்று கூறுவதற்கு அத்தாட்சி அண்மைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் என் கருத்துக்களுக்குச் சார்பாகக் குறிப்பிட்ட விடயங்கள் ஆவன. ‘ஹெமின் ஹெமின்’ என்று சிங்களத்திலும் ‘Step by Step’ என்று ஆங்கிலத்திலும் கூறுவோர் உள்ளார்கள். அதாவது மெல்ல மெல்ல எமது உரித்துக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதே அவர்கள் கருத்து. நேர் வழியிலும் மெதுவாகச் செல்லலாம். ஆனால் பிறழ்வழியில் எவ்வளவு வேகமாகச் சென்றாலும் அந்த 100 இலக்கம் கொண்ட இடத்தை அடைய முடியாது. பிறழ் வழியில் சென்றால் எமது பிரச்சனைகளுந் தீரா.

அரசாங்கம் அவ்வாறான வழியில் செல்லப் பார்க்கலாம். அது அவர்களின் தேவைப்பாடு அல்லது சிந்தனை. ஆனால் எம்மவர் அதற்கு ஒப்புதல் அல்லது இசைவு கொடுத்து எமது நேர்வழிப் பயணத்தைத் தடை செய்வது துரோகமாகும். அரசாங்கம் தான் நினைத்தவாறு நடந்து கொள்வதாகவே இருக்க வேண்டுமேயொழிய நாம் சம்மதித்து எடுக்கப்பட்ட தீர்மானமாக இந்தப் பிறழ் வழி இருக்கக்கூடாது.

இடைக்கால அறிக்கைக்கான தயாரிப்பு நடவடிக்கைகளில் நாட்டின் ஒவ்வொரு கட்சிகளும் தத்தமது முன்மொழிவுகளை முன்மொழிந்திருந்த நிலையில் ஆக்க பூர்வமான எந்த முன்மொழிவும் எமது கூட்டமைப்பால் ஆணித்தரமாக முன்வைக்கப்படவில்லை. வட மாகாணசபை, தமிழ் மக்கள் பேரவை ஆகியன முன்வைத்தன. ஆனால் வடமாகாணசபை முன்மொழிந்திருந்த தீர்வுத்திட்ட முன்மொழிவைக் கூட வலியுறுத்த எமது தலைவர்களுக்குத் திராணி இருக்கவில்லை போன்றே தோன்றுகின்றது அல்லது சுய நல காரணங்களுக்காக பெரும்பான்மை அரசியல் வாதிகளுடன் முரண்பட அவர்கள் விரும்பவில்லை என்றுங் கூறலாம். அவ்வாறு நடந்து கொண்டமை எமது மக்களை ஏமாற்றும் ஒரு செயலாகும்.

யுத்தத்தின் பின்னர் எமது மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வு விடய அணுகுமுறையில் நாம் பாரிய தவறிழைத்தோமோ என்று எண்ண வேண்டியுள்ளது. இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது குறித்து எமது மக்கள் தேர்தல்களின் போது ஏற்றுக் கொண்ட அந்த அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்து எமது மக்களின் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் ஒரு பேச்சு வார்த்தையை ஏற்படுத்தாமல் அரசாங்கத்துடன் இணைந்து அரசியலமைப்பு மாற்றத்திற்குள் இனப் பிரச்சனைக்கான தீர்வையும் கொண்டு சென்றதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசுஞ் சக்தி முற்றிலும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம். இதை முன்னர் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தன செய்தார். தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு எனக் கொண்டுவந்த 13வது திருத்தச் சட்டத்தை நாடு பூராகவும் ஏற்புடையதாக்கிவிட்டார். இதனால் நாம் எதனையும் கூற வந்தால் மற்றவர் எவரும் அதைக் கேட்கவில்லையே என்று கூறி எமது தனித்துவத்தை அழித்துவிட்டார்.

அதே போல சர்வதேச சமூகங்களின் கைகளில் இருந்து எமது அரசியல்த் தீர்வும் போர்க்குற்ற விசாரணையும் விடுபட்டு இன்று இலங்கைக்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம். வடக்குக் கிழக்கில் இருந்து இராணுவம் முற்றிலுமாக வெளியேற்றப்பட வேண்டும் என்று சர்வதேச ரீதியாக கூறப்பட்டு வந்த கோரிக்கைகள் இன்று தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையாக எம்மவர்களினாலேயே மாற்றப்பட்டுள்ளது. இதன் எதிரொலி தான் வட கிழக்கில் நடைபெறும் தற்போதைய தொடர் சிங்களக் குடியேற்றங்கள்.

இன்று (04.02.2018) உதயன் பத்திரிகையில் ஒரு செய்தி வாசித்தேன். ‘வட கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மையா? வடக்கு கிழக்கை இணைப்பதும் சிரமம் – ரணில்’ என்றிருந்தது. அவர் கூறியது ‘கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே வட கிழக்கைப் பலவந்தமாக இணைக்க முடியாது’ என்பதே. ஒற்றையாட்சிக்குப் பாதகமில்லாத முறையில் தீர்வு இருக்க வேண்டும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். எம்மவர் வேறு கதைகள் கூறுகின்றார்கள். ‘ஏகிய இராஜ்ய’ என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அவர் பேசுகின்றார். அதற்கு வலிந்து பிற கருத்துக்களை எம்மவர் கொடுக்கின்றார்கள். ‘எக்சத்’ என்பதே எமது தேர்வு என்று கூற எம்மவர் பயப்படுகின்றார்கள். தமிழர்கள் கிழக்கில் பெரும்பான்மையாக இல்லை என்பது பிரதமரின் கருத்து. தமிழ்ப் பேசும் மக்களே கிழக்கில் இப்பொழுதும் பெரும்பான்மையினர் என்பதே உண்மை. வடக்கில் தமிழர்கள் தான் பெரும்பான்மையோ என்பது தமக்குத் தெரியாதென்கின்றார். அவரின் கூற்றுப்படி சிங்கள இராணுவத்தினரும் முஸ்லீம்களுஞ் சேர்ந்து கிட்டத்தட்ட தமிழ் மக்களின் தொகையை எட்டிவிட்டார்கள் போல் கருத்துப்படுகிறது அல்லது விரைவில் தமிழர்களுக்கு மிஞ்சிய தொகையை பிறர் சேர்ந்து அடைவார்கள் என்றும் கருத்துப்படலாம்.

எமது இன முரண்பாட்டுத் தீர்வு கரவான எண்ணங்களுடனான மோசடிச் சிந்தனையுள்ளவர்கள் கையில் அகப்பட்டிருப்பதால்த்தான் எமக்கு விடிவு காலமே வராத ஒரு நிலையை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். நாம் கூறும் பாதை நியாயமானதும்இ நாட்டுக்கு நன்மையைச் செய்வதும்இ முற்று முழுதாக எமது இனப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரக் கூடியதுமானதொன்று. இதைத் தீவிரக் கொள்கை என்றால் வட கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் அல்லது அவர்களுள் பெரும்பான்மையினர் தீவிர வாதிகள் என்று ஆகிவிடுகின்றனர். ஏன் என்றால் அவர்களே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு வாக்களித்தவர்கள். நான் நேர் வழியில் செல்வதை நாடகமாடுவதென்றால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கெதிராகச் செல்பவர்கள் நாடகமே ஆடவில்லை என்று பொருளா? வட கிழக்கில் 1000 பௌத்த கோயில்களைக் கட்டுவது சம்பந்தமான பிரதமரின் கட்சிக் கருத்தைப் பற்றி எமது தலைவர்கள் எதுவுமே கூறவில்லை என்பதை கவனத்திற்கு எடுங்கள்.

கடைசியாக ‘நாடகம்’ பற்றி ஒரு கருத்து. நீங்கள் உங்கள் அறிவுக்கு ஏற்ப, சூழ் நிலைக்கு ஏற்ப சில கருத்துக்களை உங்கள் மனதினுள் வைத்திருக்கின்றீர்கள். சிங்களத்தில் பேசுவது தவறு, அதுவும் சிரித்துப் பேசுவது அதனிலுந் தவறு, மத்திய அரசாங்கத்திற்கு எதிரிடையான சிந்தனைகளைக் கொண்டிருந்தால் அது தீவிரவாதம் என்று பல கருத்துக்களை நீங்கள் உங்களுக்குள் உள்ளடக்கி வைத்துள்ளீர்கள். ஆனால் அவற்றிற்கு அப்பால் உண்மை இருக்கக் கூடும் என்பதை அறியாமல் இருக்கும் உங்கள் மீது பரிதாபமே எனக்குப் பிறக்கின்றது.

நீங்கள் கூறுவதில் இன்னொரு கருத்தும் உள்ளடங்கி இருப்பதை நான் காண்கின்றேன். அதாவது நான் கொழும்பில் பிறந்து வளர்ந்தவன். என்னால் எவ்வாறு வட கிழக்கு மக்களின் பிரச்சனைக்குத் தீர்வைக் காணமுடியும் அல்லது கொள்கைகளை முன்வைக்க முடியும் என்பதே அது. உள்நாட்டு வழக்குரைஞர்களின் போதாமை காரணமாக வெளிநாட்டு வழக்குரைஞர்களை சில வழக்குகளில் தெரிபட இலங்கைக்கு எம்மவர் அழைத்து வந்தமை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு நிலபுலங்களை, உறவினர்களை வைத்திருக்கும் என்னை வேற்று மனிதன் என்று நீங்கள் கருதினால் வெளிநாட்டு வழக்குரைஞராக என்னை ஏற்றுக் கொள்ளலாமே? உள்ளுர் வழக்குரைஞர்கள் வடக்குக் கிழக்குத் தமிழ் பேசும் மக்களை அதல பாதாளத்தினுள் தள்ளப் பார்க்கின்றார்கள் என்ற காரணத்தினாலோ என்னவோ வெளிநாட்டு வழக்குரைஞர் ஒருவர் கொண்டுவரப்பட்டுள்ளதாக எடுத்துக் கொள்ளுங்களேன்! கட்சிக்காரரின் வாதத்தை உண்மையாகவும் நேர்மையாகவும் மன்றில் முன்வைப்பதே வழக்குரைஞரின் கடமை. அதைத்தான் நான் செய்து வருகின்றேன். கட்சிக் காரருக்கு வஞ்சகமின்றி அதை நான் செய்து வருகின்றேன். நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. காரணம் நான் எதனையும் எதிர்பார்த்து அரசியலுக்கு வரவில்லை. தற்போதைய எனது ஒரேயொரு எதிர்பார்ப்பு எம் மக்களின் விமோசனம். எமது வருங்கால சந்ததியினர் தன்மானத்துடனும், மகிழ்வுடனும், செழிப்புடனும், தமது பாரம்பரிய இடங்களில் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதே எனது பேரவா!

நன்றி

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More